Posts Tagged "ஈழம்"

பெயல் மணக்கும் பொழுது – ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.

மிக அண்மையில் “பெயல் மணக்கும் பொழுது” என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது.




தொகுத்தலின் நிமித்தம்… என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும் தருகின்றது.

அதில் அவர்…

மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை எனத்தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது.

இவரின் பெண்கவிஞர்களின் கவிதைக்கான தேடல் இவர் குறிப்பிடும் கவிதைத்தொகுப்புகளிலிருந்தே தெரியவருகின்றது.

1986 சொல்லாத சேதிகள் தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் பயணம், மறையாத மறுபாதி, உயிர்வெளி, வெளிப்படுத்தல், எழுதாத என் கவிதை என்று கடந்த இருபது ஆண்டு காலமாக விரிவடைந்துள்ளது. சிவரமணி கவிதைகள் தொகுக்கப்பட்ட பின்னர், செல்வி-சிவரமணி கவிதைகள், ஒளவையின் எல்லைகடத்தல், ஆழியாளின் உரக்கப்பேசு, துவிதம், சுல்பிகாவின் உயிர்த்திருத்தல், மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள், பெண்ணியாவின் என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை, நளாயினி தாமரைச்செல்வனின் நங்கூரம், உயிர்த் தீ, லுணுகலை ஹஸீனா புஹாரின் மண்ணிழந்த வேர்கள், மேஜர் பாரதியின் காதோடு சொல்லிவிடு அகிய தொகுதிகள் என் பார்வைக்கு கிட்டின. எனக்கு இன்னும் கிட்டாத பாலரஞ்சினி சர்மாவின் மனசின் பிடிக்குள், கோசல்யா கவிதைகள், அம்புலியின் மீண்டும் துளிர்க்கும் ஒரு வசந்தம், அனாரின் கவிதைத்தொகுதி என்று பட்டியல் நீள்கின்றது.

மேலும் இவர் தொகுப்பு தொடர்பாய் சொல்லும்போது.

இத்தொகுப்பில் இடம்பெறும் சிலரை நான் நேரில் அறிவேன். பலரை நான் அறிந்ததாக உணர்கின்றேன். இன்னும் பலரை சந்திக்க ஆவலாக உள்ளேன். இவர்களுள் ஒவ்வொருவரது ஆளுமை, சிந்தனை அரசியல் தெரிவு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தொகுப்பில் அனைவரும் ஒருசேர இருப்பது குறித்து அக்கவிஞர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். வௌ;வேறு அரசியல் சார்பும் சிந்தனையும் கொண்டவர்கள் என்ற வகையில் அது நியாயமானதும் கூட. ஆனால்
தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைத் தொகுதி என்ற வகையில் அனைத்து தரப்பையும் இணைப்பது எனக்கு அவசியமாகப்பட்டது.

இத்தொகுப்பிலே, 92 பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. வழமையாக எந்த ஒரு கவிதைத்தொகுப்பையும் வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் இந்த கவிதைத்தொகுப்பை வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள். கவிதைக்கு கவிதை மாறுபடும் அரசியல் சார்பு மற்றும் சிந்தனைகள் எங்கள் (வாசகர்களின்) அரசியல் சார்புகள் மற்றும் சிந்தனைகளோடு மாறிமாறி முரண்படுகிறது, சார்பாகின்றது. வாசித்து முடியும் போது மீண்டும் பூச்சியப்புள்ளியிலேயே கொண்டு வந்து நிறுத்துகின்றது.

ஆதலினால் தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கு இந்த தொகுதியெங்கும் நர்த்தனமாடும் அரசியல் சார்பும் சிந்தனையும் புதிதாகையால் அல்லது கேள்வி ஞானமேயாகையால் இத்தொகுப்பு அவர்கள் மீது எந்தவித சிந்தனா மாற்றத்தையும் அல்லது எண்ணத்தையும் கொண்டுவரும் என எண்ண முடியாது.

