தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை – ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950
இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச காலம் கற்றோர் மனதிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்து வந்த தொல்காப்பிய மூலத்்தில் எழுத்ததிகாரமும், பலநூறு வருசங்களாக அவ்வாறு இருந்து வந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனமேறின.
அந்த மகாலிங்கையர் அவர்கள் தாம், ஆறுமுக நாவலர் அவர்கள் நாவலர் பட்டம் பெறமுன், இளமைப்பருவத்தில் பார்சிவல் பாதிரியாருக்கு நல்ல நடைப்படுத்திக் கொடுத்த பைபிளை, சென்னைப் புலவர்கள் அமைத்த நடையிலும் சிறந்ததென்று வியந்து நாவலர் அவர்களையும், அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தையும் பாராட்டினவர்கள். மகாலிங்கையர் அவர்கள் பழுத்த தமிழ் அறிஞர். அவர்களைப்போல அக்காலத்திருந்த வேறு இரு அறிஞர்கள், விசாகப்பெருமாளையர், சரவணைப்பெருமாளையர் என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள். கந்தப்பையர் என்பவரின் புத்திரர்கள். கந்தப்பையர் சிறந்த வித்துவான்; சிவாஞானசுவாமிகளின் மாணவரான தணிகைப்புராணம் பாடிய கச்சியப்ப முனிவரின் மாணவர். விசாகப்பெருமாளையர் மூத்தவர். நாவலர் அவர்கள் ஒரு சமயம் விசாகப்பெருமாளையரை மெய்புலவர் என்று பாராட்டியிருக்கின்றார்கள். அன்றி நேரிலும் சந்தித்து அடிக்கடி சம்பாஷித்துமிருக்கிறார்கள். விசாகப்பெருமாளையர், இளமையில் தந்தையாருடன் சென்று — தந்தையாரின் குரு கச்சியப்ப முனிவர், முனிவரின் குரு சிவஞானசுவாமிகள் — சுவாமிகளை வணங்குபவர். சுவாமிகளின் பெருமையை நன்கு தெரிந்தவர். பல வரலாறுகள் சிவஞானசுவாமிகளைப்பற்றி நாவலர் அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றார். இழவுகளிற் சந்தேகமானவர்கள் — ளகர ழகர பேத சந்தேகங்கள் — விசாகப்பெருமாளையரோடு சம்பாஷித்தால், எளிதிற் சந்தேகம் தீர்த்துக்கொள்ளலாமென்று நாவலரவர்கள் விசாகப்பெருமாளையரின் உச்சரிப்பை அடிக்கடி பாராட்டுவார்களாம். இது நிற்க,
மகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும், ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும், தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்து வைத்தும், தமிழ்நாட்டுப்புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வரவில்லை. அவர்கள் முன்வராமைக்குப் பொருண் முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியந் தொலையக்கூடாதென்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணமென்பது கருதத்தக்கது. இந்த பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வரவர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம்பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார். தமக்கு வரும் அவமானங்கள் ஏளனங்களுக்கு இளைக்காது, தமிழ் அன்னைக்குப் பிராணவாயுப் பிரயோகஞ் செய்ய முன்வந்தார்; தொல்காப்பியக் கடலில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவச் சூடாமணிகள் சிலர், தாமோதரம்பிள்ளை இமாசலத்தையும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டு போகப்போகின்றார் என்று சிரித்தார்கள்.
1868ம் ஆண்டு புரட்டாதி மாதம் இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன் முதன் முதல் தமிழ் மன்னன் தாமோதரம்பிள்ளை, தமிழ்நாடு உய்யும்பொருட்டுத் தொல்காப்பியம் சொல்லதிகாரத்தைத் தலைசிறந்த உரையாகிய சேனாவரையர் உரையோடு, நாவலர் அவர்களை கொண்டு பரிசோதிப்பித்து, அச்சிற் பதிப்பித்தார். 1868ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் சென்னைத்தினவர்த்தமானியில் தொடர்ந்து சேனாவரையப்பதிப்பைப் பற்றிய விளம்பரம் வந்தது.
