Posts Tagged "பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை"

தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் – தொடர்கிறது…

தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் பகுதி ஒன்றிலிருந்துதொடர்கிறது.

மதுரைத் தமிழச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராசிரியர் இராமானுஜையங்கார் அவர்கள், “சென்னை நார்மல்ஸ் ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் புலவர் கோமளபுரம் இராசகோபாலபிள்ளையால் பரிசோதித்து, மு. கந்தசாமி முதலியார் வர்த்தமானதரங்கிணீசாகை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது” என்ற முகப்புடன் ஒரு சேனாவரையம் தம்மிடம் இருக்கின்றது என்று தெரிவிக்கின்றார்கள். அந்த இராசகோபாலப்பிள்ளை பதிப்பு “எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்று கேட்டபோது, (1868) விபவ ௵ கார்த்திகை ௴ என்று அம்முகப்பில்தானே குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்கின்றார்கள். இராசகோபாலப்பிள்ளை பதிப்பு ஒன்று இருக்கவேண்டும் என்பவர்களுக்கு, இது மகிழ்ச்சிக்குரிய ஒரு சம்பவமேயாயினும், “தாமோதரம்பிள்ளை பதிப்புக்கு முன் இராசகோபாலப்பிள்ளை பதிப்பித்திருக்க வேண்டும்” என்று மனப்பால் குடிக்கின்றவர்களுக்கு, மெல்ல வாயை மெல்லுதற்கோ – மகிழ்ச்சி கொள்ளுதற்கோ இடமேயில்லை. தாமோதரம்பிள்ளை பதிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் (1986) விபவ வருஷம் புரட்டாதியிற் பதிப்பிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இராசகோபாலப்பிள்ளை சேனாவரைய பதிப்பு பதித்தால் அது ஏடுகளை பரிசோதித்துப் பதித்த பதிப்பு என்று சொல்ல முடியாது. 1906ல் மதுரைச்சங்கத்தில் படித்த கோபாலையர் என்பவர் “சேனாவரைய ஆராய்ச்சி” என்று ஒரு கட்டுரை “செந்தமிழ்”ப் பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அந்தக்கட்டுரை தாமோதரம்பிள்ளை பதிப்பிலும் பார்க்க, ஒரு சில திருத்தம் சொல்லி இராசகோபாலப்பிள்ளை பதிப்பை பாராட்ட முயற்சிக்கின்றது. ஆனால், இராசகோபாலப்பிள்ளையும் சேனாவரையம் பதித்திருக்கின்றார் என்று அறுதியிட்டுக்கூறாது, “இராசகோபாலப்பிள்ளை பதிப்புப் புத்தகம்” என்று கருகல் செய்து நடக்கின்றது. இக்கருகலாலும், அரசாங்க புத்தகப்பதிவில் இராசகோபாலப்பிள்ளை பெயரால் சேனாவரையப்பதிப்பு இல்லாமையாலும், இராசகோபாலப்பிள்ளை திருட்டு பிரசித்தமாகையாலும், தாமோதரம்பிள்ளை பதித்து இரண்டு மாசத்துக்கிடையில் திடீரென்று தோன்றினமையாலும், தமிழ்நாட்டில் ஏட்டுப்பிரதி கிடைத்தாலும், இராசகோபாலப்பிள்ளை பதிப்பு கிடையாமையாலும், தாமோதரம்பிள்ளை முதலிய யாழ்ப்பாணத்து அறிஞர்களில் இராசகோபாலப்பிள்ளைக்கு மாற்சரியம் உண்மையாலும், திரு. இராமானுஜையங்கார் அவர்களிடமிருக்கும் இராசகோபாலப்பிள்ளை பெயராலுள்ள சேனாவரையம், “புதிய பதிப்புத்தானோ, தாமோதரம்பிள்ளை பதிப்புச் சிலதாள்கள் வேறுபட்டுத் தோற்றுந் தோற்றமோ” என்பதை அறிஞர்கள் ஊகிக்கக் கடவர்கள். எங்ஙனமாயினும், என்னைப் பொறுத்தவரையில், இராசகோபாலப்பிள்ளைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனென்றால் தாமோதரம்பிள்ளை பதிக்குமுன், தாம் பதித்ததாகக் காலத்தை முன்னுக்குத் தள்ளாமல், எக்காரணத்தினாலோ, (தாமோதரம்பிள்ளை பதிப்பில் பிழை காண்பான் போலும்) தம் பதிப்பை காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்காக நன்றி செலுத்த வேண்டாமா! என்கின்றேன். இராசகோபாலப்பிள்ளை வாழ்க.

