நான் யார்?

நான் யார்? என்ற வினா உலகந்தொடங்கிய காலந்தொடங்கி இருந்து வருகின்றது. அதற்கு விடைகாணும் முயற்சியும் நடந்து வருகின்றது.

நான் யார் என்ற வினாவுக்கு எளிதில் விடைகண்டு சொன்னவன் உலகாயதன். இந்த உடம்புதான் நான் என்று தீரமானஞ் செய்தவன் அவன். நான்யார்? என்கின்ற வினாவுக்கு அரிதின் முயன்று வேத உபநிடதங்களினை ஆராய்ந்து விடைகண்டு சொன்னவன் வேதாந்தி.

காணப்பட்ட இந்த உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தாரகமாய், அதனோடு அத்துவிதப்பட்டு நின்றது எதுவோ அதுவே பிரமம். அந்தப் பிரமந்தான் நமது இருதயக் குகைக்குள் ‘நான்” ‘நான்’ என்று சொல்;லிக்கொண்டிருக்கின்றது. ஆகவே ‘நான் பிரமம்’ என்று முடிவு செய்தவன் அந்த வேதாந்தி.

உலகாயதன் வேதாந்தி ஆகிய இருவருஞ்சொன்ன விடைகளைக் கேளாமலே கேட்டுக்கொண்டு, அவர்களை பாராமலே பார்த்துக்கொண்டு அவர்கள் எதிரில் எழுந்தருளியிருக்கின்றார் மௌனதவ முனிவர் ஒருவர். பயனில் சொற் பயிலாதவர் அவர்.

எதிரிலிருந்த ஏனையவர்கள் மௌனதவமுனிவர் முகத்தை நோக்குகின்றார்கள். அவருடைய முகாரவிந்தம் மெல்ல மெல்ல இதழ் அவிழ்கின்றது.

இருவர் கூற்றும் பொய் என்கின்றது, அம்முனிவருடைய திருவாய் மலர். எங்கும் நிசப்தம் குடிகொள்ளுகின்றது. அதேசமயம் ஒருவகை ஏக்கம் தலைநிமிர்கின்றது. உலகாயதம் பொய்யாக போய்த்தொலையட்டும். வேதாந்தமுமா பொய் என்ற வினா எழுகின்றது.

தவமுனிவர் சற்றேனுந் தயங்காது தமது நாவை சற்றே பெயர்த்து ‘புரை தீர்ந்த’ என்று கூறி அமர்கின்றார்.

வேதாந்தம் ‘நான் பிரமம்’ என்பது ‘புரை தீர்ந்த பொய்’ என்றது ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்து.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

உபநிடத முனிவர்கள் சார்ந்ததன் வண்ணமாகும் ஆன்மாவை உலகாயதன் முடித்துக்காட்டிய இந்த உடம்பின் வேறாகக் காணுதற்கு வழி வகுத்திருக்கின்றார்கள். முனிவர்கள் வழியிற் செல்லுஞ் சீடன், உடம்பை பொய்ச்சார்பு என விடுத்து, மெய்சார்பை உணர்ந்து, மெய்ச்சார்பாகிய பிரமமாகத் தன்னைக் காணுகின்றான். ஒருநாள் நான் உடம்பு என்றவன், மற்றொருநாள் நான் பிரமம் என்பான். அவ்வளவில் முனிவர் உபநிடத பாடத்தை முடித்து ஆசிவழங்கி மகிழுகின்றார்.

அப்பால், சாதகனாகிய மாணவனுக்கு ‘கண்ட இவை அல்லேன் நான் காணாக் கழிபரமும் நான் அல்லேன்” என்பதாகிய சிவஞானம் சித்திக்கின்றது. மேற்காட்டிய தொடர்கள் சிவஞானசித்தியார் ஒன்பதாஞ் சூத்திரம் ஏழாஞ்செய்யுளில் முதற்கண் உள்ளவை.

கண்ட இவை – காணப்பட்ட தேகாதிப் பிரபஞ்சங்கள், காணாக் கழிபரம் – கருவி காரணங்களுக்கு எட்டாத பிரமம்.

