ஆறுமுக நாவலர் – பிறந்த தினம்
“நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே” என்று சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பாடிய; செய்யுள் வடிவிலிருந்த தமிழிலக்கியத்தினை கற்றோரும் மற்றோரும் உணரும்படி செந்தமிழ் உரைநடை வடிவிற்கு மாற்றி தமிழிற்கு பரோபகாரம் செய்த நல்லை நகர் ஆறுமுக நாவலரின் பிறந்த தினம் இன்றாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டிலே பிறப்பெடுத்த தமிழ் உரைநடை இலக்கியத்தை விருத்திசெய்து, பொதுமக்கள் எல்லோருக்கும் புலப்படக்கூடிய ஒரு உரைநடையினை உருவாக்கி அதன் மூலம் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெருமகனார் ஆறுமுக நாவலர் அவர்கள். ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று பாராட்டப்பட்ட ஆறுமுக நாவலர் அவர்கள் தனி ஒருவராய் தமிழ் உரைநடைக்கு செய்த பரோபகாரம் என்றும் நினைவில் கொள்ளப்படவேண்டியது. இவருடைய சைவவினாவிடைகள் இன்றுவரை சைவச்சிறார்களுக்கும் பெரியோருக்கும் வேதங்களாய் நின்று விளங்குகின்றன.
இவர் எழுதிய உரைநடை நூல்களுள்ளே குறிப்பிடத்தக்கவை பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கோயிற்புராண உரை முதலியன. இவர் இயற்றிய கண்டன நூல்கள் சுப்பிரபோதம், வச்சிரதண்டம் முதலியன. இவைதவிர சைவசமயத்தின் சிறப்புக்களை தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கமாக எழுதிய யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப்பற்றி எழுதிய கட்டுரை என்பனவும் இவரின் உரைநடைச் சிறப்பை எடுத்தியம்பிய வண்ணம் உள்ளவை.
இன்று நாவலர் பெருமானுடைய குருபூசை நல்லூர் கந்தசுவாமி கோயிலிலே விசேட பூசை வழிபாடுகளுடன் வெகு சிறப்பாக விமர்சையாக நடைபெற்றது.
சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கக்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப்
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானார் தந்த
வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோது
மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம்.
– சிறீல சிறீ ஆறுமுக நாவலர்.
ஆறுமுக நாவலர் பிறந்த நாள் பதிவுக்கு நன்றிகள்.
ஆறுமுக நாவலர் பிறந்த நாள் பதிவுக்கு நன்றிகள்.