Posts Tagged "தமிழ்"

கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பான்

கூகிள் நிறுவனத்தின் இலவச சேவைகளில் மிகவும் பயனுள்ளதான ஒரு சேவை மொழிபெயர்ப்பு சேவை ஆகும். வேறு மொழிகளில் உள்ள பதிவுகளை ஆங்கிலத்தில் மாற்றி பயன்படுத்த நான் அடிக்கடி இச்சேவையை பயன்படுத்துவதுண்டு. இன்று கூகிள் மேலதிகமான ஐந்து மொழிகளை அங்கு இணைத்துள்ளது. இவற்றுள் தமிழும் ஒன்று. இனிமேல் உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்லாமல் எந்ந ஒரு மொழியில் இருக்கும் இணையத்தளத்தையும் தமிழில் வாசித்து மகிழ முடியும். மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

22 ஆனி, 2011

அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார்

இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை இட்டிருந்தார். அதில் அவர்,

counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.

என்று எழுதியிருந்தார். அதற்கு பின்னூட்டமிட்டிருந்த இரா. செல்வகுமார்,

அன் விகுதி கொண்ட அஃறிணைக்கு நன்றாக அறிந்த வியாழன், கதிரவன் முதலியவற்றைக் கூறலாம். அரச மரத்தை அரசன் என்றும் கூறுவதுண்டு. நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உண்டு. காதில் அணியும் தோட்டுக்கு கடுக்கன். கடப்பமரத்திற்கு அடப்பன் என்று ஒரு பெயர் உண்டு. ஏன் கடன், என்னும் சொல்லைக் கூடச் சொல்லலாம். கூரன் என்பது ஒருவகையான நெல்லுக்கும், ஒரு வகையான நாய்க்கும் பெயர் . கூழன் என்பது ஒரு பலாப்பழ வகை. தட்டான் என்பது தட்டாரப்பூச்சிக்கு (தும்பிக்கு) வழங்கும் பெயர். முயலுக்கு செவியன் என்று ஒரு பெயருண்டு. கடுவன் என்பது பூனை, நாய், குரங்கு ஆகியவற்றின் ஆண். விரியன் என்பது ஒரு பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உள்ளது போலவே களவன் என்றும் ஒரு பெயருண்டு. சுழல் காற்றுக்குச் சுழியன் என்று பெயர். என்று பற்பல சொர்கள் உண்டு.

ஆன் என்னும் விகுதிக்குத் தட்டான் (தட்டாரப்பூச்சி). பல்லாங்குழியில் பயன்படுத்தும் காய்களுக்கு அலவான் என்று பெயர் (அலவுதல் = சுழலல், சிந்துதல், அலைதல்..) அடைப்பான் என்பது மூடி அடைக்கும் பொருள். இதே அடைப்பான் என்பது கால்நடைகளுக்கும், ஒரு நோய்க்கும் பெயர். சுக்கான் (ஒருவகைக் கல். இதனை சிக்கிமுக்கிக் கல் என்றும் சொல்வர்). காளான், பூரான், என்று பலவற்றைக் காட்டலாம்.

என்று கூறி இரவிசங்கரின் கருத்தை மறுத்திருந்தார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டு தனது வாக்கியத்தை கீழ் வருமாறு மாற்றியிருந்தார்.

இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.

ஒரு வரியில் சொல்லுவதானால் இரவிசங்கரின் சரியானதொரு கருத்தை இரா. செல்வகுமார் மிகப்பிழையானதொரு கருத்தூடாக மறுதலித்திருக்கிறார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார். செல்வகுமாரின் தவறு என்னவென்பதை பார்க்கும் முன்னர் விகுதி என்றால் என்னவென்றும், ஆன் விகுதி பற்றியும் பார்ப்போம். செல்வகுமாருக்கு விகுதி பற்றிய சரியாக விளக்கம் இன்மையே அங்கு சென்ற விவாதத்திற்கு காரணம் ஆகியுள்ளது.

