Posts Tagged "ஊரோடி"

ஊரோடி – இரண்டு வருடம் – சாதனைகள் சோதனைகள்

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒரு பொழுது போக்கிடமாக ஊரோடி மாறியுள்ளது.



எதனையும் ஒரு தொடர்ச்சியாக செய்வதில் பூச்சியப்புள்ளியை எப்போதும் வாங்குகின்ற எனக்கு, யுத்தத்தின் சன்னத்தம் எந்நேரமும் வெளித்தெரிய நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வருடகாலம் என்னால் முடிந்தளவு தொடர்ச்சியாக டயல் அப் இணைப்பூடாக வலைப்பதிய முடிந்ததோடு என்னால் முடிந்தளவு வலைப்பதிவர்களுக்கு தொழிநுட்பரீதியாக உதவமுடிந்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்.

இந்த இரண்டு வருட காலத்தில் எனது நண்பர்களிடையே ஊரோடி எனக்கு ஒரு வித்தியாசமான பெயரை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. எனது பெயர் தெரியாமலே ஊரோடி என்கின்ற பெயரூடாக உறவாடுகின்ற நிறைந்த இணையநண்பர்களை இந்த வலைப்பதிவு ஏற்படுத்தி தந்திருக்கின்றது. அத்தோடு புளொக்கரில் இருந்த ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டுவந்து வலைப்பதிய தொடங்கிய பின்னர் அதுவே எனது இணைய வேலைகளுக்கு ஆரம்பமாக அமைந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. வலைப்பதிய ஊக்கியாக நின்ற சயந்தன், வலைப்பதிய வந்த காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வலைப்பதிய வேண்டும் என்று பின்னூட்டங்கள் மூலமும் மின்னஞ்சல்கள் மூலமும் காலத்துக்கு காலம் ஊக்கப்படுத்திய ஈழத்து மற்றும் இந்திய இணைய நண்பர்கள், குறிப்பாக தொடக்க காலத்தில் மிகவும் ஊக்கப்படுத்திய யோகன் அண்ணா, மலைநாடான், மதி என்று நீளும் பட்டியல் (எல்லோரையும் குறிப்பிட தனி ஒரு பதிவு தேவை அதனால் மன்னிக்கவும்), என்னோடு எப்போதும் கூட இருந்து, ஊரோடி பற்றி சொல்லும் எனது பள்ளிக்கால நண்பர்கள் என்று நன்றி சொல்லவேண்டியவர்கள் ஏராளம் உள்ளார்கள். அத்தோடு என்னைப்பார்த்து வலைப்பதிய வந்தவர்கள் என்று சொல்லி ஊக்குப்படுத்தியவர்களும் உள்ளார்கள்.

வழமைபோல சோதனைகளும் ஏராளம். யாழப்பணத்தில் இருக்கின்ற டயல் அப் இணைப்பு தான் நினைக்கின்ற நேரம் மட்டுமே இணையத்தில் இணைய அனுமதிக்கும். சில நேரங்களில் வாரக்கணக்காக பேசாமல் இருந்து விடும். அப்போதெல்லாம் பேசாமல் ஊரோடியை விட்டுவிட்டு தினம் ஒரு படம் பார்க்கலாம் என்கின்ற எண்ணம்தான் எழுந்து வரும்.

அதைவிட மிக மோசமாக எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்பில் வேலைபார்த்து இந்த வருடம் பங்குனி மாதத்தில் ஊரோடியை வழங்கியை விட்டு பூரணமாக அழித்தபின்னர், பேசாமல் அப்படியே விட்டுவிடுவோம் என்கின்ற முடிவுக்கே வந்தபின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் ஒரு மாதம் செலவழித்து மீண்டும் ஊரோடியை இணையத்துக்கு கொண்டு வரமுடிந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக ஏறத்தாள இரண்டாயிரம் பின்னூட்டங்கள் ஒரேயடியாக அழிந்து போயின.

மூன்றாவது வருட நிறைவை எழுத முடியுமா என்று இப்போதே சொல்லமுடியாத நிலை யாழ்ப்பாணத்தில் இப்போது. காலம் நேரம் எல்லாம் நல்லது செய்தால் வருடங்களானாலும் ஊரோடியை தொடர ஆசை.

26 புரட்டாதி, 2008

புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை

புது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி – குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) காரணமா என்ர எல்லா பதிவுகளும் என்னை ஊக்கப்படுத்தின எல்லா பின்னூட்டங்களும் அப்பிடியே இல்லாமல் போயிட்டுது.

பழைய பதிவுகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறன், ஆனா பின்னூட்டங்கள்??? அவ்வளவுதான்…

என்ன பிழை நடந்தது எண்டதை விரிவா ஒரு பதிவில தர முயற்சிக்கிறன். புதிசா தனித்தளத்தில பதிய வாறாக்களுக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும்.

பிறகென்ன புது உடுப்பு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.

24 சித்திரை, 2008

தினக்குரலில் ஊரோடி

தினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)

25 மாசி, 2008