Posts Tagged "சி. கணபதிப்பிள்ளை"

திருவருட்பயன் – பண்டிதமணி

பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை போன ஆடி மாசம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்துது. நூலுக்கு பெயர் உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் மூலமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் செய்த உரையும். இது நாள் வரைக்கும் பண்டிதமணி ஒரு உரையாசிரியர் எண்ட விசயம் எனக்குத் தெரியாமலே இருந்துது (எனக்கு பல விசயங்கள் தெரியாதெண்டது உண்மைதான்). பண்டிதமணி இலக்கியக் கட்டுரைகளும் சமயக்கட்டுரைகளும் மட்டும்தான் எழுதிறவர் எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். அவர் எழுதியிருந்த சில பழந்தமிழ் சமைய நூல்கள் சார்பிலான கட்டுரைகளும் விளக்கவுரைகளும் அவரை ஒரு உரையாசியர் என்ற அளவில் கருதுமளவிற்கு இருக்கவில்லை.

இந்த புத்தகத்தை வாசிச்ச பிறகு அப்பிடி சொல்லேலுமோ?? நீங்களும் ஒரு பகுதியை பாருங்கோ.

எமக்கெ னெவனுக் கெவைதெரியு மவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

(எமக்கு என் தெரியும், எவனுக்கு எவை தெரியும், அவ்வத் தமக்கு அவனை, வேண்டத் தவிர்)

எமக்கு என் தெரியும் – ஞான சந்ததியில் உன் முன்னோராகிய எமக்கு உனக்கு உணர்த்துமாற்றில் என்ன தெரியும்,
எவனுக்கு எவை தெரியும் – அறிந்தோ ரெனப்படுவாருள் எவனுக்கு உய்யுமாறுகளில் எவை தெரியும்,
அவ்வத் தமக்கு அவனை – வெவ்வேறு பந்த நிலையிலுள்ள ஆன்மாக்களுக்கு அவ்வந் நிலைக்குத் தக்கபடி உணர்த்தவல்ல தம்முதலாகிய அருட்குருவை,
வேண்டத் தவிர் – பெறும்படி காத்திரு, மற்றவை அனைத்தையும் விடு, குருவின் பொருட்டே இவ்வுலகில் தங்கு.

“எமக்கென் தெரியும்” என்றார் ஞான சந்தான முதல்வர் ஆலமர் கடவுளாதலின்

“என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி
என்னறிவி லாரறிக என்றொருவன் – சொன்னபடி
சொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்
சொல்லக்கேள் நானுனக்கச் சொல்.”

என்னுந் திருக்களிற்றுப்படியார் காண்க.

“எவனுக்கு எவை தெரியும்” என்றார், ஓரான்மா தன்னைப்பற்றிய இருளைச்சார்ந்தறிதலும் இருணீங்கிய வழி ஒளியைச்சார்ந்தறிதலும் அன்றி வேறறிவு அதற்கின்மையின், பிறிதோரான்மாவிற்கு வேண்டியவைகளை அது அறியாதாதலின், அவ்வவ்வான்ம நிலையை அறிந்தருளவலல முதல்வனே வெளிப்பட்டுபகரிப்பனாதலின் அவ்வத் தமக்கு அவனை வேண்ட என்றார்.

இந்தப் பூமியிலே மானிடப்பிறவியிலன்றி ஞானம் வராதென்ப.

“தவஞ்செய்தா ரென்றுந் தவலோகஞ் சார்ந்து
பவஞ்செய்து பற்றறுப்பா ராகத் – தவஞ்செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு”

என்பது சிவஞானபோத வெண்பா. சகலர்க்குப் பூமியில் குருவாக வந்து முதல்வன் உபகரித்தல் இன்றியமையாமையின் “வேண்டத்தவிர்” என்றார்.

ஏனைய நல்வினைகள் பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் ஆதலின் சிவபுண்ணியங்கள் இறப்பில் தவம் எனப்படுவன. சரியை கிரியை யோகங்களுக்குச் சிறந்த பயன் ஞானமே.

“சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு”

என்றவாறு குருவின் உபதேசத்தாலன்றி ஞானமாகிய தெளிவு பிறவாது. முனிவர்கள் ஆலமர் கடவுளுடைய சின் முத்திரையினாலேயே ஞானமெய்தினரென்ப. “சரியை கிரியா யோகங்களைச் செய்துழி அவை ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா வாகலன்” என்பது சிவஞானபோதம்.

ஞானமும் அதனை யருளுகின்ற ஞானகுருவுமன்றி எடுத்த பிறப்புக்கு வேறுபயன் யாது மில்லையாதலின், “தவிர்” என்றார்.

இருப்பதாயின், அருட் குருவை வேண்டி இருக்குக.

எப்படி இருக்கிறது பண்டிதமணியின் உரை ????

8 ஐப்பசி, 2007

கவிஞர்கள்

இது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையாகும். இலக்கிய வாசிப்பில் விருப்புடையோருக்காக இங்கே பதிவாகின்றது.

கவிதைகள் புத்தக வடிவத்திலும் பத்திரிகைகளிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கவிதை விமரிசனங்களும் நடக்கின்றன. மேலைத்தேசத்திலே ஒருவர் ஒன்று செய்தால் அதற்கு நூறு விமரிசனம் வந்துவிடும், இங்கே அவ்வளவு தூரம் அந்தத்துறை விரியவில்லை என்று ஒரு விமரிசனர் அழுகின்றார். பாவம் இனி அவர் கண்ணீர் வடிக்க வேண்டா. தினசரிப்பத்திரிகைகளிற் கூட ஒரு பகுதி கவிதை விமரிசனத்திற்கென்றே ஒதுக்கப்படுகின்றது. விமரிசனம் இதோ பெருகிவிடும். பயம் வேண்டா. ஆனால் உண்மைக்கவிதை ஏனைய வரிசையில் இருந்து உயிர்தப்புமோ என்றுதான் அச்சம் வருகின்றது. கவிதைப்பெருக்கும் விமரிசனப்போக்கும் மாற்றுயர்ந்த பொன்னையும் காக்காய்ப்பொன்னையும் ஒன்று செய்து விடுமோ என்றுதான் எச்சரிக்கை விடுக்கவேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

” கவிகள், அதாவது கவிஞர்கள் உண்மையைச் சிந்தித்துக்கொண்டு சொல்வதில்லை. உண்மைக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். அவர்களால் நாட்டுக்கு பெருந்தீமை உண்டாகின்றது. அவர்களை அரசாங்கம் நாடுகடத்த வேண்டும்.”

