நிகழ்வுகள்

தினமும் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பு

ஆறுமுக நாவலர் குருபூசை.

கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையில் செந்தமிழ் வசன நடையை தொடங்கி வைத்து செய்யுள் நடையிலிருந்த தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகார சீலர் ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் பற்றி சொல்லி தெரிவதற்கு எதுவுமில்லை. இன்று நல்லை ஆதீனத்திலே நாவலர் அவர்களுடைய குருபூசை நல்லை குருமகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை

தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.என்று நல்லை கந்தன் கொடியேற்றத்தை பாடித்துதித்த சேனாதிராயக் கவிராயரின் மாணாக்கர் இந்த நாவலர். ஆசிரியர் எட்டடி பாய்ந்தால் இந்த மாணாக்கரோ பதினாறடி பாய்ந்தார்.“தமிழ்நாடு முழுதும் இணையில்லாதவர்” என்று தாமோதரம்பிள்ளை அவர்கள் நாவலர் பெருமானை சொல்லுவார்கள். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்

“கற்றுணர் புலவ ருட்களிக்கும்
முற்றுண ராறுமுக நாவலனே”

என்றும் அவரின் தலைமாணாக்கராகிய தியாகராச செட்டியார் அவர்கள்

“என்னுளங் குடிகொண் டிருக்கும்
முன்னுசீ ராறுமுக நாவலனே”

என்றும் நாவலர் பெருமானை போற்றினார்கள்.

வசனநடை கைவந்த வல்லாளர், வழங்குநடை வசனநடை எனப் பயிற்றி வைத்த ஆசான் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நாவலர் அவர்கள் இலக்கணத்தூய்மைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார் என்று எம். ஏ. நுஃமான் அவர்கள் தனது “பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும்” என்ற கட்டுரையில் சொல்லுகின்றார். அதற்கு உதாரணமாக அவர் தம்பையாப்பிள்ளை பாடிப் பதிப்பித்த ‘குமார நாயக அலங்காரம்’ என்ற நுலைக் கண்டித்து எழுதிய கட்டுரை ஒன்றை உதாரணமாக காட்டுகின்றார்.

“தம்பையாப்பிள்ளை, தம்பைய நாவலன், தம்பைய கவிஞன் என்பன இரு பெயரொட்டுப் பண்புத்தொகைகளன்றோ? இவைகளுள்ளே நிலைமொழி யாது? தம்பையாவா? தம்பையனோ? தம்பையாவாயின், ‘தம்பைய நாவலன்’, ‘தம்பைய கவிஞன்” என்று புணர்ந்ததெப்படி? ‘தம்பையனாயின்’ ‘தம்பையாப் பிள்ளை’ என்று புணர்ந்ததெப்படி? ஆகாரவீற்று ஐயா வென்பது விளியுருபேற்ற பெயரா? உருபேலாது தன்னயில்பினின்ற பெயரா? உருபேற்ற பெயரும் பின் மொழியுங்கூடி இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகுமா? ‘ஆழ்வார்ப்பிள்ளை’ எனும் புணர்ச்சிக்கு விதி என்னை?”

நாவலர் அவர்களின் மறைவிற்கு பின்னர் அவரது திறனும் கல்வியிம் அழிந்துபட்டுப் போய்விடவில்லை.

“அவரது மாணாக்கரான கோப்பாய் சபாபதி நாவலர் மதங்கொண்ட களிற்றுயானை போல தமிழ்நாடு முழுவதிலும் தமக்கிணையின்றி திக்கு விசயம் செய்து செந்தமிழ்மழை பொழிந்தார்.” அதேபோல அவரது இன்னொரு மாணாக்கர் காசிவாசி செந்திநாதையர். தமிழுக்கு சாமிநாதையர் போலச் சித்தாந்தத்திற்கு செந்திநாதையர் என்று பாராட்டும்படி அவர் திகழ்ந்தார்.” இவ்வாறு சொல்லுகின்றார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள்.

2 மார்கழி, 2007

காரத்திகைத்தீபம் – யாழ்ப்பாணம்.