அதே விபவ ௵ (1868) கார்த்திகை ௴ மற்றொரு தொல்காப்பியப்பதிப்பு வௌிவந்தது. அது தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை. இதனை பதித்தவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் மாணவர் சுப்புராயச் செட்டியார் அவர்கள். எழுத்ததிகாரம் இளம்பூரணத்தை ஏட்டிலிருந்து எடுத்து முதன்முதல் அச்சில் கொணர்ந்தவர்கள் செட்டியார் அவர்களே.

தமிழ்நாடு, தொல். எழுத்தையும் சொல்லையும், எழுத்துக்கு நச்சினார்க்கினியம் இளம்பூரணம் என்கின்ற உரைகளையும், சொல்லுக்குச் சேனாவரையத்தையும் பெற்றுக்கொண்டது. இவற்றை முதன்முதற் பதித்த பெருமக்களை காலக்கிரமம் செய்தால், மழவை மகாலிங்கையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, சுப்புராயச் செட்டியார் என்றே கிரமஞ்செய்ய வேண்டும். எழுத்தையும் அதற்கு நச்சினார்க்கினியத்தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை மகாலிங்கையருக்குரியது. அவ்வாறே சொல்லையும் அதற்குச் சேனாவரையத்தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை சி. வை. தாமோதரம்பிள்ளைக்குரியது. எழுத்துக்குரிய இளம்பூரணத்தை முதன்முதல் அச்சில் தந்த பெருமை சுப்புராயச் செட்டியார்க்குரியது. சந்தேகப்பேர்வழியான இராசகோபாலப்பிள்ளைக்குப் பதிப்பாளர் நாமாவலியில் இடங்கொடுக்க இடமில்லை. அப்படிக்கொடுப்பினும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை அவருக்கு கிடையவே கிடையாது. இல்லையே இல்லை! இராசகோபாலப்பிள்ளையின், அரசாங்க பதிவு புத்தகத்தை ஏமாற்றிய கள்ளச் சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ ௵ கார்த்திகை ௴. தாமோதரம்பிள்ளையின் அரசாங்க பதிவுப்புத்தகத்தை ஏமாற்றாத களவில்லாத சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ ௵ புரட்டாதி ௴. இரண்டு மாதங்கள் முந்தி.

மழவை மகாலிங்கையர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதித்து இருபது வருஷங்களுக்குப் பிறகு, சுப்பராயச் செட்டியார் (1868) விபவ ௵ கார்த்திகை ௴ எழுத்து இளம்பூரணம் அச்சிற் பதிக்க இரண்டு மாசங்களுக்கு முன், அஃதாவது இற்றைக்கு 80 வருஷங்களுக்கு முன்னமே,

இந்தப்பூமண்டலத்திலே, தமிழ்நாட்டிலே தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தை, “தமிழ்நாட்டிலே தமக்கிணையில்லாத” ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களை கொண்டு பரிசோதிப்பித்து, முதன்முதல் அச்சுவாகனத்தில் ஆரோகணிப்பித்தவர்கள் தமிழ்மகார் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களே! ஒரு மயிர் நுனியை கோடாநுகோடி கூறிட்டு, அக்கூறுகளிலே, ஒரு கூறாகிய ஒரு மயிர்நுனி சந்தேகமும் இதில் இல்லையே இல்லை! இஃதிங்யனமாக,

எழுத்து சொல் பதித்தவர்கள் நாமாவலியை,

“மழவை மாகலிங்கையர், சுப்புராயச்செட்டியார், இராசகோபாலப்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை”