என்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே, கிரேக்க தேச பேரறிஞரான பிளேற்றோ ஒரு பெரிய எச்சரிக்கை செய்திருக்கிறார். பிளோற்றோவின் எச்சரிக்கை நவீன விமரிசகர் சிலருக்கு பெரிய தலையிடியை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றது.

விமரிசகர்கள் பேரறிஞரான பிளேற்றோவைத் திட்டி வீண்பழி சுமத்தாமற் கவிதையையும் கவிஞர்களையும் வரிசை செய்து, தராதரங்களை ஆராய்ந்து, பிளேற்றோ வெறுக்கும் கவிகளை கண்டறிவதில் தமது விமரிசனத் துறையை விரிப்பது நன்று என்று தோன்றுகின்றது.

தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார், “நாம் எண்ணுகின்ற கேட்கின்ற கருத்துக்களை அப்படியே கொள்ளாமல், அக்கருத்துக்களை முதலில் ஐயுற்று பின் ஆராய்ந்து தெளிந்து, மெய்யான மூலக்கருத்தை அறிதல் வேண்டும்” என்று உண்மைக்கருத்தை காண்பதற்கு ஒரு சட்டம் வகுத்திருக்கின்றார்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

“ஐயத்தி வீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து”

என்பன உண்மையைக்காண வகுத்த வழிகள்.

ஒரு வீரன் தயைகாட்டாமற் பகையை கொன்று குவித்தல் பேராண்மை. ஆனால், பகைவனுக்கு நினையாப்பிரகாரம் ஓர் இடையூறு நேர்ந்தால், உடனே அந்த வீரன் தன் பகைவனுக்கு உபகாரியாய் மாறவேண்டும். அது பேராண்மையாகிய வீரத்தின் சிகரமாயிருக்கும்.

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு”

உபகாரியாய் மாறுதல், “பேராண்மை” என்ற வாளின் கூராயிருக்கும், என்றும் சொல்லலாம். வீரத்தைப்பற்றிய இந்த உண்மை திருவள்ளுவ நாயனாரின் தெய்வப்புலமையிற் கண்டது. இப்படியான அனேக உண்மைகள், இமாசலத்திலே மருந்துப்பூண்டுகள் பரவியிருப்பதைப்போலத் திருக்குறளாகிய பாற்சமுத்திரத்தில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அதுஅது கைவந்தவர்கள் அதில் அதில் ஈடுபட்டவர்கள் அதை அதைத் தம் வல்லமைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளுகின்றார்கள்.

கம்பர், வள்ளுவர் கண்ட வீரசிகரமான அமிர்த தாரையில் ஈடுபாடுற்று, அந்த வீரதீர அமிர்த தாரையை ஒரு சற்பாத்திரத்திலே ஏந்தி எடுத்து, வெகு பக்குவஞ்செய்து, அந்த உண்மையை ஒரு அமிர்த சஞ்சீவியாக்கி இந்த உலகுக்கு வழங்கியிருக்கின்றார். அந்த அமிர்த சஞ்சீவிதான் பின்வரும் பாட்டு:

ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

தன் மனை வாழ்வுக்கு கேடு சூழ்ந்த மகாதுரோகியும் பராக்கிரமசாலியுமான இராவணன் நிராயுதபாணியாய், இருபது கைகளுந் தொங்கப் பத்துத் தலைகளுங் குனிந்து நாணி எதிரில் நிற்கின்றான். அவனை கொன்று குவிக்க அது நல்ல சமயம். சிறீராமன் தன் வீரத்துக்கு மறுச்செய்யவில்லை. உடனே உபகாரியாய் மாறி, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று அவனுக்கு உயிர்ப்பிச்சை வழங்கி, வீரசிகரத்தில் வள்ளலாய் விளங்குகின்றான். வள்ளுவர் கண்ட உண்மையைச் சற்பாத்திரமாகிய சிறீராமனில் வைத்துப் புனைந்து சொல்லுவது ‘தகும் தகும்’ என்று ஒப்புக்கொள்ளுகின்றது புலமையுகம். அதனாலே கம்பர் சாதாரண கவிச்சக்கரவர்த்தியாயினார். கம்பர் தாமாக ஓர் உண்மையை காணாமலிருத்தல் கூடும். ஆனால், வள்ளுவர் உள்ளிட்ட மகான்கள் கண்ட உண்மையைப் பேணி வியந்து பயன்படுத்தியிருக்கின்றார். பேணிப் பயன் செய்த பெருமை கம்பருக்குண்டு.

மூலிகைகளைக் கண்ட சித்தர்கள் பெரியவர்கள். அம்மூலிகைகளின் அருமை அறிந்து பயன்படுத்துகின்ற சித்த வைத்தியர்கள் அவர்களுக்கு அடுத்த படியில் வைத்து எண்ணத்தக்க பெரியவர்கள்.

அவ்வாறே, திருவள்ளுவரும், சங்கத்துச் சான்றோர்களான புலவர்களும் பெரிய உண்மைகளைக் கண்ட மிகப்பெரியவர்கள். அவ்வுண்மைகளில் ஓரோவொன்றைப்பயன் படுத்துகின்ற கவிச்சக்கரவர்த்திகள் அடுத் படியில் நிற்கும் பெரியவர்கள்.

புலவர்களை அடுத்து கவிச்சக்கரவர்த்திகள்; அவர்களை அடுத்து சாதாரண கவிஞர்கள் இருக்கின்றார்கள். வள்ளுவர் கண்ட உண்மையைக் கம்பர் கண்டு வியந்து புனைந்தார். அந்த ஆற்றல் சாதாரண கவிஞர்களுக்கு இல்லாமல் இருக்கும். ஆனால், தமது அறிவின் எல்லைக்குள் அகப்பட்ட சாதாரணமான கருத்துக்களையும் இயற்கை அழகுகளையும் சனங்களை வசீகரிக்கத்தக்க வகையிற் சொல்லுகின்ற ஒரு சாமர்த்தியம் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.

