யாழிலிருந்து ஜீவநதி

அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி…
புதியதோர் உலகம் செய்வோம்என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு முடிவாகீற்றுது. சந்தா கட்டுறதிலதான் பிரச்சனை. தொடர்ந்து வருமா?? அல்லது வராமல் விட்டிடுமோ?? வரவேணும்.

கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், சிறுகதைகள், நூல் அறிமுகம், கலைஇலக்கிய நிகழ்வுகள் எண்டு எல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கு.

புதுப்புனல் என்கிற பகுதியூடாக மாணவ எழுத்தாளர்களை ஊக்குவித்தல் மிகச்சிறப்பாய் உள்ளது. இது மேலும் பலரை எழுதவும் வாசிக்கவும் வைக்கும்.

எழுத்துருக்களை பயன்படுத்துதலில இன்னும் சிறிய கவனம் வேண்டும் எண்டுறது என்ர எண்ணம். த. ஜெயசீலன் எழுதிய இரண்டு கவிதைகளையுமே வாசிக்க முடியேல்ல. என்னைப்பொறுத்தவரை எழுத்துரு அவ்வளவு மோசமா இருக்கு.

முதல் கட்டுரை பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதின “இன்றைய நிலையில் ஊடகத்துறை வளர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் செல்வாக்கு”. சிவத்தம்பி ஐயா கட்டுரையை ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கலாம் அவ்வளவு ஆங்கில சொல்லுகள் அடைப்புக்குறிகளுக்குள்ள. புகையிரத அமைச்சு ரெயில்வே எண்டு அடைப்புக்குறிக்குள்ள போட வேண்டிய தேவை எனக்கு விளங்கேல்ல. மற்றபடி இதை இன்னமும் விரிவா எழுதியிருந்தா எனக்கு இன்னமும் விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்.

தாட்சாயணியின் கெடுபிடி சிறுகதையும், கொற்றை பி. கிருஸ்ணானந்தன் உடைய வல்லைவெளி கவிதையும் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்ற கொன்வே பற்றி சொல்லுகின்றன.

நோயின் கொடுமையினால்
நொந்தவர் மயங்கிவிழ
“கொன்வோய்” போய்முடியத்
தொண்ணூறு நிமிடங்கள்
ஆவி பிரிந்ததனால்
“அங்கிருந்து” அனுப்பப்படும்
பூதவுடல்களும்
பொறுமைதனையிழந்து
கண்ணைத்;திறந்து
காரணத்தை கேட்கின்ற
அதிசயங்கள் நடந்தாலும்
ஆச்சரியமில்லை

என்கிறார் கிருஸ்ணானந்தன்.

பேராசிரியர் சபா. ஜெயராசா எழுதியிருக்கும் “நவீன கலை இலக்கியப்புலப்பாடுகள்” எண்ட கட்டுரையை இன்னொருக்கா வாச்சா என்ன சொல்லுறார் எண்டு விழங்கும் எண்டு நினைக்கிறன்.

க. திலகநாதன் தன் நாட்டிய சாத்திரம் – சில அரங்கக்குறிப்புகள் என்கிற கட்டுரையில அரங்க முறைமைகள் பற்றி விளக்குகிறார். நாட்டிய சாத்திரத்தில 6000 சூத்திரம் இருக்குதாம். அப்படியா???

அரண் கதை மூலம் அ. தனஞ்செயன் என்ன சொல்ல வாறார் எண்டு விளங்கேல்ல.

நூல் அறிமுகப்பகுதியில ஊடறு வெளியீடாக வந்த “இசை பிழியப்பட்ட வீணை” கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பகுதி நிச்சயமாக எனக்கு பயனுள்ள பகுதியாக இருக்கும். புத்தகங்களை தேடிக்கண்டுபிடிக்கிற வேலை குறையும்.

குப்பிளான் ஐ. சண்முகம் தனது பலதும் பாராட்டும் பத்தி பகுதியல நுண்கலைத்துறையின் கண்காட்சி பற்றி எழுதியிருக்கிறார். அதில் அவர்களுக்கு மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறும் துணிவு இன்னமும் இல்லை என்று எழுதியிருக்கின்றார். அதற்கு கொழும்பில் நடைபெறும் கண்காட்சிகளை உதாரணத்துக்கு இழுக்கின்றார். மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறுவதாயின் அதன் கருப்பொருள் நிச்சயமாக ஓவியர்களை தூண்டுவதாக இருக்கவேண்டும். அப்படியான கருப்பொருள்களை நினைப்பதே தடையாயிருக்க எங்கிருந்து வரும் ஓவியம் என்பதை அவர் எண்ணத் தவறிவிட்டார். இந்த கண்காட்சியை நான் பார்ப்பதற்கு சில நாட்களின் முன்னர் ஒரு ஓவியக் கண்காட்சியை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தேன். அதனை விட இந்த கண்காட்சி பலமடங்கு சிறந்ததாக இருந்தது என்பது என் எண்ணம்.

குறிச்சொற்கள்: , , ,

2 பின்னூட்டங்கள்

  1. Kanniappan சொல்லுகின்றார்: - reply

    வல்லைவெளி கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கொன்வே பிரச்சனை என்பது என்னவென்று புரியவில்லை. விளங்கச் சொல்லமுடியுமா?

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      யாழ்ப்பாணத்தில் 2006 இலிருந்து சில வருடகாலம் இருந்த ஒரு பிரச்சனை இது. இராணுவ வாகனத் தொடரணி ஒரு வீதியால் போகும் போது அவ்வீதி முழுவதுமாக பொதுமக்கள் பாவனைக்கு தடைசெய்யப்படும்.அப்பாதையினை குறுக்காக கடக்கவும் முடியாது. வாகனத்தொடரணி சென்றடைய வேண்டிய இடத்தை சென்றடையும்வரை பொதுமக்கள் வீதியின் இருமருங்கும் வீதியினை கடப்பதற்கு காத்திருக்க வேண்டும். சாதாரணமாக இக்காத்திருத்தல் 1 இலிருந்து 5 மணத்தியாலங்கள் வரை செல்லலாம். இதுவே கொன்வே பிரச்சனை.