சூரியநாராயண சாஸ்திரியார் “தாமோதரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோதரம்” என்றும், வேதநாயகம்பிள்ளை “கோடிபுலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே” என்றும் பிள்ளையைப் புகழ்ந்து பாடினார்கள். மனொன்மணியம் சுந்தரம்பிள்ளை, கலாநிதி பூண்டி அரங்கநாத முதலியார், செஷைய சாஸ்திரி, சேர். பொன். அருணாசலம், தமிழ் தெரிந்த ஹைகோட் நீதிபதிகள், ஜமீந்தார்கள், மகாராசாக்கள் முதலிய பிரபலஸ்தர்கள் குதூகலித்தார்கள். ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிகர் முதலிய மடாதிபதிகள் திருநோக்கஞ்செய்தார்கள்.
ஆனால், வித்துவசூடாமணிகளான கோபாலபுரம் இராசகோபாலப்பிள்ளை, தொழுவூர் வேலாயுதமுதலியார் என்பவர்களுக்கு அடிவயிற்றிலே அக்கினிச்சூடாமணி வேலைசெய்யத் தொடங்கிற்று. அந்த அழுக்காற்று மன்னர்கள் திரை மறைவில் நின்று, நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரை கிள்ளிவிட்டார்கள். இந்த வீராசாமி முதலியார் யாவரோ என்றால், அவர்தாம் இன்னாரென்று இதோ விளம்புகின்றேன். இவர், இராமலிங்கசுவாமியின் முதற்சீடர். அருட்பாப்புராணத்தில், “தவக்கொழுந்து” என்று புகழப்பட்டிருக்கின்றார். இராமலிங்கரின் அடுத்த வாரிசு இவரேயென்று சுத்தானந்தபாரதியார் முழங்குகின்றார். இந்த வீராசாமி முதலியார் யாழ்ப்பாணத்தையும், நாவலரையுந் திட்டி பன்னிரண்டு நூல்கள் அருளியிருக்கின்றார். “தீவாந்தர சைவவிநோதம்” என்ற நூலிலே நாவலரை படு கிறீஸ்தவர் என்றும், நாவலருக்கு கிறீத்தவப்பெயர் “பைராட்” என்றும் வாய்க்கு வந்தபடி வர்ணித்திருக்கின்றார். இந்த அருட்பாப் புலவராகிய வீராசாமி முதலியார், அந்த இரு இலக்கண மேதைகளின் உதவிகொண்டு, தாமோதரம்பிள்ளையின் சேனாவரைய விளம்பரத்தில் இலக்கணப்பிழைகள் கண்டுபிடித்து, “இலக்கண இலக்கியங்களில் மகாவல்லவரும், சென்னை முதல் ஈழமீறாகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான்களில் தமக்கு இணையில்லாதவருமாகிய” என்ற நாவலர் அவர்களுக்குத் தாமோதரம்பிள்ளை கொடுத்த விஷேடணத்தை ஆஷேபித்து, “இணையில்லாதவர்” என்பதற்குப் “பெண்சாதியில்லாதவர்” என்று மெய்ப்பொருள் பண்ணி, தமோதரம்பிள்ளையையும் நாவலரையும் தூஷித்து, 1869ம் ஆண்டு பிப்பிரவரி மாதத்திலே “விஞ்ஞாபனப் பத்திரிகை” என்று ஒரு தூஷணப் பத்திரிகை வௌியிட்டிருக்கின்றார்.
தாமோதரம்பிள்ளை கறையான் வாயிலிருந்து சேனாவரையத்தை மீட்டு வௌியிட்டதற்கு, இராசகோபாலப்பிள்ளை முதலிய சென்னைப்பண்டிதமணிகள் சிலர் செய்த கைம்மாறு, “பெண்சாதி” நியாயம் பேசும், இந்த “விஞ்ஞாபனப் பத்திரிகை”த் தூஷணந்தான்.
