கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க!

கூடுமன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள் நமது மெய்யடியார்கள். அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள தொடர்பையும் பல பல பாங்குகளில் வைத்துக்காட்டுகின்றன நமது அருள் நூல்கள். திருமுறைகளத்தனையும் இறைவனிடத்திலிருந்து மெய்யடியார்கள் அடைந்த அனுபவத்தை நமக்குக் காட்டுகின்றன. திருமுறைகளுள்ளும் திருவாசகம் ஒரு தனிச்சிற்ப்பு வாய்ந்தது. மணிவாசகப்பெருமான் ஆண்டான் அடிமைத் தொடர்பின் நெருக்கத்தைக் காட்டி அழுது அழுது எம்பெருமானிடம் அருள்பெற்று உய்ந்தவராவார்.

உலகத்திலே அறிவுடைப்பொருட்களை நோக்கும்போது இறைவன் அவற்றை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் ஆகின்றான். அவையனைத்தும் அடிமையாகின்றன. இது பொதவானவொரு உண்மையாகும். இங்கே சிறப்பாக மணிவாசகப்பெருமானுடைய ஆண்டான் அடிமைத்தொடர்பைக் கவனித்தால் இறைவனே குருமணியாக அதாவது ஞானாசாரியனாக எழுந்தருளி ஆட்கொண்டமையை யாவரும் அறிவர்.

நான் தனக் கன்பின்மை நானுந் தானுந் தாமறிவோம்
தான் என்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவர்

என்று மணிவாசகம் காட்டுகின்றது. இனித் திருவாசகத்தின் தொடக்கத்திற்கு வருவோம்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க
கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க

என்னும் மூன்றடிகளிலே தனக்குக் கிடைத்த காட்சி, ஆன்மநாதனாகிய இறைவன் ஆன்மாவை ஆட்கொள்வதற்காகச் செய்த அருட்செயல்கள் என்பவற்றைக் காட்டுகின்றார்.

கோகழி யென்றது திருப்பெருந்துறையென்று ஒரு சாராரும் திருவாடுதுறை யென்று ஒருசாராரும் வாதிப்பர். இறைவனுடைய காட்சி அடிகளுக்கு முதலில் திருவுத்தர கோசமங்கையிலேயே ஏற்பட்டதென்றும் அவ்வுத்தர கோசமங்கை வேடத்தையே திருப்பெருந்துறையின் கண்ணும் கண்டனர் என்றும், அதன்மேற் பல தலங்களையும் தரிசித்து வருகையிலே திருவாடுதுறையில் சூக்கும பஞ்சாட்சரம் உபதேசிக்கப்பட்டது என்றும் கூறுவர். எனினும் அடிகளின் வரலாற்றின் படி கோகழியென்பது திருப்பெருந்துறையென விளங்கக்கிடக்கின்றது.

கோ – பசுத்துவம், கழி – கழிய ஆட்கொண்ட குருமணியென்பதும் பொருந்துவதே. பசுத்துவம் என்பது ஆனமபோதத்தால் அறியும் அறிவு. ஆன்மபோதத்தால் அறியும் அறிவனயாவும் அழியும் இயல்பின. ஆகவே நித்தியமான இறைவனை உணர்வதற்குச் சிவபோதமே தேவை. இதனையே பதிஞானம் என்பர். பாசஞானம், பசுஞானம் என்பவை கருவிகளோடு கூடியறியும் அறிவு. பதிஞானம் என்பது அவனருளே கண்ணாகக்காணும் அறிவு. இறைவனுடைய அகண்ட வடிவம் சுட்டறிவினால் அறியப்படாதது.

அவனருளே கண்ணாகக் கணினல்லால் இப்படியன்
இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன்
என் றெழுதிக் காட்டொணாதே

என்று பாடுகிறார் அப்பர்.

திருப்பெருந்துறையிலே பசுத்தவம் கழிந்ததும் அடிகள் தன் செயலற்று எல்லாம் சிவன் செயலாக நின்றார். “ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என்னுள்ளமும் போய் நான் கெட்ட வாபாடித் தௌ்ளேணங் கொட்டாமோ” என்னும் திருவாசகமும் இதனை வலியுறுத்துகின்றது.