மஞ்சட் குளித்து முகமினுக்கி நல்ல
மாயப் பொடிபூசி நிற்குநிலை
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ
கண்ணீ ருருக்குமோ ஆரறிவார்.

இது கவிஞர் ஒருவரின் கற்பனா சாமர்த்தியம். சூரியகாந்திப்பூ முகம் மலர்ந்து மஞ்சள் மகரந்தந் தோய்ந்து, சூரியன் செல்லுந் திக்கை நோக்கித் தவம் கிடக்கின்றது. இந்தக் கள்ளத் தவத்தைச் சூரியன் உண்மைக் காதலியாகிய கமலமலர் கண்டாற் சிரிக்குமோ! அழுமோ! ஆரறிவார்!!

வண்ணானில் மொழிகேட்டு வனம்விடுத்த சீதைதனை
இந்நாளுந் தேடுதல்போல் இருங்குரங்கு நெருங்கிடுமே.

இது மற்றொரு கற்பனை. அழகிகள் காட்டு வழியிற் சென்றால் அங்குள்ள குரங்குகள் நெருங்கி எட்டிப்பார்க்கின்றன. வாண்ணான் ஒருவனின் வார்த்தையை நம்பி, இந்த இராமன் சீதையைக் காடுகாட்டின கொடூரம், இன்னுங் குரங்குச் சந்ததிகளை வருத்திக்கொண்டிருக்கின்றது போலும்.

பள்ளு நாடகங்கள், குறவஞ்சிகள், எத்தனையோ வகையான நாட்டுப்பாடல்கள், பரணிகள் என்றிவைகள் சாதாரண கவிஞர்களின் கவிதா சாமர்த்தியங்கள். இவைகள் பெரிய இலட்சிய உண்மைகளைச் சாதியாமல் விட்டாலும், மனிதனுக்கு ஒருவகை களிப்பை ஊட்டி, நல்ல அமைதியான பண்பாட்டை வருவிக்கின்றன; அன்றி அவனை, பெரிய உண்மைகளை கொள்ளுதற்கேற்ற கொள்கலமும் ஆக்குகின்றன. சாதாரண கவிஞர்கள், முற்றத்தை அழகு செய்கின்ற பூந்தோட்டம் போன்றவர்கள். இவர்களும் ஒரு நாட்டின் அழகுச் செல்வங்களே.

கவிஞர்களுக்கு மேலே கவிச்சக்கரவர்த்திகள், அவர்களுக்கு மேலே சான்றோர்களான புலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை பிளாற்றோ நிந்திக்கவும் இல்லை; நாடுகடத்தவும் இல்லை. பிளேற்றோ சீறிப்பாய்கின்ற கவிஞர்கள், மேலே காட்டப்பட்ட முத்திறத்தவர்களும் அல்லாதவர்கள். அவர்கள் கவிதை வெறியர்கள். பாடாமல் இருக்கமாட்டாதவர்கள். பாடுகின்ற பைத்தியம் உள்ளவர்கள். பாவம்! அவர்கள் நன்றாகப் பாடலாம். அவர்களை யாருந் தடை செய்ய மாட்டார்கள். அவர்களுக்குச் சனநாயக உலகத்தில் பெரிய செல்வாக்கும் இருக்கின்றது. அவர்கள் ஓயாமற் பாடலாம். ஆனால், அவர்கள் தயைகூர்ந்து தம்மறிவின் எல்லையுள் அடங்கி நின்று பாடுதல் வேண்டும்; ஒரு பட்சியைப் பாடலாம்; மரஞ்செடிகளைப் பாடலாம்; காலைமாலைகளை வருணிக்கலாம். கடற்கரை குளக்கரை மற்றும் சோலைகள் மலைகள் யாவற்றையும் அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். பிளேற்றோ தடுக்க மாட்டார். ஆனால் கவிதை வெறியர்கள் அவ்வளவில் அடங்குவார்களா? தங்கள் தலைக்கு அப்பாற்பட்ட விடயம், தலைக்குள் அடங்கின விடயம் என்ற பேதம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு எல்லாம் அபேதமே. கடவுள், வண்ணத்துப்பூச்சி, காதல், சமயம், தத்துவம், அரசியல் முதலிய எல்லாவற்றையும் அவர்கள் பாடிவிடுவார்கள். பாமர சனங்கள் கூடுமிடம் அவர்களுக்கு கவியரங்கமாயிருக்கும். சனநாயக அரசியலின் வேரை அசைத்து விடுவார்கள் அவர்கள். அதுதான் பிளேற்றோவுக்கு கோபம். ஒரு பொறுப்புள்ள சிறிய உத்தியோகத்தைக் கூட ஒரு நிமிட நேரம் வகிக்க முடியாத கவிதைவெறியர்கள் அரசாங்கத்துக்கு கவிதை பாடுகின்றார்களே. அவர்களை நாடுகடத்தாமல் என்ன செய்வது? என்கின்றார் பிளேற்றோ. பிளேற்றோவில் என்ன குற்றம்?

பாட்டுப் பாடுகின்றவர்கள் இன்னும் ஒரு பகுதியார் இருக்கின்றார்கள். அவர்கள் கடிய கொடிய வித்துவான்கள். அவர்களுடைய கருத்தை பிளேற்றோ மதிப்பார். ஆனாற் கருத்து புலப்படுவதில்லை. சிறிது நாட்பட்டால், பாடிய அவர்களுக்கே கருத்து கலங்கிப்போகின்றது. இப்படிப்பட்ட பாடல்களை அச்சிட்டு பரப்பாமல் இருப்பது புண்ணியம். வித்துவான்கள் தங்கள் கருத்துக்களை வசனநடையிற் சொல்லிவிடலாமே என்று கவிதா சாமர்த்தியம் வாய்ந்தவரான மகாலிங்கசிவம் அடிக்கடி சொல்லுவதுண்டு. கவித்துவம் அற்ற கவிதைகளைக் காணக் கேட்க அவரால் முடிவதில்லை; கூசுவார்.