இனி தொகுக்கப்பெற்றிருக்கும் கவிதைகளிலிருந்து சில வரிகள்

அ. காந்தாவின் எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த

…..எந்த மகனுக்காய்
என் கால்களை நகர்த்த?
நேற்று விதையுண்டு போன
மூத்தவனுக்கா? – இல்லை
இப்போதுதான்
விதைக்கப்பட்ட என்
இளைய குஞ்சுக்கா?…

சிவரமணியின் யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

….நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….

நளாயினி தாமரைச்செல்வனின் புதிதாய் பிறந்து விட்டு போகின்றேன்.

….போதும்
நீ என் மீது வைத்த காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்

போனால் போகிறது
நான் உன் மீது
கொண்ட காதலை புதைத்து
மீண்டும் புதிதாய்
பிறந்து விட்டு போகின்றேன்.

கப்டன் வானதியின் எழுதாத கவிதை….

…..சீறும்
துப்பாக்கியின் பின்னால்
என்உடல்
சின்னாபின்னப்பட்டு போகலாம்.
ஆனால்
என் உணர்வுகள் சிதையாது
உங்களை சிந்திக்க வைக்கும்
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்……

நாதினியின் எழுதாத உன் கவிதை

“எழுதாத என் கவியை
எழுதங்களேன்”
எனும் என் கவிதை
எழுதப்பட்டு விட்டது

உப்பு வெளியில்
உருகிய உங்கள்
உடல்கள் மீது
எமது வீரர்கள்
எழுதாத உன் கவியை
எழுதி விட்டார்கள்……

நாமகளின் யதார்த்தம்

….அம்புலன்ஸ் வந்து
எல்லாவற்றையும்
அள்ளிக்கொண்டு போனது
எஞ்சியதாய்
கொஞ்சமாய் அவனது இரத்தம்,
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்
ஷெல் துண்டுகள்…
அவ்வளவுதான்……

ஜெ. நிரோசாவின் இயேசுவுக்கு ஒரு மடல்

…..நான் சொல்லுவது என்னவென்றால்
நீர் மீண்டும் இவ்வுலகம் வரவேண்டும்
இன்னொரு தடவை
இவ்வுலகை மீட்க வேண்டும்….

….ஆ…..
முக்கியமானதை மறந்துவிட்டேன்
வரும்போது
அடையாள அட்டையை
மறந்து விடாதீர்..

பாமதியின் யுத்தத்தால் தொலைந்தோம்

….ஆயிரக்கண்க்கான
இந்த சமாதிகளிடமா
எமது விடுதலையை கொண்டாட முடியும்.

விட்டுவையுங்கள்
யாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள்
யுத்தத்தால் அழிந்து போன எனது மண்ணைப்பற்றி
எழுத குருதி நிரம்பிய பேனாவையும்
மனித நேயத்தையும்
உணர்த்த விட்டுவையுங்கள்.

மேஜர் பாரதியின் அன்பான அம்மா

…..அன்பான அம்மாவே!
நான் உன்னை
அளவு கடந்து நேசிக்கின்றேன்
அதனிலும் பார்க்க
நான் ஓடி விளையாடிய
என் வீட்டு முற்றத்தை,
நான் கால் பதித்த
ஒற்றையடிப் பாதைகளை,
செம்பாட்டு மண்படிந்த
என் தெருக்களை,
சணல் பூத்து குலுங்கும்
என் தேசத்தை,
தோட்டவெளிகளை………

சித்திரலேகா மௌனகுருவினதும், வ. கீதாவினதும் பின்னுரைகள் கவிதைகள் தொடர்பாய் மேலும் விளக்கமாய் சொல்கிறது.

வெளியீடு : மாற்று.

25 வைகாசி, 2008

ஈழத்து நூல்கள்

இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

சரசோதி மாலை – சோதிட நூல்
செகராசசேகரமாலை – சோதிட நூல்
செகராசசேகரம் – வைத்திய நூல்
பரராசசேகரம் – வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் – கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் – சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் – காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் – இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு – கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை – கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் – வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் – தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு – ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு – கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை – கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் – கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் – சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் – ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது – காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை – பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் – விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் – கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் – வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை – சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி – சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி – வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை – கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு – பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி – இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு – கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி – சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.

இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)

24 கார்த்திகை, 2006