குறிப்பேட்டிலிருந்து – அ. யேசுராசா

இண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா விலைதான் என்னவெண்டு தெரியேல்ல. கப்பல்கூலியில இருந்து தங்கியிருந்த காலம் வரைக்கும் புத்தகத்திலதான் காசு கூடும். “இண்டைக்கு ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போயிராதயுங்கோ பாருங்கோ சனிபோல வாருங்கோ”, இது ரவி அண்ணை. வந்ததுக்கு ஒண்டெண்டான்ன வேணும் எண்டு சொல்லி அ. யேசுராசாவோட குறிப்பேட்டிலிருந்து… புத்தகத்தை வாங்கி கொண்டு வந்து ஒரே மூச்சில வாசிச்சாது.

அலை வெளியீட்டில வைகாசி 2007 இல வெளிவந்திருக்கு. 2003 இல வந்த அவற்ற பதிவுகள் மாதிரிதான், இருந்தாலும் பதிவுகள் “அலை” சஞ்சிகையில வந்தது (பிறகு அலை பத்மநாப ஐயரோட முயற்சியால தொகுப்பாயும் வெளிவந்தது) ஆனா இது நீண்ட காலப்பரப்பை உள்ளடக்கிறதால அக்காலத்தாக்கங்கள் முதிர்வுகளின் வெளிப்பாடுகள் அப்பிடியே தெரியுது, 1970 இல எழுதின “ஒரு வாசகனின் அபிப்பிராயம்” தொடக்கம் 2006 இறுதியில எழுதின “மனிதனாயிருந்த மனிதன்” ஏ.ஜே பற்றிய நினைவுக்குறிப்புகள் வரைக்கும் இருக்குது. இது ஒரு விமர்சகனோட குறிப்புகளாய் இருக்கிறதால இதில இருக்கிற குறிப்புகள் பற்றி எதுவுமே நான் சொல்லுறதுக்கில்ல. ஆனா நீங்களே அவரோட என்னுரைய கீழ வாசிச்சு பாருங்கோ.


‘………..தேவையற்று போய்விட்ட மதுபானக் கடையைப்போல இப்போ கலை இலக்கியக் ‘கடை” களும் எனக்கு தேவைற்றுத் தெரிந்தன……….” – மு. தளையசிங்கம்.

மு. த. வின் ‘பக்குவம்” என்னிடமில்லாததால் இன்னும் இந்தக் கலை, இலக்கியத் துறைகளை என்னால் புறக்கணிக்க இயலவில்லை. ஆனால், சுமார் முப்பது நீண்ட ஆண்டுக் காலங்களில் பெற்ற பட்டறிவினால் எனது நினைவுக்கோப்பை கசப்பில் நிரம்பி வழிகின்றது.

எமது கலை, இலக்கிய வாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட ‘முகங்கள்”? பட்டம், பணம், பதவி – பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலைநிறுத்த முயல்கின்றனர்!

கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலமிக்க தந்திரச்செயல்களுடன் – ராஜ கம்பீரராய் பெருமைகாட்டி பவனி வருகின்றனர். அதிசய ஆடை ‘அணிந்த” அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன தூயமனக் குழந்தையாய் நம்மில் பலர் ஏனில்லை?

நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றிடையே இடைவெளியில்லாத-
இயன்றவரை நேர்மையான வாழ்வை கொண்டிருக்க வேண்டுமென்ற-

அறம்சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.

இந்நிலையில் இலட்சியத்தையும் உன்னதத்தையும் அவாவுகின்ற எழுத்தாளனை ‘சர்வாதிகாரி – கிட்லர்” எனச்சொல்லும் நோய்க்கூறான ‘பின்நவீனத்துவக் குரல்” ஒலிக்கத் தொடங்கியிருப்பதும் கவலைக்குரியதே.

மு.த. , ஏ.ஜே , போன்று முன்னுதாரணராய்க் கொள்ளத்தக்க இலக்கியக் காரரே எமக்குத் தேவை. புகழ், பணம், பதவி என்று அந்தரப்படாது தமது நம்பிக்கைகளுக்கு இயைய நேர்மையான மனிதராயே அவர்கள் வாழ்ந்தனர். அறவுணர்வு கொண்ட அத்தகையோரை காண்பது அரிதாகவே உள்ளது.

‘ஒரு வாசகனின் அபிப்பிராயம்!” எனது முதற் கட்டுரையாகும். கே. எஸ் சிவகுமாரன் அவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்ட அக்கட்டுரை, இளைஞனாயிருந்த எனது இலக்கிய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்காக அவருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

கலாநிதி. கா. கைலாசபதியின் ‘சமர்” இதழ் கட்டுரையொன்றிற்கு பதிலாக எழுதப்பட்டதே ‘குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை!”. ஆனால் இக்கட்டுரையை வெளியிட சமர் ஆசிரியரான டானியல் அன்ரனி மறுத்துவிட்டார்.

தெல்லிப்பழை கலை இலக்கிய களம் ஒழுங்கு செய்த சிறுகதை நாள் நிகழ்ச்சியில் நானும் கட்டாயம் கட்டுரை வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, ‘ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சனையும்” என்ற தலைப்பினைத்தந்ததோடு, அதற்குத் துணை செய்யக்கூடிய சிறுகதைகள் பலவற்றை படிப்பதற்கும் தந்தவர் கலாநிதி நா. சுப்பிரமணியம்.

மாணவர் – இளைஞர்களுக்கான சாளரம் இதழில் அறிமுகக் கட்டுரையாக எழுதப்பட்டதே, சி. வி. வேலுப்பிள்ளையின் ‘தேயிலைத் தோட்டத்திலே….”

இறுதியாயுள்ள மூன்று கட்டுரைகளும் என்னால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும். திசை வாரப்பத்திரிகையில் கடமையாற்றுகையில், பத்திரிகைத்தேவையும் பொருத்தமும் கருதி அவற்றை மொழிபெயர்த்தேன்.

எல்லாக்கட்டுரைகளும் ஏற்கனவே பிரசுரமாகியுள்ள போதும், தேவைப்பட்ட திருத்தங்களைப் பல கட்டுரைகளில் தற்போது செய்துள்ளேன். இக்கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்ட இதழ்களிற்கு எனது நன்றிகள்.

அ. யேசுராசா அவர்களின் முகவரி
இல 1, ஓடைக்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

குறிச்சொற்கள்: ,

பின்னூட்டங்களில்லை