ஏன்று வரிசைப்படுத்தி, காலத்தால் இரண்டாம் இடத்தினராய் முதன்முதல் பதித்தலாகிய செய்கையால், மகாலிங்கையரோ டொப்ப முதலாம் இடத்தினராய சி. வை. தாமோதரம்பிள்ளையை, நான்காம் இடத்தினராக்கி, இராசகோபாலப்பிள்ளை பதிப்பையே தாமோதரம்பிள்ளை பார்த்து பதித்திருக்க வேண்டும் என்று, படிக்கிறவர்கள் உணரும்படி வைப்புக் கிரமம் செய்யாமற் செய்து,

செய்ந்நன்றி கொல்வோரும் இப்பூமிக்கு பாரமாய் உளராயின், அவர்தம் அதோகதிக்கு இரங்கி, (1868) விபவ வருஷத்திலும், ஏனைய வருஷத்திற்போலவே, கார்த்திகைக்கு முன் ஐப்பசி; ஐப்பசிக்கு முன் புரட்டாதி, என்று விரல்விட்டுக்காட்டுவதோடு, மாகாலிங்கையர் பதிப்பு 80 வருஷத்திற்கு முந்தியதன்று; நூறு வருஷத்திற்கு முந்தியது; தாமோதரம்பிள்ளை பதிப்புத்தான் 80 வருஷத்திற்கு முந்தியதென்றும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்

இனி அப்பாற் செல்வோம்.

“எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்”

என்று ஒரு குரல் கடைச்சங்க காலத்துப் பாண்டிய அரசனொருவன் வாயிலிருந்து கேட்கின்றோம். கடைச்சங்கத்துத் தலைமைப் புலவோராகிய நக்கீரரே அக்குரலை பெருக்குகின்றார்.

இக் குரலில் தொல்காப்பியத்தின் உயிர் நிலையம் எந்த அதிகாரம் என்பதை எவருந் தொட்டுக்காட்டலாம். அந்த உயிர்நிலையமாகிய பொருளதிகாரம் 1868ம் ஆண்டு கழிந்து, 1878ம் ஆண்டும் போய், 1884ம் ஆண்டும் நீங்கி இன்னும் அச்சில் வெளிவரவில்லை. ஓர் இராசகோபாலப்பிள்ளையோ, ஒரு தொழுவூர் வேலாயுத முதலியாரோ, இவர்களின் சூத்திரப்பார்வையான வீராசாமி முதலியோ திருவுளம் இரங்கவில்லை! வெறுங்கைக்கு முழம் ஏது!

தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார ஏடு ஒருசிலவாய், அவையும் நெரிந்தும் முரிந்தும் சிதல்வாய்ப் பட்டும் சிதைந்து, இறுதி மூச்சு விடுவதைத் தமிழமகன் ஒரே ஒரு தாமோதரன் தான் கண்ணுற்றான்; கண்ணீர் சொரிந்தான். 1885ம் ஆண்டு பொருளதிகாரம், முதல் ஐந்தியல்கள் நச்சினார்க்கினியர் உரையோடும், பின்னான்கியல்கள் பேராசிரியர் உரையோடும் அச்சுவாகனம் இவர்ந்தது. தாமோதரம்பிள்ளை பதிப்புத் தமிழ்நாட்டில் பவனி வந்தது.

பல்காற் பழகினுந் தெரியா உளவேல்
தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும்

அன்றோ!

நாவலர் பதிப்புக்களான திருவள்ளுவர் கோவையார் என்பவைகளோடு, தொல்காப்பியம் முழு உருத்தரித்துக், கைகோத்துக் குதூகலித்தது. தமிழ் அன்னை புன்னகை பூத்தாள்.

1891ம் ஆண்டில் பலருடைய வேண்டுகொளின்படி, மழைவை மகாலிங்கையர் பதித்த எழுத்து நச்சினார்க்கினியத்தை மிக அருகினமையால் திருப்பிப் பிள்ளை அச்சிட்டார். அடுத்த ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம் பிள்ளையால் முதன்முதல் அச்சிடப்பட்டது. எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் தவிர, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பெல்லாம், மற்றொருவர் பதியாத புதிய பதிப்புக்களே.

“ஒருமுறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இ்வ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று. அன்றியும் ஒரு பெருநூலின் முதலேயுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ்செய்து காலகதியடைந்துவிட்டால், பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற் பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாகும். உலக வழக்கும் அதுவே.”

என்ற பிள்ளையவர்களின் கூற்றுங் கரிபோக்கும்.

1881ல் வீரசோழியமும், 1883ல் தொல்-பொருளதிகாரத்திற்கு திறவுகோலான இறையனார் களவியல் உரையும், அவ்வாண்டில்தானே, சிவஞான சுவாமிகளின் மாணவரான கச்சியப்ப முனிவர் இயற்றிய தணிகைப்புராணமும், 1887ல் கற்றோரேத்துங் கலியும் உரையும், 1889ல் குட்டித் தொல்காப்பியமாகிய இலக்கண விளக்கமும், சூளாமணியும் பிள்ளை அவர்கள் அச்சிட்ட புத்தம் புதிய பதிப்புக்களே.

நா. பொன்னையா அவர்கள், மகா வித்துவான் கணேசையர் அவர்களின் மரபுநெறிப்பட்ட ஆன்ற அறிவை பயன்படுத்தி, சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் ஞாபகமாக, தற்காலத்து சனநாயகத் தமிழுக்குத் தலைக்கெட்டாத “கூடலினாயந்த ஒண்டீந்தமிழாவாய்” நுழைவார்க்கு அரியதொரு சாதகமாக, பிள்ளையவர்கள் பதித்த தெல்காப்பியம் முழுவதையும் நாற்பெருங் கூறிட்டு, அழகிய முறையில் அச்சிட்டுபகரித்து, பழந் தமிழறிஞர்கள் பாராட்டியமையாது.

திரு. பொன்னையா அவர்கள் தேச கைங்கரியங்கள் செய்து வருவதையிட்டு அரசாங்கம் ஜே.பி ஆக நியமித்திருக்கின்றது. நான் அவர்களுடைய சாஸ்திர கைங்கரியங்கள் குறித்து, “வராகம்” என்கின்ற பட்டத்தை வழங்க விரும்புகின்றேன்.

விஷ்ணுவின் பத்த அவதாரங்களில், கற்கி (கல்கி) அவதாரம் போல, “வராகம்” என்பதும் ஒரு விஷ்ணு அவதாரம். அறிவுப் பொக்கிஷங்களாகிய தொல்காப்பியம் போன்ற நூல்களை அசுரர்கள் சிதைத்து ஆழ்த்தும் காலங்களிலே, விஷ்ணு வராக மாய்த் தோன்றித், தனது வக்கிர தந்தங்களில், ஆழ்த்திய அறிவுப்பொக்கிஷங்களை தேடி எடுத்து, ஏந்தி உபகரிப்பது புராணப் பிரசித்தம்.

தொல்காப்பியம் சிதைந்து மறையுங் காலத்தில் அதனைத்தேடி எடுத்து ஏந்திப் பரமோபகராஞ் செய்த சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆதிவராகம். பிறகு தாமோதரம்பிள்ளை எடுத்து ஏந்திய தொல்காப்பியம் மறைகிற சமையத்திலே, நன்றிமறவாமல் அதனை எடுத்துத் தாங்கிப் பயன்படுமுறையில் உபகரித்த திரு. பொன்னையா அவர்கள் “உத்தரவராகம்”.