இந்த இராசகோபாலப்பிள்ளை, ஒருவர் பதித்த புத்தகத்தில் நாலு ஆறு பக்கங்களை மாற்றி, முகப்பை புதிது பண்ணித் தாமும் ஒரு பதிப்புப் பண்ணியதாகப் பாசாங்கு செய்ய வல்லவர்; கை வந்தவர். அவருடைய யோக்கியதை அவர் தேசத்தாராகிய கூடலூர்க் குமரகுருபர சுவாமிகள் இயற்றி அச்சிற் பதிப்பித்த “பரமோத்தர ராசா பாச தருப்பணத்”தில், 35ம், 36ம் பக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அது வருமாறு:-
“இராசகோபாலப்பிள்ளை திருத்தி யச்சிற் பதிப்பித்த புத்தகத்தை பாராதீர். ஏனெனில், அவர், முதனூற் கருத்தறியாதவராகையால், வில்லிபுத்தூராழ்வார் செய்த பாரதத்தைப், பெரியோர் செய்த வாக்கை அழிக்க்கூடாதென்று சிறிதும் அஞ்சாது, சிவபரமாயிருந்த பாடல்கள் அனேகத்தைத் தள்ளியும், சில அடிகளை மாற்றியும், சில சொற்களைத் திரித்தும், மனம்போன வாறே அச்சிற் பதிப்பித்தனர். ஆதலால், அதனை நீக்கி வில்லிபுத்தூரர் பாடினபடியே ஆறுமுக நாவலர் அச்சிற் பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பாதித்துப் பாரும் பாரும். உமது சந்தேகம் தீரும் தீரும். நாவலர் என்னும் பட்டம் அவருக்குத் தகுமேயன்றி உமக்கெல்லாமா தகும்! புலியை நோக்கிப் பூனை சூடிக்கொண்டால் புழுத்துச் சாமேயன்றிப் புலியாமா! அதுபோலக் கல்விக் கடலாகிய ஆறுமுக நாவலரை நோக்கி நீரும் அப் பெயர்தரித்துக் கொண்டாற் பழியும் பாவமும் அடைவீரேயன்றிப் புகழ் அடைவீரா! அடையீர் அடையீர்.”
இத்துணைப் பெருஞ் சிறப்பினராய இராசகோபாலப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் எங்கேயோ ஒரு மூலைமுடக்கிலிருந்து வந்த தாமோதரம்பிள்ளை சென்னை மாநகரில் வீற்றிருந்து கொண்டு, அதுவும் ஒப்புயர்வில்லாததொரு சேனாவரையம் பதிக்கப் பார்த்துக்கொண்டிருப்பதா? மனிதர் ஒரு சூழ்ச்சி செய்தார். நினைக்க முடியாத சூழ்ச்சி; திகைக்கக் கூடிய சூழ்ச்சி. அஃதாவது தம் பெயராலும், ஒரு சேனாவரையப் பதிப்பு வழங்க ஒரு முயற்சி செய்தார். சிலர் இன்னுந்தான், இராசகோபாலப்பிள்ளையும் சேனாவரையம் பதித்தார் என சொல்லப்பார்க்கின்றார்கள். அப்படியொரு பதிப்பு தமிழ்நாட்டில் வழங்கியதாக… வழங்குவதாகத் தெரியவில்லை. சென்னை அரசாங்க புத்தகப் பதிவில், சி. வை. தாமோதரம்பிள்ளை சேனாவரையம் பதித்தார் என்று இருக்கின்றதேயன்றி, இராசகோபாலபிள்ளை பெயரேயில்லை. சென்னை சர்வகலாசாலையில் தமிழப் பகுதி முக்கியஸ்தர்களான திரு. வையாபுரிப்பிள்ளை முதலியவர்கள், இராசகோபாலப்பிள்ளை சேனாவரையம் பதிப்பித்ததாக தாங்கள் கேள்விப்பட்டதுமில்லை; அப்படி ஒரு பதிப்பை கண்டதுமில்லை என்கின்றார்கள்.
வளரும்…..