Posts Tagged "பாலஸ்தீனக் கவிதைகள்."

சிறையிலிருந்து ஒரு கடிதம்

அம்மா
நண்பர்கள் என்னைத் தேடி வந்து
கதவில் தட்டும்போதெல்லாம்
நீ வெம்பிக் கண்ணீர் மல்குதை
எண்ணி நான் வேதனைப்படுகிறேன்

ஆனால்
வாழ்க்கையின் சிறப்பு
என் சிறையில் பிறக்கிறதென்று
நான் நம்புகின்றேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வெளவாலாய்
இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்.

(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

26 கார்த்திகை, 2006

என்றென்றும் பல்ஸ்தீன்

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக

மேன்மைமிகு
மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.

ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.

அது எழவே செய்யும்.

21 கார்த்திகை, 2006