இப்பொழுது வித்துவத்திறமை, கவித்துவம் இரண்டும் சூனியமான மற்றொரு பகுதியாரும் பாட முயற்சி செய்கின்றார்கள். அவர்களுக்குப் பணப்பஞ்சத்திலும் சொற்பஞ்சம் மகாமோசம்.

பச்சைக்குழந்தைகளின் செவியையும் நாவையும் அந்த சொற்பஞ்ச பாடல்கள் – ஓசை கெட்ட பாடல்கள் – கெடுத்தே விடும். சொல்லுஞ் சொல்லும் பொருந்தும் பொருத்து, பாலும் பாலும் பொருந்தும் பொருத்தாயிருக்க வேண்டும். ஓசையைப் பாட்டிற் கட்டக்கூடாது. பாட்டிலிருந்து ஓசை வரவேண்டும். “இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்” என்ற திருப்புகழை எடுத்துப்பார்க்க மேற்காட்டிய இரண்டும் புலனாகும். இரண்டுங்கெட்ட பாடல்களைப் பாடாமலிருக்க வேண்டுமென்று அரசாங்கம் கடுஞ்சட்டம் விதிக்க வேண்டும்.

ஆறு பகுதியான பாட்டுக்காரர்கள் இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கின்றார்கள். ஆறாவது பகுதியினர் வெகு மோசமானவர்கள். ஐந்தாவது பகுதியினர் கவித்துவம் இல்லாதவர்கள். நாலவது பகுதியினர் மகாவித்துவ சாமர்த்தியம் உள்ளவர்கள்; ஆனால் நாட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள். மற்றையோர் படிப்படியே உயர்ந்தவர்கள். சங்கத்துச் சான்றோர்கள் “பொய்யடிமையில்லாத புலவர்கள்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாராட்டப்பட்டிருக்கின்றார்கள்.

6 ஆடி, 2007

ஈழத்து இலக்கிய வழி

இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.

தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலே தமிழரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்று பெயர் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை தமிழரசர்கள் நீண்டகாலம் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தார்கள். பரராசசேகரன் என்ற தமிழரசன்காலம் சுட்டியுணரத்தக்க சிறப்பு வாய்ந்தது. அவனுக்கு உறவினன் செகராசசேகரன். மருகன் அரசகேசரி. இவர்கள் காலத்திலே யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. நல்லூர் இராசதானி. சங்கத்திலே புலவர்கள் பலர் அங்கத்தவர்களாய் இருந்தார்கள். தமிழ் இலக்கண இலக்கியங்களே யன்றி சோதிடம் வைத்தியம் முதலியனவும் வேறுபல கலைத்துறைகளும் அந்தச் சங்கத்தால் வளர்க்கப்பட்டன.

நல்லூருக்கு அண்மையிலே நாயன்மார்கட்டு என்ற இடத்திலே வயல்களுக்கு மத்தியில் அழகியதொரு தாமரைத்தடாகம் இருக்கின்றது. அத்தடாகத்துக்கு தென்மேற்கு மூலையிலே ஒரு மேலடுக்கு மாளிகையில் அரசகேகரி வசித்து வந்தார். அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மகாவித்துவான். தமிழிலே அவரியற்றிய இரகுவமிசம் என்ற காவியம் வடமொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிரகுவமிசத்தை மேலே குறிப்பிட்ட மாளிகையிலிருந்து அரசகேசரி இயற்றினாரென்றும், நல்லூரிலுள்ள தமிழ்ச்சங்கத்திலே பரராசசேகரன் முன்னிலையில் அரங்கேற்றினார் எனவும் கூறுவர்.

இந்த இரகுவமிசத்தை பரிசோதித்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளை. அவர் அதனை பலருக்கு பாடம் சொல்லியும் வைத்தார்.

இரகுவமிசத்திலே அழகியனவுங் கடினமானவையுமான செய்யுள்களை தெரிந்து அவைகளை வடமொழி இரகுவமிசத்தோடு ஒப்பிட்டாராய்ந்து, அவற்றிற்கு ஒரு குறிப்புரையும் இயற்றி, இரகுவமிசக்கருப்பொருள் என்ற நூல் வெளியிட்டார் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். இந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழிலே தொடர்ந்து வெளிவந்தது.

வித்துவசிரோமணியையும் புலவரையும் தமது வித்தியா குரவர்களாக பெற்று, அவர்கள் வழியைத் தொடர்ந்தார் மகாவித்துவான் கணேசையர். ஐயர் அவர்கள் அரசகேசரி இயற்றி இரகுவமிசத்திற்கு ஒரு நல்லுரை கண்டிருக்கின்றார்கள்.

அரசகேசரியிலிருந்து நம் கண்முன்னிருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கியவழி தொடர்ந்து வந்திருக்கின்றது என்பது ஊகிக்கத்தக்கது. இந்த வழி இடையிடையே செடிகொடிகளால் மறைந்து தொடர்பு புலப்படாது போனாலும், வழியொன்று எவ்வாறோ தொடர்புற்று வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உண்டு.

அரசகேசரியிலிருந்து போர்த்துக்கீசர் காலம் முடிய ஒல்லாந்தர் காலம் வரை தமிழிலக்கிய வழி புலப்பாடிலதாயினும் ஆங்காங்கே புலவர்கள் தலைமறைவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெருஞ்சான்றாக விளங்குகின்றார் சின்னத்தம்பிப்புலவர். அவர்காலம் இற்றைக்கு 240 வருடங்களுக்கு முந்தியது. தக்கதொரு இலக்கண இலக்கிய வழியிலே புலமை கனிந்த பரம்பரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பிப்புலவர் என்பதனை அவரியற்றிய நூல்கள் கொண்டு சாதிக்கலாம். ‘கல்லாமற் பாதி குலவித்தை’ என்கின்ற பழமொழியும் ஒரு பரம்பரையின் ஆவசியகத்தை தெரிவிப்பதாயிருக்கின்றது.