திரு. நா. பொன்னையா அவர்கள் செய்த புண்ணியத்தோடு புண்ணியமாக, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்புக்களில், பிள்ளை அவர்கள் எழுதிய பதிப்புரைகளை ஒன்றுசேர்த்து, ஒரு தக்க முன்னுரையோடும் அடிக்குறிப்புக்களோடும் வௌியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன். பிள்ளை அவர்களின் பதிப்புரைகள், தமிழ் வரலாறு தமிழ்நாட்டு வரலாறுகளையும், அவற்றில் பிள்ளை அவர்களின் பங்கையும் புலப்படுத்துவதேயன்றி, உயரிய வகுப்புக்களுக்கு வரலாற்றுப் பாடமும் தமிழ் இலக்கியமுமாய் அமைந்து பயன்படுமென்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இந்த கட்டுரையை எழுதுவதற்கு 1948ம் ஆண்டு ஒரு சந்தர்ப்பம் திடீரென்று தோன்றியது. ஆனால் கரு உருவெடுக்கவில்லை. இத்தனை காலங்கழித்துக் குழந்தை பிரசவித்திருக்கிறது. தொல்காப்பிய பராமரிசர்கள், இந்தக் குழந்தையையும் பரிசித்து கொஞ்சிக் குலாவுவார்களாக.

6-9-50

3 ஆவணி, 2011

நான் யார்?

நான் யார்? என்ற வினா உலகந்தொடங்கிய காலந்தொடங்கி இருந்து வருகின்றது. அதற்கு விடைகாணும் முயற்சியும் நடந்து வருகின்றது.

நான் யார் என்ற வினாவுக்கு எளிதில் விடைகண்டு சொன்னவன் உலகாயதன். இந்த உடம்புதான் நான் என்று தீரமானஞ் செய்தவன் அவன். நான்யார்? என்கின்ற வினாவுக்கு அரிதின் முயன்று வேத உபநிடதங்களினை ஆராய்ந்து விடைகண்டு சொன்னவன் வேதாந்தி.

காணப்பட்ட இந்த உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தாரகமாய், அதனோடு அத்துவிதப்பட்டு நின்றது எதுவோ அதுவே பிரமம். அந்தப் பிரமந்தான் நமது இருதயக் குகைக்குள் ‘நான்” ‘நான்’ என்று சொல்;லிக்கொண்டிருக்கின்றது. ஆகவே ‘நான் பிரமம்’ என்று முடிவு செய்தவன் அந்த வேதாந்தி.

உலகாயதன் வேதாந்தி ஆகிய இருவருஞ்சொன்ன விடைகளைக் கேளாமலே கேட்டுக்கொண்டு, அவர்களை பாராமலே பார்த்துக்கொண்டு அவர்கள் எதிரில் எழுந்தருளியிருக்கின்றார் மௌனதவ முனிவர் ஒருவர். பயனில் சொற் பயிலாதவர் அவர்.

எதிரிலிருந்த ஏனையவர்கள் மௌனதவமுனிவர் முகத்தை நோக்குகின்றார்கள். அவருடைய முகாரவிந்தம் மெல்ல மெல்ல இதழ் அவிழ்கின்றது.

இருவர் கூற்றும் பொய் என்கின்றது, அம்முனிவருடைய திருவாய் மலர். எங்கும் நிசப்தம் குடிகொள்ளுகின்றது. அதேசமயம் ஒருவகை ஏக்கம் தலைநிமிர்கின்றது. உலகாயதம் பொய்யாக போய்த்தொலையட்டும். வேதாந்தமுமா பொய் என்ற வினா எழுகின்றது.

தவமுனிவர் சற்றேனுந் தயங்காது தமது நாவை சற்றே பெயர்த்து ‘புரை தீர்ந்த’ என்று கூறி அமர்கின்றார்.

வேதாந்தம் ‘நான் பிரமம்’ என்பது ‘புரை தீர்ந்த பொய்’ என்றது ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்து.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

உபநிடத முனிவர்கள் சார்ந்ததன் வண்ணமாகும் ஆன்மாவை உலகாயதன் முடித்துக்காட்டிய இந்த உடம்பின் வேறாகக் காணுதற்கு வழி வகுத்திருக்கின்றார்கள். முனிவர்கள் வழியிற் செல்லுஞ் சீடன், உடம்பை பொய்ச்சார்பு என விடுத்து, மெய்சார்பை உணர்ந்து, மெய்ச்சார்பாகிய பிரமமாகத் தன்னைக் காணுகின்றான். ஒருநாள் நான் உடம்பு என்றவன், மற்றொருநாள் நான் பிரமம் என்பான். அவ்வளவில் முனிவர் உபநிடத பாடத்தை முடித்து ஆசிவழங்கி மகிழுகின்றார்.

