கவிதை

நான் எழுதிய, வாசித்த மற்றும் இரசித்த கவிதைகள்.

நட்பல்லாதது

இருட்டுக்களோடு
வாழப்பழகியவன் நான்
குருடனென்று
நினைத்தோருமுண்டு பெரும்
வீம்பனென்று
கதைத்தோருமுண்டு
அவர்களுக்கெப்படித் தெரியும்
அவர்கள் வெளிச்சங்களும்
இருட்டுக்கள் தானென்று….

மெல்ல மெல்ல
சொல்லிக்கொடுத்தீர்கள்
வெளிச்சம் இதுதான் என்று
காட்டியும் தந்தீர்கள்
கீழே விழுந்து விடுவாய்
கையைப் பிடித்துக்கொள்
என்றீர்கள்
வேண்டாமென்று மறுத்த போதெல்லாம்
உன்னிலும் உன்னை
நன்கறிந்தோம் என்றீர்கள்
உன்னால் முடியும் என்றீர்கள்
உவகை கொள்ள வைத்தீர்கள்

ஒரு கணமெனக்கும்
நினைக்கத் தோன்றியது
உண்மையில் அது வெளிச்சம் தானென்று
ஆதரவாய் அழைத்து வந்தீர்
வரைவிலக்கணங்கள் சொல்லி வைத்தீர்
அத்தோடுவெளிச்சம் அதிகம் என்பதால்
கண்களையும் மூடிக்கொள் என்றீர்கள்…..
இருட்டுக்களோடு
வாழப்பழகியவன் நான்…..

7 ஐப்பசி, 2006