Posts Tagged "மறுமலர்ச்சி"

வரதர் ஐயா காலமானார்

ஈழத்து இலக்கிய உலகில் மூத்தானாய் நிமிர்ந்து நின்று அழகு செய்து வரதர் ஐயா அவர்கள் இன்று காலை காலமானார்.

கதாசிரியர், நாவலாசிரியர், கவிதையாசிரியர், பதிப்பாசிரியர் போன்ற பல தளங்களிலே சளைக்காது தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் வரதர் ஐயா அவர்கள்.1940 இலே ஈழகேசரிபத்திரிகை மூலம் இலக்கிய உலகிலே நுழைந்து 1943 இலே இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்துக்கு கால்கோள் அமைத்து 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தன் பெயரை ஆழமாக முத்திரையிட்டவர் வரதர் அவர்கள். இதனைவிட ஆனந்தம், வெள்ளி, புதினம், தேன்மொழி, அறிவுக்களஞ்சியம் போன்ற சஞ்சிகைகளை காலத்துக்கு காலம் வெளியிட்டு தன் சுவடுகளை இதழியல் துறையில் ஆழப்பதித்தவர்.

ஈழத்து இலக்கி உலகிலே தனது இருப்பை ஆழ அகல பதிந்து இலங்கை அரசின் இலக்கிய வாதிகளுக்கான அதியுயர் விருதான சாகித்திய இரத்தினம் விருதை முதன்முதல் பெற்ற தமிழ் இலக்கியவாதியாகவும் இவர் திகழ்கின்றார்.

இதனைவிட பிரச்சனைகள் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் எரிகின்றது, மற்றும் 24 மணி நேரம் போன்ற நூல்களை வெளியிட்டு துணிச்சலுடன் செயலாற்றிய ஒரு பதிப்பாசிரியர், நூல்வெளியீட்டாளர்.

முதன்முதலாக ஈழத்தில் கவிதைக்கென சஞ்சிகை நடாத்திய புரட்சிவாதியும் இவரே

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

21 மார்கழி, 2006

வரதர்

ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.

வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.

நான் கொழும்பால் யாழ்ப்பாணம் வந்ததும் என்னை பார்க்கவும் எனது சிறிய புத்தக தொகுதியை பார்க்கவும் வீட்டுக்கு வந்திருந்தார்.

தான் ஒரு கதை எழுத தொடங்கியிருப்பதாயும், தான் எழுதும் கையெழுத்து தனக்கே புரிவதில்லை எனவும் இதனால் ஒரே அத்தியாயத்தை மூன்று முறை திருப்பியெழுத வேண்டி இருந்ததாயும் குறைபட்டுக்கொண்டார்.

கடந்த வருடம் இதற்காகவே ஒரு மடிக்கணினி வாங்கி தமிழ் ரைப்பிங் பழகி கணினியில் எழுதத்தொடங்கியிருந்தவர் இப்போது அது பழுதடைந்து கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். அது எப்போது திரும்பி வரும் என்றும் பேசும்போது கவலைப்பட்டவாறு கூறினார். என்னுடைய சிறிய புத்தகச் சேர்க்கையிலிருக்கும் புத்தகங்களில் தன்வரலாறு கூறும் புத்தகங்களையும் உளவியல் புத்தகங்களையும் வாசிப்பதற்கு தருமாறு கேட்டவர் தான் வாசிக்கும் ஆர்வத்திலேயே வாசிப்பதாயும் வாசிப்பது இரண்டு நாட்களுக்கு மேல் ஞாபகம் நிற்பதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார்.

இத்தனை வயதிலும் தெளிவான பேச்சு , அறிந்து கொள்ளும் ஆர்வம், புத்தகங்கள் மீது தீராத காதல், எழுதுவதில் துடிப்போடு வியக்க வைக்கின்றார் வரதர் ஐயா.

30 ஐப்பசி, 2006