இண்டைக்கு கார்த்திகைத்தீபம். வழமையா யாழ்ப்பாணமே வெளிச்சக்காடாகிற ஒரு நிகழ்வு கார்த்திகைத்தீபம்தான். வழமையா வருசம் நிறைய வாற விசேடங்களுக்குள்ளேயே இண்டைவரைக்கும் எனக்கு பிடிச்சது கார்த்திகைதீபம்தான். ஏனென்ண்டா அண்டைக்குத்தான் இரவில வெளியால திரியலாம். வழமையான இரவு ஏழு மணிக்கு முதல் வீட்டுக்க வரவேணும் எண்டா அண்டைக்கு மட்டும் ஒம்பது மணி வரைக்கும் வரத்தேவையில்லை. (2002 வரைக்கும் கூடப்படிக்கிற பொம்பிளைப்பிள்ளையள் வீடுகளுக்கு எல்லாம் கூட்டமாய் போய் எங்கட வீர சாகசங்களை காட்டுறது, சில பிரச்சனை தந்த வாத்தியார் வீட்டு தீபத்துக்குள்ள உப்புபோடுறது வரைக்கும் செய்தனாங்கள், 2003க்கு பிறகு இந்த விளையாட்டுகள் ஒண்டும் இல்லை. – என்ன மாயா ஞாபகம் இருக்குதோ???) ஆனா கடைசியா 2005 இல யாழ்ப்பாணத்தை மோட்டச்சைக்கிளில ஒரு சுத்து சுத்தினதுதான் அதுக்கு பிறகு ஒண்டும் இல்லை.

2006 இல சரியான பிரச்சனை. பெரிசா ஒரு சனமும் தீபம் ஏத்தேல்ல. அத்தோட பஞ்சாங்க குழப்பம் வேற. கார்த்திகை தீபம் இண்டைக்கோ நாளைக்கோ எண்ட பிரச்சனையிலயே கொஞ்ச இடத்தை முதல்நாளும் வேற கொஞ்ச இடத்தை அடுத்தநாளும் தீபம் ஏத்துப்பட்டுது. அனேகமா எல்லாரும் வீட்டு படலைக்குள்ளயே தீபம் வச்சு ஏத்தினதில பெரிசா வீதிகள் ஒண்டும் களைகட்டேல்ல. இருந்தாலும் கோயில்களில பூசைகள் நடந்தது.

இந்தவருசம் பஞ்சாங்க குழப்பம் ஒண்டும் இல்லை. 9 மணிக்கு ஊரடங்கு எண்டாலும் 7 மணிக்கு பிறகு றோட்டில ஆக்கள் காணுறது கஸ்டம். ஒரு நாலுபேரா சேந்து ஒரு சுத்து சுத்துவம் எண்டு வெளிக்கிட்டு சுத்தி பாத்தம் (ஆறேகாலுக்கு வீட்ட திரும்பி வந்திட்டம்). சனம் ஐஞ்சு மணிக்கே ஏத்த ரெடி. வழமையா ரோட்டு நீட்டுக்கு பாக்க வடிவா இருக்கும். இந்த முறை அங்கயொண்டு இங்கயொண்டு எண்டு எரிஞ்சுது. டக்கெண்டு எத்தனை இருக்கு எண்டு எண்ணி சொல்லிப்போடலாம் எண்டளவுக்கு இருந்துது. பிறவுண்றோட், கஸ்தூரியார் றோட், கேகேஸ் றோட், அரசடி றோட் எல்லா றோட்டும் நீட்டுக்கு போய் பாத்தன். ஒரு நல்ல படம் எடுப்பம் எண்டு பாத்தா சரிவரவே இல்ல. கடைசியா கோயிலடியில வந்து எடுத்தபடம் கீழ. (கறண்ட் இல்லாததில படம் நல்லா இல்ல – இப்ப இரவில கொஞ்ச நேரம் கறண்டும் இல்ல)

25 கார்த்திகை, 2007

கண்காட்சி.

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின்ர கண்காட்சி ஒண்டு 20 இல இருந்து 26 வரை நடந்து முடிஞ்சிருக்கு. எனக்குத்தெரிய நுண்கலைப்பீடம் வைச்ச முதலாவது கண்காட்சி இதுதான். ஓவியம், சிற்பம், மரவேலை, கோட்டு வரிப்படம், சங்கீதம் எண்டு எல்லாத்தையும் பாக்க குறைஞ்சது ஒரு நாள் தேவை. ஆனா நான் போனதே இண்டைக்கு கடைசிநாள் 5 மணிக்கு பூட்ட ஆயத்தம் நடக்கேக்க. நல்ல மழைவேற. எடுத்த படங்களை பிறகொரு பதிவா போடிறன். இப்போதக்கு கைப்பேசியில எடுத்தது.27 ஐப்பசி, 2007