யோகிகள் கருவி காரணங்களை விலகாமல் விலகி நின்று, அவைகளுக்கு எட்டாதவைகளை உணருகின்றார்கள். தேகச்சார்பை விலகாமல் விலகிப் பிரமத்தைச் சார்ந்து நான் பிரமம் என்று காணுவது ஒரு யோகநிலை. இந்த யோக நிலையை உற்றவர்கள், ‘நான் சரீரம்” என்பது எத்துணைப் பொய்யோ, அத்துணைப் பொய் ‘நான் பிரமம்’ என்பதும் என்றுணர்ந்து, சிவஞானம் சித்திக்கப் பெற்று, அச்சிவஞானபோதத்தால், சிவத்தின் உண்மையியல்பையும், அச்சிவத்தின் வேறாக எண்ணமுடியாத சிவமயமான தம் உண்மையியல்பையும் உணராதே உணர்ந்து, ‘நான் அது’ என்ற பேதம் தோன்றாதே இருமையின் ஒருமை உறுவார்கள்.

இஃது ஏகபாவம் எனப்படும் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்த முத்திநிலை. இந்நிலையோடு ஒப்பிடும்போது ‘நான் பிரமம்’ என்கின்ற யோகநிலை பொய். ஆனால் மெய்நிலைக்கு அது சாதகம். ஆதனால் அந்தப் பொய், புரை தீரந்த பொய்.

‘காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசு ஞானம்” என்பது சிவஞானசித்தியார். ஞானம் மூன்று வகை. அவை பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் என்பன. முறையே ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்தது. பதிஞானம்-சிவஞானம் எனப்படும். சிவஞானமாவது திருவருள். ‘அவனருளாலே அவன் தாள்வணங்கி’ என்ற திருவாசகம் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.

மூவகை ஞானங்களும் ‘நான் யார்’ என்ற வினாவை விடுவித்தற்கு உபகாரமானவைகள். பதி ஞானமாகிய சிவஞானத்தாலே தான் – நான் – என்பதன் உண்மை இயல்பு சித்திக்கும் என்பது காட்டப்பட்டது.

பசு ஞானத்தினாலே நான் பிரமம் என்ற உணர்வு பிறக்கும். அதனால் நான் என்பதன் உண்மையியல்பு சித்தியெய்தாது. இந்நிலையை முடிந்த முடிபு எனக் கொள்ளுபவர்கள் ஏகான்ம வாதிகள். இவர்கள் கொள்கை ஏகானம் வாதம்.

தாம் பிரமங் கண்டவர்போல்
தம்மைக் கண்டு ஆங்கது வே
நான் பிரமம் என்பவர் பால்
நண்ணாதே

என்பது உமாபதி சிவம் அருளிய நெஞ்சுவிடு தூது.

இந்த நான் யார்? என்கின்ற கட்டுரை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாலே எழுதப்பெற்று கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் 1964 கார்த்திகையிலே வெளியிட்ட ‘சிவசக்தி’ மலரில் பிரசுரமானது.

குறிச்சொற்கள்: ,

5 பின்னூட்டங்கள்

  1. prashathg சொல்லுகின்றார்: - reply

    mmm. u started … waiting for ur posts… bAge

  2. த. முருகானந்த் சொல்லுகின்றார்: - reply

    அருமையான விளக்கம்…….தொடரட்டும் தங்களுடைய ஆன்மீக பனி.