அப்பால், சாதகனாகிய மாணவனுக்கு ‘கண்ட இவை அல்லேன் நான் காணாக் கழிபரமும் நான் அல்லேன்” என்பதாகிய சிவஞானம் சித்திக்கின்றது. மேற்காட்டிய தொடர்கள் சிவஞானசித்தியார் ஒன்பதாஞ் சூத்திரம் ஏழாஞ்செய்யுளில் முதற்கண் உள்ளவை.

கண்ட இவை – காணப்பட்ட தேகாதிப் பிரபஞ்சங்கள், காணாக் கழிபரம் – கருவி காரணங்களுக்கு எட்டாத பிரமம்.

யோகிகள் கருவி காரணங்களை விலகாமல் விலகி நின்று, அவைகளுக்கு எட்டாதவைகளை உணருகின்றார்கள். தேகச்சார்பை விலகாமல் விலகிப் பிரமத்தைச் சார்ந்து நான் பிரமம் என்று காணுவது ஒரு யோகநிலை. இந்த யோக நிலையை உற்றவர்கள், ‘நான் சரீரம்” என்பது எத்துணைப் பொய்யோ, அத்துணைப் பொய் ‘நான் பிரமம்’ என்பதும் என்றுணர்ந்து, சிவஞானம் சித்திக்கப் பெற்று, அச்சிவஞானபோதத்தால், சிவத்தின் உண்மையியல்பையும், அச்சிவத்தின் வேறாக எண்ணமுடியாத சிவமயமான தம் உண்மையியல்பையும் உணராதே உணர்ந்து, ‘நான் அது’ என்ற பேதம் தோன்றாதே இருமையின் ஒருமை உறுவார்கள்.

இஃது ஏகபாவம் எனப்படும் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்த முத்திநிலை. இந்நிலையோடு ஒப்பிடும்போது ‘நான் பிரமம்’ என்கின்ற யோகநிலை பொய். ஆனால் மெய்நிலைக்கு அது சாதகம். ஆதனால் அந்தப் பொய், புரை தீரந்த பொய்.

‘காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசு ஞானம்” என்பது சிவஞானசித்தியார். ஞானம் மூன்று வகை. அவை பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் என்பன. முறையே ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்தது. பதிஞானம்-சிவஞானம் எனப்படும். சிவஞானமாவது திருவருள். ‘அவனருளாலே அவன் தாள்வணங்கி’ என்ற திருவாசகம் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.

மூவகை ஞானங்களும் ‘நான் யார்’ என்ற வினாவை விடுவித்தற்கு உபகாரமானவைகள். பதி ஞானமாகிய சிவஞானத்தாலே தான் – நான் – என்பதன் உண்மை இயல்பு சித்திக்கும் என்பது காட்டப்பட்டது.

பசு ஞானத்தினாலே நான் பிரமம் என்ற உணர்வு பிறக்கும். அதனால் நான் என்பதன் உண்மையியல்பு சித்தியெய்தாது. இந்நிலையை முடிந்த முடிபு எனக் கொள்ளுபவர்கள் ஏகான்ம வாதிகள். இவர்கள் கொள்கை ஏகானம் வாதம்.

தாம் பிரமங் கண்டவர்போல்
தம்மைக் கண்டு ஆங்கது வே
நான் பிரமம் என்பவர் பால்
நண்ணாதே

என்பது உமாபதி சிவம் அருளிய நெஞ்சுவிடு தூது.

இந்த நான் யார்? என்கின்ற கட்டுரை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாலே எழுதப்பெற்று கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் 1964 கார்த்திகையிலே வெளியிட்ட ‘சிவசக்தி’ மலரில் பிரசுரமானது.

28 பங்குனி, 2010