மகாவித்துவசிரோரத்தினமாய் விளங்கியவரும், சொற்குற்றம் பொருட்குற்றம் முதலிய வழுக்களை நுண்ணிதின் ஆராய்ந்து தூய்மை செய்வதில் இணையற்றவரும், ஆதலினால் தோடஞ்ஞர் என்று பாராட்டப்பட்டவருமான சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், தம் மாணவரின் கசடுகளை போக்கி, அவர்களை இலக்கிய இலக்கண வரம்பில் நடத்துவதற்கு முதலில் படிக்கும்படி வதிக்கும் புத்தகங்கள் இரண்டு. ஒன்று மறைசையந்தாதி், சின்னத்தம்பிப்புலவர் இயற்றியது. மற்றையது கலைசைச் சிலேடை வெண்பா. மறைசையந்தாதியிலே புலவருக்கு ஆராமை அதிகம். அதில் வரும் சொற்கள் தொடர்களை அடிக்கடி சொல்லி சொல்லிச் சுவைப்பார் புலவர். தோடஞ்ஞரான புலவர் அவர்கள் கொண்டாடுவதிலிருந்தே மறைசையந்தாதியி்ன் தமிழ்வரம்பு மரபு எத்தகையது என்பது உணரத்தக்கது. (தோடம் – தோசம், ஞர் – அறிபவர், ஆராய்பவர்). சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய பறாளை விநாயகர் பள்ளுச் சாதாரண நாட்டுப்பாடல்களின் வரிசையில் வைத்து மதிக்கற் பாலது போன்று கல்லாதாரையும் இனிக்கச் செய்வதொன்றாயினும், அதன் செந்தமிழ் வளம் வித்துவான்கள் கைகூப்பி வணங்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

இவ்வாறான புலமை, அரசகேசரியிலிருந்து தொடங்கித் தலைமறைவாக நடந்துவந்ததொரு இலக்கியவழி, அடங்காது கிளர்ந்தெழுந்ததோர் எழுச்சியன் பெறுபேறேயாம்.

சின்னத்தம்பிப் புலவர் காலத்திலே ‘சிவராத்திரி புராணம்’ இயற்றிய வரதபண்டிதர் சுன்னாகத்திலிருந்தவர். ‘யாழ்ப்பாண வைபவம்’, ‘புலியூரந்தாதி’ என்னும் நூல்களியற்றிய மயில்வாகனப்புலவர் மாதகலிலிருந்தவர். பண்டிதரும் புலவரும் நிறைந்த புலமையுடையவர்கள். தலைமறைவாயிருந்து வந்த இலக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதிற் சந்தேகமில்லை.

சின்னத்தம்பிப் புலவருக்குப் பிறகு ஒல்லாந்தர் காலம் முடிந்து ஆங்கிலேயர் காலத்திலுந் தொடக்க காலம் வரை இலக்கண இலக்கிய பரம்பரைவழி மறைவாயேயிருந்தது. ஆயினும் ஒல்லாந்தர் காலம் ஆங்கிலேயர் காலம் ஆகிய இரு காலங்களி்ன் பொருத்தத்திலும் இருந்தவர் முத்துக்குமார கவிராயர். இவர் உடுவிலையும் சுன்னாகத்தையும் சேர்ந்தவர். இவருடைய புலமை சந்தர்ப்ப விசேடத்தால் மணலில் மூடுண்டு மூழ்கிப்போகாமல் திடீரென்று வீறிட்டெழுந்து பிரவாகித்து விட்டது. இவரியற்றிய நீண்ட ஆசிரிய விருத்தங்கள் தாயுமானவரின் விருத்தங்களே என்று சொல்லத்தக்க வகையிற் சற்றேனும் எடைவிடாமற் செந்தமிழ் வளங்கொழித்து ஒழுகி வழிபவை. இவர் காலத்திலேயே இருபாலையில் இருந்தவர் சேனாதிராய முதலியார். சிறந்த புலமை கனிந்தவர் முதலியார்.

முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார் இருவரும் யாழ்ப்பாணத்தின் இரு கண்கள். தமிழ் வளர்ச்சி தமிழிலக்கண இலக்கியவழி ஆகிய இவைகளின் இருபெருந் தந்தையர்கள் இவர்கள். ‘தக்கார்’ என்று வள்ளுவனார் வாயூறுகின்ற வார்த்தைக்கு பாத்திரமாகும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்து விட்டது. இந்த நாட்டிலே எச்சத்தால் உயர்ந்து விட்டார்கள் இவர்கள். எச்சம்- சந்ததி, வழி.

சி. வை. தாமோதரம்பிள்ளையைத் தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை என்று தமிழ் உலகு தலைமேல் வைத்து கொண்டாடும்படி வைத்தவர் முத்துக்குமார கவிராயர். கவிராயரின் எச்சம் தாமோதரம்பிள்ளை. எச்சம் என்பது இங்கே மாணவர் எனும் பொருட்டு. மாணவரும் புத்திரரே. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் கவிராயரின் உதிர பரம்பரையில் வந்தவர்.

கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையிற் செந்தமிழ் வசனநடையைத் தொடக்கிவைத்துச் செய்யுணடையிலிருந்து தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகாரசீலர் சிறீலசிறீ ஆறுமுகநாவலர் அவர்கள். நாவலர், சேனாதிராய முதலியாரின் எச்சம், மாணவர்.

நாவலர், பிள்ளை ஆகிய இவர்கள் காலத்திலே வேறு வித்துவ பரம்பரைகளும் மறைவிலிருந்து வந்தன என்பதற்கு உதாரணமாக ஆங்காங்கே பலர் பிரகாசித்துக்கொண்டிருந்தார்கள். உடுப்பிட்டியிலே சிவசம்புப்புலவர் இருந்தார். அவர் மாணவர் முருகேசபண்டிதர். பண்டிதரின் மாணவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர். நீர்வேலியிலே சிவசங்கர பண்டிதர் இருந்தார். இவர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் தருக்க சமய சாத்திரங்களிலும் மாமேதை. நாவலர் அவர்களுக்கு வலக்கரம்போலுதவியவர் இந்த சிவசங்கரபண்டிதர்.