  3. srichandrasekarar சொல்லுகின்றார்: - reply

    ‘நான்’ யார். ?k
    பிரபஞ்சத்தின் மூலம் ஜீவனுக்குள் முதன் முதலில் பிராணன் வந்தடைகிறது. உடனே அது கத்த ஆரம்பிக்கிறது. அதாவது முதலில் சப்தம் என்ற ஒலி வருகிறது.. அதன்பிறகு சில நாட்களில் ஒளி தோன்றி கண்கள் திறந்து, ஒலி, ஒளியின் உணர்வால் ‘மனதின்’ இயக்கம் ஆரம்பிக்கிறது. இறைவன் படைப்பில் மனமானது ரம்மியமான,ஆச்சரியமான,அற்புதமான, ஓர் வஸ்து. இது இன்பத்தை மட்டுமே நேசிக்கும், இன்பத்தில் மட்டுமே,அடங்கும்,ஒடுங்கும். மற்ற எதிலும் அடங்காது.ஒடுங்காது. அந்த இன்பம்தான் என்ன என்று கீழே பார்ப்போம்.இன்பத்தில் பிறந்த இதற்கு துன்பம் என்பது பிடிக்காத ஒன்று. துன்பம் நேரிடின் வாடிப்போய்விடும். கோபம் வந்துவிடும். தன் நிலை இழந்துவிடும். என்ன செய்வது என்று அறியாமல் தவறான முடிவை எடுக்க நேரிடும். அறிவும் துணை புரியாது. நல்லவை,கெட்டவைகள் அந்த நேரத்தில் தெரியாது.எனவே இந்த துன்பங்களுக்கு எல்லாம் ‘யார்தான்’ காரணம் என்பதைப் பார்ப்போம். அதாவது ஆறறிவு படைத்த மனிதனுக்கு, ஐம்புலன்களும் உள்ளன.ஆனால் ஒரு புலன் மட்டும் மற்ற புலன்களைக் காட்டிலும் மிகவும் கூடுதல் உணர்ச்சி வசப்பட்டதாக இருக்கும். எண்ணம் முழுவதும் அதன் மீதே சதா நாட்டம் கொண்டிருக்கும். இவற்றால் ‘தனக்கு நிகர் எவரும் இலர் என்கிற ‘நான் என்ற அகங்கார மாயை தோன்றி .தன் கண்ணை மறைத்துவிடும்,அதனால் ஏற்படுகின்ற இன்பங்களே இறுதியில் துன்பங்களாக மாற்றப்படுகிறது.. இதனால்,இல்வாழ்க்கையில் தேடிவரும் பல வெற்றிவாய்ப்புகளை இழக்கநேரிடுகிறது.அதேபோன்று ஞானத்தேடுதல் உள்ளவர்களும் மிக உன்னத நிலையை அடையமுடியாமைக்கு இதுவே காரணமாயிருக்கிறது. ஆதலால், அவை தோன்றும் இடங்களில் எல்லாம் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ள புதிய,புதிய எண்ணங்களை தோற்றுவித்து, அதன் மூலம் கிடைக்கும் அற்ப இன்பங்களை அனுபவித்து,அனுபவித்து இறுதியில் சலிப்படைந்து விடும். அப்பொழுது ஏற்படும் மௌனத்தில், எல்லா இன்பங்களும் முடிவில் துன்பமே என்று உணர்ந்து தெளியும். அதிலிருந்து விடுதலை பெற நினைக்கும். அப்பொழுது, ‘மனம் தனித்து நின்று தனிப் பெரும் அறிவாக’ அவதாரம் எடுக்கும். அப்பொழுதுதான், அகங்காரமற்ற ‘நான்’ என்பது பிரகாசிக்க ஆரம்பிக்கும்’ பிற்பாடு நான் யார் எதற்காக வந்தோம் என்ற வினா எழும்பி, உண்ணுதல்,உறங்குதல்,உராய்தல் ஆகிய சலிப்படையகூடிய இன்பங்கள் மட்டுமே ‘நான்’ இல்லை. என உணரப்பெறும். அப்பொழுது கண்டவற்றில் நாட்டம் கொண்டிருந்த மனம் அவற்றை ஆராயும். புத்தி அவற்றை நன்றாக ஆழமாக பதியவைத்துக்கொள்ளும். அதன்பின் சித்தம் தெளிந்து இதுவரை எல்லாவற்றிலும் மறைந்திருந்த நான் என்ற அகங்கார மாயை ஒழிந்துவிடும். அப்பொழுது அங்கே அகங்காரமற்ற மாயையாகிய நான் இறைவனிடத்து தனித்து நிற்கும். அதன்பின் சலிப்படையாத இன்பம் எது என்று நாட முற்படும். எல்லாவற்றையும்விட மேலான சலிப்படையாத ‘பேரின்பமே ‘நான்’ என்று உணர்ந்து, பேரின்பத்தில் மட்டுமே மனம் அடங்கும்,ஒடுங்கும் என்ற ஞானோதயம் ஏற்படும். அதன்பின் சலிப்படையாத பேரின்ப அனுபவத்தின் மீது ஆவல் கொள்ளும். இந்த ஆவலே பக்தி. அதில் நுழைவதே யோகம். பேரின்பம் எனப்படுவது,. ,பரம அணுக்கள், ஜீவ அணுக்கள் ஆகிய பரமாத்மா, ஜீவாத்மா இரண்டு [உணர்வுகளும் ஒன்றிணையும் தருவாயில் மனதிற்கு அப்பொழுது ஏற்படுகின்ற மகிழ்வே பேரின்பம், ][வெட்டவெளி,பிரபஞ்சம்,அம்பலம்,பரம்பொருள் என்றெல்லாம் சொல்லக்கூடிய வற்றில் உள்ள பரம அணுக்கள்,பிராணன் வழியே சென்று ஜீவனாகிய உடலில் உள்ள ஜீவ அணுக்களோடு ஒன்றிணைப்பதை அறிந்து அவற்றில் சதா காலமும் அதில் லயிப்பதே பேரின்ப அனுபவத்தின் யோகமாகும். இதையே சத்து,சித்து ஆனந்தம்,பரமானந்தம்,நித்தியானந்தம்.என்பவைகளாகும். மௌனதவத்தில் மனதை மூலாதாரத்தில் நிறுத்தி தியானித்தால், மனம் புத்தியில் ஒடுங்கி, புத்தி சித்தத்தில் ஒடுங்கி, சித்தம் அகங்காரத்தில் ஒடுங்கி, அகங்காரம் மௌனத்தில் ஒடுங்கிவிடும். மனம் அடங்ககூடிய ஒரே இடமான பேரின்பத்தில் அடங்கிய மனம் ஈசனாகி இறுதியில் அதன் உறைவிடமாகிவிடும்.n ]
    இறையருள் ஸ்ரீசந்திரசேகரர்.
    srichandrasekarar@yahoo.com

