Posts Tagged "தொடர் விளையாட்டு"

யாழ்ப்பாணமும் சினிமாவும்…..

சினிமா பற்றி தொடர்பதிவு எழுத இறக்குவானை நிர்ஷன் என்னை கூப்பிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா பற்றி எழுத கூப்பிட்டதுக்கு நன்றி சொல்லுவன் எண்டு நினைச்சா கடைசிவரைக்கும் அது நடக்காது. இருந்தாலும் என்னால முடிஞ்சளவுக்கு என்ர அனுபவங்களை கீழ எழுதியிருக்கு பாருங்கோ..

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்.

நான் நினைக்கிறன் 93 இல எண்டு எட்டு வயசு இருக்கும், கறண்ட எண்டாலே என்னெண்டு தெரியாத காலம் சிறீதர் தியேட்டரில ஜூராசிக் பாக் படம் போடுகினம் எண்டு வீட்டுக்காறர் அனுப்பி வைச்சினம். (விடுதலைப்புலிகள் நடத்தின சிறீதர் தியேட்டர் மட்டும்தான் அப்ப யாழ்ப்பாணத்தில இருந்த தியேட்டர். பொதுவா இந்திய தமிழ் சினிமாக்களுக்கு அங்க இடம் இருக்கேல்ல, குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மட்டும்தான் போடுவினம், அல்லது ஒளிவீச்சு அப்பிடி படங்கள்தான்) படம் எண்டா என்னெண்டு அப்பதான் தெரியும் எண்டு நினைக்கிறன். இரவு நேரம் போனதால தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே நித்திரையா போனன். அதுக்கு பிறகு பாத்த படம் எண்டா 96 தொடக்கத்தில யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்து இருக்கேக்க நாங்கள் இருந்த வீட்டுக்கு பின்வீட்ட ஜெனரேட்டர் வச்சு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் கறுப்பு வெள்ளையா தூரதர்சன் படம் போடுவினம். இரண்டொரு படத்துக்கு போனது ஞாபகம் இருக்கு என்ன படம் எண்டது ஞாபகம் இல்லை. அதுக்கு பிறகு எங்க 98 களில கறண்ட வந்த பிறகு பாத்த படங்கள் தான். (அப்பதான் கறண்ட் எண்டா என்னெண்டு தெரியும்.)

கடைசியா அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

போன மாசம் வேலை விசயமா கொழும்பில நிக்கேக்க பாத்த தாம்தூம் (பேர் மறந்துபோய் என்னோட சுட வந்த நண்பருக்கு போன்போட்டு பெயர் கண்டுபிடிச்சு எழுதி இருக்கு). சிவாஜி படம் யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில பாத்த பிறகு அரங்குக்கு போய் பார்த்த படம் இதுதான். வா வா நல்ல படம் நான் கூட்டிக்கொண்டு போறன் எண்டு கூட்டிக்கொண்டு போய் என்ர காசிலேயே ரிக்கற் வாங்கின நண்பன் ஜெயக்காந்துக்குதான் எல்லா பெருமையும்..

கடைசியா அரங்கில் அன்றி பார்த்த தமிழ்சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியா வரும் குப்பைகளுக்கு நடுவே எனக்கு பிடித்த படங்களை கண்டு பிடிப்பதில் உள்ள சிரமத்தால் தமிழ் படம் பார்ப்பதை அறவே தவிர்த்து வருபவன் என்பதால், அண்மையில் நினைவு தெரிந்து அரங்கின்றி பார்த்ததாக எந்த தமிழ் படமும் நினைவில் இல்லை.