விகுதி.

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப(ம்) மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் (ஓடு) உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ(ம்) மின் இர் ஈர்
ஈயர் க ய உம் என்பனவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.

என்று நன்னூல் விகுதி பற்றி பதவியலிலே சொல்லுகின்றது.

இது வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்.

இங்கே அன் மற்றும் ஆன் என்பது குறிப்பாய் ஆண்பால் படர்க்கைக்கே ஆனதென்று காண்டிகை உரை சொல்கிறது.

இங்கு செல்வகுமாரின் தவறு என்னவென்றால் அவர் குறிப்பிட்ட சொற்கள் விகுதிகளை கொண்டவை அல்ல. அவை அனைத்தும் ஒன்று காரண பெயர்கள் அல்லது இடுகுறி பெயர்கள். அனைத்தும் பெயர்ச்சொற்கள். எச்சங்கள் அல்ல. கொஞ்சம் குழப்பம் தரக்கூடிய அரசன் என்ற சொல் கூட ஆகு பெயரே என்றி அது அன் விகுதி கொண்ட அரசு அல்ல.

இங்குதான் இரவிசங்கரின் கருத்து வருகின்றது.

வடிகட்டுவான் என்ற சொல் வடிகட்டு என்பதன் “னவ்வீறு” சேர்ந்த ஆண்பால் சொல் என்பதே அதுவாகும்.

வடிகட்டி எனும்போது அங்கு சேரும் “இ” விகுதி ஒருமை முன்னிலைக்குரியது. இப்போது உங்கள் முன்னிருக்கும் வடிகட்டும் தொழில் செய்வோனுக்கு, அல்லது செய்பவளுக்கு, அல்லது செய்வதற்கு “இ” விகுதி சேர்த்து வடிகட்டி என்று சொல்லுவதே சரியாகும்.

அன் என்று முடிகின்ற எல்லா சொற்களும் “அன் விகுதி” கொண்டவை அல்ல. (முரளி மற்றும் செல்வகுமார் கவனிக்க) மாறாக அன்விகுதி கொண்ட எச்சங்களனைத்தும் ஆண்பால் படர்க்கையை குறிப்பன. இவ்வெச்சங்களும் பொருளால், இடத்தால், காலத்தால், சினையால், குணத்தால், தொழிலால் மற்றும் இடைச்சொல்லால் வரல் வேண்டும்.

22 ஆவணி, 2008

வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை

நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.

ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை கொண்டுவரும். இது எவ்வாறு நடைபெறுகின்றது என்று என்னால் முடிந்தவரையில் விளக்க முயற்சிக்கின்றேன்.

நீங்கள் வேரட்பிரஸை நிறுவும் போது அதற்குரிய தரவுத்தளம் தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டி இருக்கும். இத்தகவல்களே config.php என்கின்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.

இங்கு வேர்ட்பிரஸ் தனக்குரிய தரவுத்தளத்தை தானே உருவாக்காமல் எம்மை உருவாக்கி தருமாறு கேட்பதனால் நாமே அதனை உருவாக்க வேண்டி இருக்கின்றது. இங்குதான் முக்கியமான பிரச்சனை நேர்கிறது. அனேகமான வழங்கி வழங்குனர்கள் தரவுத்தள மேலாண்மைக்கு phpMyAdmin போன்ற சிறந்த மென்பொருள்களை வழங்கினாலும் தரவுத்தள உருவாக்கத்திற்கு அவ்வசதிகளை வழங்குவதில்லை.