சென்னை சர்வகலாசாலை தொடங்கியது 1850 இற்கு பிறகு. அதற்கு முன்னமே யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையிலே செமினரி என்று வழங்கிய கல்லூரியிலே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களும் நன்கு கற்பிக்கப்பட்டன. அங்கே படிக்கப் புகுந்தவர்களுட் பலர் முன்னமே மறைவிலிருந்த தமிழ்ப்புலவர்களிடம் இலக்கண இலக்கியங்கள் முறையாகக் கற்றுத் தெளிந்தவர்கள். அவர்கள் தமிழ்மயமாயிருந்து கொண்டே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களுங் கற்றார்கள். ஆகையினாலே, இந்த நாட்டுக்கேயன்றித் தாய்நாட்டுக்கும் வழிகாட்டிகளாய் அவர்கள் விளங்கினார்கள். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தமிழ்த்தொண்டு பிரகாசிப்பதற்கு வட்டுக்கோட்டைப் படிப்பு உறுதுணை புரிந்தது.

மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் அச்சிட்ட தமிழகராதி, அகராதிகளுக்கு வழிகாட்டியாய், வித்துவான்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது. ஒவ்வொரு சொல்லுந் தக்க பிரமாணங்கொண்டு தூய்மை செய்தது. இந்த அகராதியை ஆக்கியவர் நீதிபதி கதிரைவேற்பிள்ளை. இவர் சுன்னாகம் குமாரசாமிப்புலவர் தலைமையில் அறிஞர்கள் பலரின் உதவி கொண்டு இவ்வகராதியை ஒழுங்கு செய்தார். தமிழர் என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டவர் மல்லாகம் கனகசபைப்பிள்ளை. இந்நூல் தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு எழுதுபவர்களுக்கு அடிநிலையாய் உதவுவது. நியாயஇலக்கணஞ் செய்தார் வட்டுக்கோட்டை முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை. வீசகணிதம் செய்தார் சுதுமலை விசுவநாதபிள்ளை. இங்ஙனம் தமிழாக்கஞ் செய்தார் பலர்.

சி. வை. தாமோதரம்பிள்ளைதான் டாக்டர் சாமிநாதையரின் பழந்தமிழ்த்தொண்டுக்கு வழிகாட்டி. 1885 இல் தொல்காப்பியம் தாமோதரம்பிள்ளை பதிப்பு முழுவதும் உரையுடன் வெளிவந்துவிட்டது. ‘இலக்கண விளக்கம்’ , ‘வீரசோழியம்’ , ‘இறையனார் களவியல்‘ முதலியன அதற்குமுன்னமே தாமோதரம்பிள்ளை பதித்து விட்டார். 1885க்குப் பிறகு கற்றறிந்தோரேத்துங் கலித்தொகையை அச்சிடுகிற காலத்திலேதான், தாமோதரம்பிள்ளையைத் தொடர்ந்து அவருடன் பழகி அவர் தூண்டுதலாற் சாமிநாதையர் பதிக்கத் தொடங்கினார். ஐயர் அவர்களின் முதற்பதிப்பு சீவகசிந்தாமணி. 1887ம் ஆண்டிற் பதித்தது.

தாமோதரம்பிள்ளையின் சேனாவரையப்பதிப்பு வெளிவந்தது 1868ம் ஆண்டில். அப்பொழுது சென்னைப்புலவர் சிலருக்கு ஒருவகைக் கொதிப்பு உண்டாயது. அவர்கள் திரைமறைவிலிருந்து ஒருவரைத் தூண்டித் தாமோதரம்பிள்ளையைத் தூறறிக் கண்டனப்பத்திரிகைகள் விடுத்தார்கள். அதனைக்கண்ட ஆறுமுக நாவலர் அவர்கள் ‘நல்லறிவுச்சுடர் கொளுத்தல்’ என்ற துண்டுப் புத்தகத்தை வெளியிட்டு்த் தாமோதரம்பிள்ளைக்கு ஊக்கம் அளிததார்கள். அப்புத்தகத்தில் உள்ள சில வசனங்கள் ஈண்டு ஞாபகப்படுத்தத்தக்கவை.

“இச் சென்னை சர்வகலாசாலையிலே தலைமைத் தமிழ் வித்தியா போதகராயுள்ள கனம்பொருந்திய பார்சிவல் துரை யாழ்ப்பாணத்திலே தமிழ் கற்றுக்கொண்டவர். சென்னை நார்மஸ்கூலில் தமிழ் வித்தியா போதகராய் முன்னிருந்த மாசிறீ செளந்தரநாயகம் பி்ள்ளை அவர்களும் இப்போதிருக்கிற மாசிறீ வேலுப்பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்தவர்கள். இங்கிலீசினின்றுந் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ் நாடெங்குமுள்ள கெவர்மென்ட் பாடசாலைகளெங்கும் வழங்குந் தமிழ்ப் புத்தகங்களுக்கு ஆசிரியராகிய மாசிறீ விசுவநாதபிள்ளை யாழ்ப்பாணத்தவர்.

தமிழிலே ஹேமாத்திரிகற்பம், இரகுவமிசம், இராமேசர்பிள்ளைவிடுதூதூ, செகராசசேகரம், பரராசசேகரம், அமுதசாகரம், தக்சிணகைலாச புராணம், சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பரகிதம், புலியூர்யமகவந்தாதி, கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, திருவண்ணைக்குறவஞ்சி, திருமாவைக்குறவஞ்சி, திருநாகைக் குறவஞ்சி, திருநல்லைக் குறவஞ்சி, திருநல்லைக் கிள்ளைவிடு தூது, திருநல்லை வெண்பா, திருநல்லையந்தாதி, வேதாந்த செயஞ்சோதி, நியாயலக்கணம், வீசகணிதம், விரிவகராதி முதலியன யாழ்ப்பாணத்தாராற் செய்யப்பட்டன.

மதுரைச்சங்கத்தும், புதுவைச்சங்கத்தும், சென்னைச்சங்கத்தும் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய களத்தூர் வேதகிரி முதலியார் ‘உதயதாரகை’ப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்திய ‘யாழ்ப்பாணச் சிறப்பு’ என்னுங் கடிதத்தில் பிற பாசை கலவாது சுத்தச் செந்தமிழ் பேசுவோர் யாழ்ப்பாணத்தார்களே யெனவும் மற்றைத் தேசத்தார்களெல்லோரும் தமிழோடு பல பாசையும் கலந்து பேசுகின்றார்களெனவுங் கூறியிருக்கின்றார்.

