கவிதை

நான் எழுதிய, வாசித்த மற்றும் இரசித்த கவிதைகள்.

ஐந்து கவிதைகள் – உமாஜிப்ரான்

வசந்தனுக்காக நிலம் சஞ்சிகையில் மேற்கண்ட தலைப்பில் வெளிவந்த உமாஜிப்ரானின் கவிதைகளை தருகிறேன்.

சுகம்
பல்லரும்பா மழலை
வாய்குதப்பும் கைவிரல்
முரசழுந்தும் குறுகுறுப்பு
காதல் கவ்விக் குதப்பும் மனங்களில்

உள்ளொளி
தெளிந்த ஆழ் சுனைமனதில்
அலைகிளா அமிழ்ந்தாய்
அதிர்வுசூழ் கவிதையென
உன் சிறுசலனமும்
குமிழ் பெருக்க
சுனைமனது நுரைபூக்கும்
கவிதை கவிதையாய்.

காமம்
1
பாத்தியில் விழுந்து
தெறிக்காது தவழ்ந்து
வடிந்தடங்கும் பக்குவமாய்.
2
தறிகெட்டு பாய்ந்து
பாத்திமேவி
பரவி வடிந்து
தேங்கி நாறும் சகதியாய்

காதல் வனைந்த வாழ்வு
மடியும் கன்றின் மூக்குமாய்
முட்டி முட்டி
உனதும் எனதும்
பார்வைகள் உமிந்தன
என்னையும் உன்னையும்
மிச்சமில்லாமல் கரைந்து
மிச்சமில்லாமல் நிறைந்து போனோம்
சருமத் துவாரங்களில் காதல்வழிய
வெள்ளொளியும் வாசமுமாய் விகசித்தோம்
முழுநிலவின் முகமெனச் சுடர்பொலியும்
உன் மனதில்
நிலவில் ஒளவையென
நித்தியம் என் சீவியமென்று
உச்சிக்கபாலத்தில் எழுதினோம்
ஒருவருக்கொருவர்

அலைப்புறும் மயிர்க்கீற்றுகள் ஒதுக்கி
கைகளில் ஏந்தி
கதுப்புகளில் புதையுண்டு
தழுவும் கணப்புகள் தணிவதேயில்லை.
காதலின் சுட்டுவிரல் பற்றி
வாழ்வின் வசீகரப்பொழுதுகள் நடையிட
வாழ்வு காலெடுத்த தடங்களில்
பசுந்தங்கப் படிவுகள்.

பூக்கவ்விய நாய்
பூக்கவ்வி
சலிக்காத வாலசைத்து
தெருவெல்லாம் முகர்ந்தலைந்தேன்

புழுதிபடல் நீள் தெருவில்
காத்திருந்து
வால்குழைத்துக் கால்சுற்றி
சிணுங்கினேன் செல்லமாய்,
பரிவொளிரும் பார்வை கொண்டு
மிருதுவாய் மனசளைந்து
கைசொடுக்காது கடந்து போனாய்
காட்சிகள் நீரில்மூழ்க

திருக்கோவில்களில்
நூலணிந்த கைகூப்பி
நீறணிந்து தொழுதழுது
சலிக்காது வாலசைக்கும்
பூக்கவ்வி.

10 கார்த்திகை, 2006

கவிதைகள்

எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
எப்போதும் நான் சிந்தித்ததில்லை
ஆனால்
கவிதைகள் எனக்கு பிடிக்காமல்
போனபோது கொஞ்சம்
யோசித்துப்பார்த்தேன்

கவிதைகளை எனக்கு
மிகவும் பிடித்திருந்தது
அப்போது நான்
கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லை
கவிதைகள் என்றால்
புல்லரிக்கும் எனக்கு
அப்போதெனக்கு
கவிதைகள் புரிவதேயில்லை.
கவிதைகள் புரியத்தொடங்கியபோது
கவிதையே வாழ்க்கையானது

கவிதைகளை நான்
கிறுக்கத் தொடங்கிய போதுதான்
கவிதைகள் கொஞ்சம்
உதைக்கத் தொடங்கியது
கவிதைகளை நான்
யோசித்தபோது
கவிதைகள் எனக்கு
வெறுக்கத் தொடங்கியது
கவிதைகள் எனக்குள்
தானாய் வந்தபோது
கவிதைகள் எனக்கு
சுத்தமாய் பிடிக்காமல் போனது.
ஏனென்றால் கவிதைகள்
உண்மைகளை சொல்லிவிடுகின்றன
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
நான் சிந்திப்பதேயில்லை.

8 ஐப்பசி, 2006

முட்டைவாசிகள்

அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள் நூலை நேற்றுத்தான் ரசிக்கக் கிடைத்தது. முதற்பதிப்பு 1995 இல் வெளிவந்தது. 23 தலைப்புகளில் கவிஞர்களின் சுருக்கக் குறிப்புக்களோடு அவர்களின் கவிதைகளின் ஆழமும் அழகும் தெளிவுறச்சொல்லப்பட்டிருந்தது. பப்லு நெருடா ஹைக்கூ கவிஞர் மொரிடாகே போன்ற கவிதை உலகிற்கு பிரசித்தமானவர்களும் அடக்கம்.

பேசாமல் இருப்பதன் மூலம்
சொற்களின் எல்லையை
மௌனத்தை
எட்டிப்பிடிக்கின்றேன்.
பப்லூ நெருதாவின் அழகிய கவி வரிகள் ஆழத்தையும் அழகாய் விளக்குகிறார் அப்துல் ரகுமான்.

இந்த அழகிய பூக்களிடையே
ஒரு மரங்கொத்தி தேடுகிறது
செத்த மரத்தை
விமர்சகர்களை குறிவைக்கும் இந்த ஹைக்கூவை நீங்கள் கேள்விப்படாமல் போயிருக்ககூடும்.

இயேசுவைப்பற்றிய இவ்வளவு அழகான கவிதையை நான் ஒரு போதும் கேட்டதில்லை
இத்தகைய இரக்கமுடைய
நிலத்தை
யாராவது கண்டதுண்டா?
இங்கே முள்ளை விதைத்தால்
ரோஜா முளைக்கிறது.

சார்லஸ் மிங்கசின் வினோதமான கற்பனைகளை எமக்கும் ஊட்டுகிறார் நூலாசிரியர்
இறந்துபோன மயானங்களில்
எல்லா இடங்களிலும்
இறந்தவர்கள்
உயிருடையவர்களை
அமைதியாக
புதைத்துக்கொண்டிருப்பார்கள்
எப்படி இருக்கிறது இது?

காதல் பற்றி ஹாரிட்க்ரேன் சொல்வதை பாருங்கள்
சிறுநீர்த்தொட்டியில்
வழுக்கிச் செல்லும்
எரிந்த தீக்குச்சி
காதல்
கொஞ்சம் திகைக்கவும் யோசிக்கவும் வைக்கிறது.

கவிதை ஆர்வலர்கள் வாசிக்க நல்ல நூல் என்று நிச்சயமாய் சொல்லக்கூடிய நூல். வாசித்துத்தான் பாருங்கள். (காசு குடுத்து வாங்கி வழமைபோல)

8 ஐப்பசி, 2006