  4. Vaidheeswaran சொல்லுகின்றார்: - reply

    இந்த உலகில் மிக சிலரே “நான்” என்ற அனுபவத்தை அடைந்ததாக உணருகிறேன், என்னை பொறுத்தவரை “நான்” என்பவன் அவன் நினைப்பதை செய்பவன், யாரையும் எதிர்நோக்காதவன், யாருக்கும் கடமைப்படாதவன், யாரையும் நேசிப்பவன் இங்க திருத்தும் செய்கிறேன் யாவற்றையும் நேசிப்பவன். அவனுடைய உறைவிடம் இந்த உலகம்… அவனுக்கு உள்ள சொந்தம் இந்த பூமி தாய்… அவன் அவளை நேசிக்கிறான். அவளை புரிந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அகங்காரம் கொண்ட உலகானது அந்த அனுபவத்தை அவனுக்கு தர மறுக்கிறது, அதன் பக்கத்திலும் நியாயங்கள் இருக்கதான் செய்கிறது என்ன செய்ய ?
    http://vaidheeswaran-rightclick.blogspot.in/2013/05/blog-post.html

  5. Chandrasekaran சொல்லுகின்றார்: - reply

    நான் யார்’
    மனம் என்பதும் நான் இல்லை.
    அறிவு என்பதும் நான் இல்லை.
    உடல் என்பதும் நான் இல்லை.
    இவற்றின் பரிணாம அகங்கார
    தோற்றமும ‘நான்’ இல்லை.
    ஆதியும் அந்தமும் இல்லா விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூப காட்சி தரும் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவனும் ‘நான்’ அதில் சிறுஞ்ஜோதியாய் உன்னுள் ஆள்பவனும் ‘நான்’
    ……………இறையருள்………..