புளொக்கரா வேர்ட்பிரஸா???

ஏறத்தாள பத்து மாதமா புளொக்கரில இருந்திட்டு இப்ப புது வீட்டுக்கு வேர்ட்பிரஸின்ர உதவியோட வந்திருக்கிறன். அதனால இப்ப ஒரு முக்கிய வேலை இருக்கு புதுசா பதியிற ஆக்களுக்கு அல்லது புதுசா புது வீட்டுக்கு போப்போற பதிவர்களுக்கு என்ர பார்வையில எது நல்லா இருக்குது எண்டு சொல்ல வேணும்.




ரவிசங்கர் ஒரு பதிவில சொல்லியிருந்தார் “இப்பவும் வேர்ட்பிரஸ் தான் சிறப்பாயிருக்கு” (வேற வசனநடையை பாவிச்சிருந்தார் எண்டு நினைக்கிறன்). சில புளொக்கர் பாவனையாளர்களுக்கிடையில அது சிலவேளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். ஆனா அதில ரவிசங்கர் செய்த முக்கியமான தவறு இலவச புளொக்கரை (something.blogspot.com) இலவசமா கிடைக்கிற வேர்ட்பிரஸ் (something.wordpress.com) உடன் ஒப்பிட்டிருக்க வேண்டுமே தவிர, தனது வழங்கியில் நிறுவப்பட்டிருக்கின்ற வேர்ட்பிரஸ் உடன் ஒப்பிட்டிருக்கக்கூடாது (அது இலவசமே என்றாலும்).

அப்ப என்ன சொல்லவாறன். புளொக்கர் நல்லம் எண்டோ?? இல்லை வேர்ட்பிரஸ்தான் நல்லம் எண்டோ?? இரண்டிலயும் இருக்கற நல்ல விசயங்களை சொல்லுறன். நீங்கள்தான் அதை முடிவெடுக்க வேணும். இங்கு குறிப்பாக சொல்லப்பட வேண்டியது என்னவெனில் புளொக்கர் பெரும்பாலும் கீழைத்தேய நாட்டினராலும் வேர்ட்பிரஸ் பெரும்பாலும் மேலைத்தேய நாட்டினராலும் பயன்படுத்தப்படுகின்றது. (இங்கு வேர்ட்பிரஸ் என குறிப்பிடப்படுவது புளொக்கர் போல நாங்கள் பூரண இலவசமாக பெற்றுக்கொள்ளும் வலைப்பதிவு)

புளொக்கர், வேர்ட்பிரஸ் இரண்டுமே நீண்டகாலத்துக்கு முதல் தொடங்கப்பட்டு இண்டைக்கு வரைக்கும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற புளொக்கிங் சேவை வழங்குனர்கள். இருந்தாலும் புளொக்கரை கூகிள் வாங்கின கையோட அதனுடைய பயனாளர்களின்ர எண்ணிக்கை அதிகரிச்சதென்னவோ உண்மைதான். பொதுவாச் சொல்லுறதெண்டா புளொக்கர் வேர்ட்பிரஸை விட அதிக வசதிகளை கொண்டது. நீங்கள் ஒரு அடைப்பலகையை தேடினா வேர்ட்பிரஸைவிட புளொக்கருக்கு அதிகமானவற்றை கண்டுபிடிக்க முடியும். அத்தோட புளொக்கர் உங்களோட அடைப்பலகையில உங்களுக்கு பூரணமான அனுமதியை தருகிறது. அத்தோட நீங்கள் உங்களோட சொந்த அடைப்பலகையை வடிவமைத்துக்கொள்ளவும் புளொக்கர் அனுமதிக்கின்றது. வேர்ட்பிரஸில உங்களால அவ்வாறு செய்துகொள்ள முடியாது. இது பாதுகாப்பு தொடர்பான சில கரிசனைகளையும் கொண்டது.

மற்றப்பக்கத்தில பாத்தா, வேர்ட்பிரஸ் என்னெல்லாம் செய்யவிடுதோ அதெல்லாம் மிகவும் இலகுவாக செய்யக்கூடியவையும் உங்களுக்கு எந்தவிதமான கணனி மொழி அறிவும் தெவைப்படாது. புளொக்கரிலயும் அது இப்ப சாத்தியப்பட்டாலும், அது வேர்ட்பிரஸ் அளவிற்கு சுகமானது அல்ல. உங்களுக்கு சிறதளவேனும் HTML மற்றும் CSS தெரிந்திருந்தால் மட்டுமே உங்களால் சிறந்த வெளிப்பாடொன்றை பெற்றுக்கொள்ள முடியும். வேர்ட்பிரஸ் அழகான மிக இலகுவான இடைமுகப்பை கொண்டது அதேவேளை நீங்கள் உங்கள் வலைப்பதிவின் HTML மீது சில வேலைகளை செய்ய வேண்டுமென்றால் அதற்கு புளொக்கர் தான் தீர்வாக முடியும்.

புளொக்கர் இணையத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்ற கூகிளின் ஒரு பகுதியாக இருப்பதனால் வேர்ட்பிரஸினால் தனியாக அதனுடன் போட்டிபோட முடியாது.

பின்னூட்டங்கள் தொடர்பில் புளொக்கரை விட வேர்ட்பிரஸ் அதிக வசதிகளை கொண்டுள்ளது. அதனால் spam control என்பதை இங்கு இலகுவாக செயற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பயனாளர் தொடர்ந்து பின்னூட்டமிட முடியும் என்பது இங்குள்ள சிறந்த ஒரு முறைமையாகும்.

இங்கு இன்னுமொரு விடயம் என்னெவெனில், வேர்ட்பிரஸில் ஒரு வலைப்பதிவு ஒருவருக்கு மட்டுமே உரியதாக இருக்க முடியும். ஆனால் புளொக்கரில் நாங்கள் எத்தனை பேர் சேர்ந்துகூட ஒரு வலைப்பதிவை வைத்திருக்க முடியும் (வலைச்சரம், சற்றுமுன் போல).

வேர்ட்பிரஸை விட புளொக்கர் முன்னமே ஆரம்பிக்கப்பட்டு விட்டதால், வேர்ட்பிரஸினை விட புளொக்கருக்குரிய resources இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. அத்தோடு அவை புளொக்கரை மேன்மைப்படுத்தி காட்டி நிற்கின்றன.

என்னளவில் வேர்ட்பிரஸைவிட புளொக்கரே சிறந்ததாக இருக்கின்றது. அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் எனது “நோண்டிப்பார்த்தலுக்கு” அதுவே இலகுவானதாக இருக்கின்றது.

குறிச்சொற்கள்: , , ,

பின்னூட்டங்களில்லை