மிகவும் தாக்கிய தமிழ் சினீமா?
உண்மை என்னெண்டா, எனக்கு இந்த கேள்வி சரியாக விளங்கேல்லை. ஆனா 1998 அல்லது 1999 இருக்கும் அப்பதான் கறண்ட் ஓரளவுக்கு யாழ்ப்பாணம் வரத்தொடங்கியிருந்துது எண்டு நினைக்கிறன். இரவில மட்டும் கறண்ட வரும். அப்ப சொந்தக்காரர் வீட்டை நிக்கேக்க பாத்த படம் சூரியப்பார்வை (படம் பாக்க தொடங்கின காலத்தில பாத்த படம் எண்ட படியா படத்தின்ர பெயர் இன்னமும் நினைவில இருக்குது). சண்டை, துவக்குச்சூடு எண்டு எல்லாம் சும்மா அந்த மாதிரி இருக்க, படம் நல்லா பிடிச்சுக்கொண்டுது. ஆனா கொஞ்ச வருசத்துக்கு முந்தி அது Leon Professional எண்ட படத்தை மிக மோசமா பிரதி பண்ணியிருந்தது தெரிய வந்துது. இந்த சம்பவமும் தமிழ் படம் பாக்கிறதை நிறுத்திற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால, மிகவும் தாக்கிய சம்பவம் எண்டு இதை சொல்லலாம்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா – அரசியல் சம்பவம்?

??????????????? (அல்லது துயா மாதிரி கிகிகிகிகி)

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா – தொழிநுட்ப சம்பவம்?

??????????????

தமிழ்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்ப யாழ்ப்பாணத்தில வாற பத்திரிகை எதிலயும் சினமா பற்றி வாறேல்ல. அதனால வாய்ப்பும் இல்லை வாசிக்க பெரிசா விருப்பமும் இல்லை.

தமிழ் சினிமா இசை?

பொதுவாக மிகவும் அமைதியான நாட்டுப்புற இசைகளை விரும்புவதால் பழைய சோகப்பாடல்கள் கொஞ்சம் கேட்பதுண்டு. இதைவிட பக்தி பாடல்கள் தான். (வேற தமிழ் பாட்டும் இருக்கு அது சினிமா பாட்டு இல்லை).

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இப்போது பார்க்கும் படங்கள் எல்லாமே வேற்றுமொழிப்படங்கள் தான். எனது சேகரிப்பிலேயே ஏறத்தாள 200 இற்கு மேற்பட்ட சிறந்த (என்னை பொறுத்தவரை) படங்கள் இருக்கின்றன. மிகவும் தாக்கிய படங்கள் என்று சொல்வதானால்
Notebook
Samsarya (உண்மையாவே பாதிச்சது கதைதான், அந்த இந்திய பெண் இல்லை)
Nostalghia
Paris je taime
Lord of War
Monty python and holy grail
proof
The Jar
Black
Enough
Turtles can fly

வித்தியாசமா தாக்கின படங்களும் இருக்கு. ஆங்கில தொலைக்காட்சி தொடர்களை வாங்கி பாக்கிறது வழமை எண்டுறதால சில காலங்களுக்கு முன்னர் அப்படி நினைச்சு ILSA தொகுப்பை கொழும்புக்கு போயிருக்கேக்க வாங்கிக்கொண்டு வந்து பாத்தது. (ILSA படங்கள் என்ன எண்டு தெரியோணும் எண்டா கூகிள் பண்ணி பாருங்க.)

இதைவிட முப்பரிமாண கார்ட்டுன் படங்களை விரும்பிப்பார்ப்பதுண்டு..

தமிழ் சினிமா உலகுடன் நேரடி தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்சினிமா மேம்பட அது உதவுமா?

யாழப்பாணத்தில இருக்கிறவனுக்கு ஒழுங்கா கொழும்போடயே தொடர்பு இல்லை. அதுக்க தமிழ் சினிமாவோடயோ????

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒண்டும் நினைக்கேல்ல. அனா இப்படி குப்பை இல்லாமல் நல்ல படங்கள் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. (இப்ப வாற படங்கள் அனேகமா ILSA படங்களுக்கு இணையா வருகுது.)

அடுத்த ஓராண்டு தமிழில் சினமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்ளுவோம். உங்களுக்கு எப்படி இருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.

எனக்கு ஒரு மாதிரியும் இருக்காது. தமிழர்களுக்கும் பெரிசா ஒண்டும் ஆகாது எண்டுதான் நினைக்கிறன்.

இனி நான் யாரை கூப்பிடறது. பாத்தா அனேகமா எல்லருமே தொடர் பதிவு எழுதீட்டினம்.

அப்ப நான் கூப்பிடுறது
1. ரவி சங்கர்
2. நா – மதுவதனன்
3. நீங்கள் தான்.

20 ஐப்பசி, 2008