Posts Tagged "நற்சிந்தனை"

தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு

யோகர் சுவாமி அருளிச்செய்த நற்சிந்தனையில் வரும் பாடல் இதுவாகும்.

தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு
உய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டு
பொய்யும் பொறாமையும் புன்மையோர்க் குண்டு
ஐயன் அடியிணை அன்பர்க் குண்டே

கல்லா தார்பாற் கபட முண்டு
எல்லா ரிடத்து மீச னுண்டு
வில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டு
எல்லாச் சக்தியும் இறைபால் உண்டே

தேடுவார் மாட்டுச் செல்வம் உண்டு
தேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டு
நாடுவார் மாட்டு நன்மை உண்டு
பாடுவார் மாட்டுப் பரமன் உண்டே

சீவன் சிவனெனல் தேறினோர்க் குண்டு
ஆவதும் அழிவதும் அசடர்க் குண்டு
ஈவது விலக்கார்க் கெல்லா முண்டு
தேவ தேவன் திருவடி உண்டே

அன்பு சிவமெனல் அறிஞர்க் குண்டு
பொன்புரை மேனி புனிதர்க் குண்டு
தன்போற் பிறரெனல் தக்கோர்க் குண்டு
விண்போல் விரிவு மேலோர்க் குண்டே

வீத்தொழில் – கொல்லுந்தொழில்

3 ஆனி, 2007

நற்சிந்தனை பற்றி…..

சிவயோக சுவாமிகள்(யோகர் சுவாமிகள் பற்றி அறிய http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm இங்கு செல்லுங்கள்) அருளிய திருப்பாடல்களே நற்சிந்தனை எனப்படுவன. இவை திங்கள்தோறும் சிவதொண்டன் இதழில் வெளிவந்தவை (சிவதொண்டன் இதழ் இன்றளவும் சிவதொண்டன் சபையினரால் வெளியிடப்படுகின்றது). பின்னர் இவை 1959 இல் தொகுக்கப்பெற்று புத்தகமாக வெளிவந்தன. இப்பாடல்கள் அனைத்தும் எளிய இனிய தமிழ் நடையில் அமைந்தன. நற்சிந்தனைச் செய்யுள்கள் ஞானப்பொக்கிசமாயும், வேதோபநிடத ஆகம சாரமாயும் விளங்குவன.

தன்னை அறிந்தால் தவம் வேறில்லை.

தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே

பொன்னை யன்றிப் பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லைத்
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை
நீதியும் இல்லை நெறியும் இல்லை
சாதியும் இல்லை சமயமும் இல்லை
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே

நன்மையுந் தீமையும் நங்கட் கில்லைத்
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லைச்
சொன்ன சுருதியின் துணிபிது வாமே

காலமு மில்லைக் கட்டு மில்லை
மூலமு மில்லை முடிபு மில்லை
ஞாலமு மில்லை நமனு மில்லைச்
சால அறிந்த தவத்தி னோர்க்கே.

3 மார்கழி, 2006