இனிக் குருமணி யென்பதைக் கவனிப்போம். உயிரகள் எல்லாம் பாசத் தொடர்புடையவை. பாச நீக்கம் பெற வேண்டுமாயின் குருவருள் வேண்டும். குருவின் உபதேசமே உயிர் நோய்க்கு மருந்து. குழந்தை யொன்று பிறந்தாலொழிய ஒரு தாயிடத்திலே முலைப்பால் தோன்றாது. அதுபோல ஞானாசிரியன் வந்து தோன்றினாலொழிய ஆன்மாவுக்கு ஞானம் தோன்றாது. ஐம்புலவேடரின் அயர்ந்து வளரும் உயிரைக் குருவாகி வந்து ஆட்கொள்ளுகிறான் இறைவன் என்பதை மெய் கண்டார்,

ஐம் புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்
டன்னியமின்மையில் அரன் கழல் செலுமே

என விளக்குகிறார்.

அவன் ஒரு அரசனின் மகன். வேட்டைக்குச் சென்ற போது இளமையிலேயே அவன் வேடர் கைப்பட்டுவிட்டான். வேடர்களோ ஐந்துபேர். இவன் ஒருவன். வளர்ந்தான். ஆனால் தான் வேடனேயென்ற நினைப்புடனேயே வளர்ந்தான். வேடனென்ற உணர்வோடு இருக்கிறவனுக்கு வேந்தனென்ற உணர்வைக் கொடுக்க இன்னொருவன் வரவேண்டுமே. அரசன் ஒரு நாள் கானகம் சென்று நீ என் மகன் என்று அறிவுறுத்துகின்றான். அவனும் அரசனாகிறான். இதே போலத் தான் குருவருள் திறம் கைகூடும் என்பர்.

உயிர் ஐம்புல வேடர் வயப்பட்டுச் சுழல்கிறது. உண்மையான தலைவன் யார் என்பதை அறியும் ஆராய்ச்சி ஞானம் அதற்கில்லை. எனினும் பந்தமகன்ற நிலையில் இறைவனே அருட்குருவாக வந்து ஆன்மாவின் மலமகற்றி ஆட் கொள்ளும் நிலை யேற்படுகிறது. இருளை மாற்றுகிறது இரவி மருளை மாற்றுகிறது குரு. குருமணி யென்றால் அறியாமை இருட் கண் ஒளி காட்டி நிற்கும் மாணிக்கம் என்பது பொருள் மாணிக்கக் கல் பேரொளி வாய்ந்தது.

ஈறிலாத நீ எளியை யாகி வந்து ஒளிசெய்
மானிடம் ஆக நோக்கியும்

என்று கூறுகின்றார். மானிட வடிவிலே வந்தாலும் அங்கே தெய்வ ஒளி கலந்திருந்ததற்கு “ஒளிசெய் மானிடம்” என்றார். “நோக்கியும்” என்பதிலிருந்து குருவினிடம் இருந்து பெற்ற நயனதீட்சையை விளக்குகிறார். “அங்கணர் கருணைகூர்ந்து அருட்திரு நோக்கமெய்த” என்பது கண்ணப்பர் புராணம்.

குருமணியால் அடிகளுக்குக் காட்டப்பட்ட நெறி மணி நெறி. மணி நெறியில் நின்று அவரருளிய வாசகம் மணிவாசகம். மணிவார்த்தையென்பதும் அதுவே. “வாக்குன் மணிவார்த்தைக் காக்கி” என்பது திருவாசகம். மாணிக்க வாசகர் என்பதும் இதனை உள்ளடக்கியே யாகும். ஆகவே குருவாய் இறைவனே எழுந்தருள வேண்டும் என்பதும் தீவிரதர பக்குவ நிலை கண்டு சத்திகிபாதம் அப்போ நிகழும் என்றும் மணிவாசகர் இந்த நிலையிலேயே ஆட்கொள்ளப்பட்டார் என்றும் உணரக்கிடக்கிறது. “குருவாய் வருவாய் குகனே” என்கிறார் அருணகிரியார்.

இருவினை நேரொப்பின் இன்னருட்சக்தி
குருவென வந்து குணம்பல நீக்கத்
தருமென ஞானத்தால் தன் செயலற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவனாமே

எனவே திருப் பெருந்துறையிலே குருந்த மர நீழலிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையையும் அங்கே பசுத்துவம் கழிந்து சிவத்துவம் செறியப்பட்டமையையும் குறித்துத் திரு வாசகத்தின் தொடக்கமே எம்பெருமானுக்கு வாழ்த்தாக அமைந்துள்ளது. நாமும் மணிவாசகர் காட்டிய நெறியிலே எம்பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.

இக்கட்டுரையானது பண்டிதை சைவப்புலவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாலே எழுதப்பெற்று ஒரு சஞ்சிகையில் ஏறத்தாள முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னே வௌியாகியது. எச்சஞ்சிகை என்பதும் எப்போதென்பதும் சரியாக நினைவிலில்லை.

குறிச்சொற்கள்: ,

பின்னூட்டங்களில்லை