இதனால் எம்மால் config.php இல் கீழே காட்டப்படுகின்ற MySQL charset, MySQL connection collation ஆகிய இரண்டு கட்டளைகள் தொடர்பாக கவனம் செலுத்த முடிவதில்லை. இவை இரண்டும் தன்னிச்சையாகவே latin1_swedish_ci ஒருங்கு குறியில் அமைக்கப்பெற்று விடுகின்றன. சிறந்தொரு தரவுத்தள உருவாக்க மென்பொருள் இருக்குமிடத்து எம்மால் இவற்றை நிச்சயமாக கீழே காட்டப்பட்டது போல கவனத்தில் எடுக்க முடியும்.

நிறுவல் முடிந்த பின்னர் தரவுத்தளம் latin1_swedish_ci ஒருங்கு குறியிலும் வேர்ட்பிரஸின் config.php பொதுவாக கீழ்வருமாறும் அமைந்திருக்கும்.

இதனை மிக இலகுவாக கீழ்வருமாறு ஒரு வரைபடத்தில் காட்டலாம்.

இந்த வரைபடத்தை பார்க்கும்போதே என்ன பிரச்சனை நேர்கிறது என்பது உங்களுக்கு இலகுவாக விளங்கிவிடும். (இதற்கு கீழ்வரும் பிரச்சனையை மிக இலகுவாக விளக்க முயற்சிக்கின்றேன்) இப்பொழுது நீங்கள் உள்ளிடுகின்ற தமிழ் எழுத்துக்கள் தரவுத்தளத்திற்கு செல்கின்றன. தரவுத்தளத்துடன் தொடர்புகொள்ளும் ஒருங்குகுறி என்னவென்பது குறிப்பிடப்படாததால் தரவுத்தளத்தில் அவ்வாறே சேமிக்கப்படுகின்றன. இப்பொழுது நீங்கள் வேரட்பிரஸை சிறிது மேம்படுத்துகிறீர்கள் (2.2—2.2.1). இப்பொழுது ஆரம்பிக்கிறது பிரச்சனை. இந்தப்பிரச்சனை உங்கள் எழுத்துக்கள் பூச்சிகளாக தரவுத்தளத்தில் மாறாது ஆனால் உங்கள் வெளியீடு பூச்சிகளாக தெரிகிறது. இதற்கு தீர்வுதான் ரவிசங்கர் குறிப்பிட்ட முறை.

தரவுத்தளத்தின் ஒருங்குகுறி தொடர்பான தகவல்களை config.php இல் நீக்கிவிடல்.

சரி அப்படியானால் எனக்கு என்ன பிரச்சனை வந்தது.

வேர்ட்பிரஸ் 2.5 இன் தரவுத்தளக்கட்டமைப்பு வேர்ட்பிரஸ் 2.2 இனை விட மிகவும் வேறுபட்டது. இதன்போது தரவுத்தளம் மாற்றமடைகிறது. பிறகென்ன அவ்வளவுதான் உங்கள் தகவல்கள் அனைத்தும் தரவுத்தளத்துக்குள் பூச்சிகளாக மாறிவிடும். நீங்கள் config.php ஐ என்னதான் மாற்றியும் பயனில்லை.

செய்யப்படுகின்ற Backup கள் கூட ஒருங்குகுறி மாற்றத்தால் பயனற்று போய்விடும். நீங்கள் backup.sql ஐ திறந்து பார்த்தால் எழுத்தக்கள் பூச்சிகளாக இருப்பதை பார்க்கலாம்.

இதனை இலகுவாக சொல்வதானால் யுனிகோட் ஒருங்குகுறியில் ஒரு text கோப்பை உருவாக்கி சேமிக்கும் போது ANSI ஒருங்குகுறியில் சேமித்து விட்டு, பின்னர் மீண்டும் தமிழை தேடுவது போன்றது. இந்த அனுபவம் உங்களுக்கு இல்லையாயின், ஒருமுறை செய்து பாருங்கள்.

வேறென்ன?? கேள்வி இருந்தா கேளுங்க. தெரிஞ்சா பதில் சொல்லுறன். தெரியாட்டி ரவிசங்கர் வந்து சொல்லுவார்…

29 சித்திரை, 2008