சிதம்பரத்திலே ஞானப்பிரகாசம் எனுங் குளஞ்செய்தவித்தவரும், சமஸ்கிருதத்திலே பெளஷ்கராகம விருத்தி, சிவஞானபோதவிருத்தி, சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோகரத்நம், சிவாகமாதி மகான்மிய சங்கிரகம் என்பவைகளையும், தமிழிலே சிவஞானசித்தியாருக்கு ஓருரையும் இயற்றினவரும், திருவண்ணாமலை யாதீனத்திற் பலருக்குச் சைவாகமோபதேசஞ் செய்தருளியவருமாகிய சிறீ ஞானப்பிரகாச முனிவர் யாழ்ப்பாணத்தவர்.”

இவை நாவலர் எழுதியவை.

நாவலர் அவர்களை, ‘தமிழ்நாடு முழுவதும் இணையில்லாதவர்’ என்று, தாமோதரம்பிள்ளை எழுதியிருக்கின்றார். தமிழுக்குஞ் சமயத்துக்கும் உறையுளாய் அக்காலத்திலிருந்த திருவாடுதுறையாதீனம் முதலிய ஆதீனங்களும், தமிழை வளர்த்த இராமநாதபுர சமஸ்தானமும் நாவலர் அவர்களைப் பொன்னேபோற் போற்றியதை யாவரும் அறிவர்.

கற்றுணர் புலவ ருட்களிக்கும்
முற்றுண ராறுமுக நாவலனே

என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும்,

என்னுளங் குடிகொண் டிருக்கும்
முன்னுசீ ராறுமுக நாவலனே

என்று பிள்ளையின் தலைமாணவரான தியாகராச செட்டியார் அவர்களும் நாவலர் அவர்களை போற்றினார்கள்.

நாவலர் அவர்களுக்குப் பிறகு அவர் மாணவரான கோப்பாய் சபாபதி நாவலர் மதங்கொண்ட களிற்று யானைபோலத் தமிழ்நாடு முழுவதிலும் தமக்கிணையின்றித் திக்கு விஜயஞ் செய்து செந்தமிழ் மழை பொழிந்தார். அவரியற்றிய ‘திராவிடப் பிரகாசிகை’ யின் மிடுக்கு பதிற்றுப்பத்து என்கின்ற சங்கப்பாட்டின் மிடுக்கோடு ஒப்பிடத்தக்கது.

நாவலரின் மாணவரில் ஒருவர் காசிவாசி செந்திநாதையர். தமிழுக்குச் சாமிநாதையர் போலச் சித்தாந்தத்துக்குச் செந்திநாதையர் என்று பாராட்டும்படி அவர் திகழ்ந்தார். அவரியற்றிய நூல்கள் பல. நாவலர் வழியின் வழியில் வந்த நா. கதிரைவேற்பிள்ளை மாயாவாததும்சகோளரி சதாவதானி. திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் கணீர் என்ற பேச்சுத் தமிழுக்குக் கதிரைவேற்பிள்ளை தந்தை.

அரசகேசரியில் இருந்து தொடங்கிய இலக்கிய வழி சின்னத்தம்பிப் புலவரூடாக நடந்து, முத்துக்குமார கவிராயர் சேனாதிராய முதலியார் என்கின்ற இரு கிளைகளாய், எச்சங்களாலுயர்ந்து, வழிவழி சிறந்து வளர்ந்து வந்த வரலாறு ஒருவாறு காட்டப்பட்டது. சிறிய கிளைகளும் கிளைகளின் கிளைகளும் பல.

தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையரும் திருநெல்வேலித் தர்க்க குடார தாலுதாரி தம்பு என்பவரும் விவேகத்திற் சோழவந்தான் சண்முகம்பிள்ளைக்கு இளைத்தவரேயல்லர். ‘இராமநாத மான்மியம்’, ‘அருணாசல மான்மியம்’, ‘இலங்கை மான்மியம்’ என்கின்ற நூல்களியற்றிய சாவகச்சேரிப்புலவர் பொன்னம்பலப்பிள்ளையும், அளவெட்டியிற் சத்தா என வழங்கும் சற்குணசிங்கமும் புராணங்கள் காவியங்கள் இயற்றவல்ல செந்தமிழ்ச் செல்வர்கள். இன்னும் குடத்துள் விளக்கம் போலிருந்து போனவர் பலர்.

கவிதையுலகிற் சின்னத்தம்பிப்புலவர், முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார், சிவசம்புப்புலவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஐவரும் யாழ்ப்பாணத்தின் பஞ்சரத்தினங்கள்.

யாழ்ப்பாணத்திலே தமிழ்வளங்கும் ஈழமண்டலமனைத்தும் அடங்கும். வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் திருகோணமலை மட்டக்களப்பு எனும் இடங்களில் உள்ளவர்களும் இனத்தாலும் கல்வியாலும் யாழ்ப்பாணத் தொடர்புள்ளவர்களே. சுவாமி விபுலானந்தர் அவர்கள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்கின்ற வேற்றுமையின்றி யாழ்ப்பாணத்தவராயே வாழ்ந்தார்கள்.

இலக்கியவழியிற் சுவாமிகளின் பங்கு மிகப்பெரியது. சுவாமிகளின் செய்யுள்கள் அனைத்துந் தொகுத்து நீண்டதொரு விமரிசனஞ் செய்தல் வேண்டும். சுவாமிகளியற்றிய வெள்ளைநிற மல்லிகை என்ற பாட்டு தேசிய விநாயகம்பிள்ளையின் அம்மா வென்குது வெள்ளைப்பசு என்பதனோ டொப்பிடத்தக்கது. அதன் தத்துவக் கருத்து பாரதியாரின் தின்னப் பழங்கொண்டு தருவான் என்கின்ற கண்ணன் பாட்டை ஊடுருவுகின்றது. அஞ்சினார்க்கு சதமரணம் என்கின்ற குறள் வெண்செந்துறை வீரம்கொப்பளிக்கின்றது. அது மனோன்மணீயஞ் சுந்தரம்பிள்ளையின் சிவகாமி சரிதையோடொப்பிடற் பாலது. சுவர்க்க நீக்கப் பாடல் பாரதியாரின் குயிலேதான் என்று சொல்லத்தக்கது. ‘தாழ்ந்து மென்மொழி பகரந்திடேல்’ என்கின்ற கம்பீரமான பாட்டு – யூலியசீசர் கூற்றாய் வருவது, சீவகசிந்தாமணி பாடல்களோடு ஒப்பிடத்தக்கது. ‘துருவன் அனையன் ஒருவனீங் குளனால்’ என்ற சீசரின் தலையெடுப்பான கூற்று புறநானூற்று வரிசையை சேர்ந்தது. இவ்வாறே ‘சிலப்பதிகார’ த்தில் வரும் இனிய பாடல்கள் கலித்தொகைப்பாடல்கள் என்றிவைகளின் வரிசையில் வைத்து சுவைத்தற்குரிய சுவாமிகளின் பாடல்கள் எண்ணில. மட்டக்களப்பு வாவியின் மீன்பாடல் அழியாநிலை படைத்தது. இவ்வாற்றால் இலக்கியவழி சுவாமிகளை அணுகிய வழிப் புத்தம்புதியதொரு வழியாய் கீழிருந்து மேலே மெல்லென உயர்ந்து வீரங்கிளர்ந்து செல்வதனைக்காணலாம். அதனைச் சொல்லுவதொரு தனித்த விமரிசன நூல் மிகமிக இன்றியமையாதது.

ஈழமண்டலத்தின் இலக்கிய வழியிலே ஒழுகி வழிந்த இரசனைப்பெருக்கு ஒய்யாரமாய் எழுந்த விளையாடிய மலையடுக்கங்களுள் உயர்ந்து விளங்குவதோர் இராசசிகரம், நாவலர் அவர்களின் மருகரும் மாணாக்கருமாகிய பொன்னம்பலபிள்ளையே யாவார். அவரைப் ‘பொன்னம்பலப் பெயர்ப் புட்கலாவர்த்தம்’ என்று வர்ணிக்கின்றார் அவருடைய தலைசிறந்த மாணவரும் புலவருமான ஒருவர். புட்கலாவர்த்தம் – பொன்மழை பொழியும் மேகம்.

இப்புத்தகம் பொன்னம்பலப்பிள்ளையை மத்தியாக வைத்து அவர் காலத்து சிவசம்புப் புலவரையும் அதற்கு முன் சின்னத்தம்பிப்புலவர் பரியந்தமானவர்களையும் சிவசம்புப் புலவருக்குப் பின் நமது காலத்திலிருந்த சோமசுந்தரப்புலவர் மகாலிங்கசிவம் என்பவர்களையும் இலக்கியவழி ஊடுருவி நடப்பதை ஒருவாரு சுட்டிக்காட்டுவது. இவ்வாற்றால் ஈழமண்டலத்தின் இலக்கியப்புதையல் உற்று நோக்கத்தக்கது.

ஈழமண்டலம் தாய்நாடாகிய தமிழ்நாட்டின் ஒரு சிறுதுளி. தமிழ்நாட்டின் இலக்கியவளம் மகாசமுத்திரம். ஈழமண்டலத்திலக்கியவழி அந்த மகாசமுத்திரத்திற் சென்று சேராதாயின் நின்று வற்றி விடும். ஆகையினாலே இரட்டையர், காளமேகம், புகழேந்தி என்று தொடங்கிச் சிவகாமி சரிதைக்கு வந்து பின் மேலே எழுந்து கம்பரிலே சற்றுநேரந் தரித்துத் திருவள்ளுவரை வணங்கி நல்வாழ்வு பெற்றுக் கற்றோரேற்றும் கலித்தொகையைத் தீண்டி முற்றுகின்றது ‘இலக்கிய வழி’ எனப் பெயரிய இப்புத்தகம்.

பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நாடுவார்க்குஞ் சிறப்பாக ஈழமண்டலத்தின் இலக்கிய வளர்ச்சியை அறியலுறுவார்க்கும் இப்புத்தகம் உபயோகப்படும். இதற்கெழுதிய இரசனைக்குறிப்பையும் இலக்கிய வழியின் எச்சமாய் எஞ்சிய பகுதியைச் சிறிதே பூர்த்தி செய்யும்.

திருகோணமலை கனகசுந்தரம்பிள்ளை அவர்களும் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களும் ஒருதாய் வயிற்றில் ஒருங்கு பிறவாத இரட்டையர்கள். அவர்கள் தமிழிலக்கண இலக்கிய வழியிற் செய்த சேவை அதிகம். தாய்நாட்டிலே பழைய நூலுரைகள் பதித்தவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் உதவியவர்கள், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள்.

குமாரசுவாமிப் புலவர் அவர்கள் செய்த ‘தமிழ்ப்புலவர் சரித்திர’மும் அவர்களுக்கு முன் சதாசிவம்பிள்ளை இயற்றிய ‘பாவலர் சரித்திர தீபமும்’ புலவர் அவர்களுக்கு பின் மட்டக்களப்பு பூபாலபிள்ளை இயற்றிய ‘தமிழ் வரலாறு’ ம் படித்து, இந்த இலக்கிய வழி விரிவு செய்யற்பாலது.

இலக்கிய வழியிற் செல்பவர்கள், இலக்கியத்தினியல்பை யுணர்வது இன்றியமையாததாதலின், அவ்வழி மேலும் நடந்து, தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையை ஊடுருவி, இலக்கியத்தின் உயிரும் உடலிலும் சென்று முற்றுவதாயிற்று.

வருங்காலத் தமிழிலக்கிய உலகம் முந்தையோர் தந்த இலக்கிய வழியை மறந்து போகாமல் ஞாபகப்படுத்தவும், மேலும் வளர்ச்சிவழி வகுப்பதற்குத் தொடர்பு காணவும் உதவும் என்ற கருத்தால் இந்த முன்னுரை வளர்ந்திருக்கின்றது.

இலக்கிய வழி வளர்க, வாழ்க.

10 மார்கழி, 2006