Posts Tagged "மொரட்டுவ"

நுட்பம் – 2006

கொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டு மலராக நுட்பம் வெளிவந்திருக்கினறது. உபயம் நண்பன் கேதாரசர்மா (புடவை முகாமைத்துவ மாணவன் – மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆனால் நான் வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது வேறு விடயம். வெளியீட்டு விழாவிற்கு போக முடியாத குறை வாசித்த போது இன்னும் அதிகமாகியது. தமிழருவியும் சடகோபனும் தங்கள் பிரிவுகளை ஆய்வுசெய்ததாக அறியக்கிடைத்தது.

மலைபோல்
இடர்வரினும்
தலைநிமிர்ந்து நிற்போம்
நாங்களும் – எங்கள் கலைகளும்
எம் பனைகளைப்போலவே..

உள்அட்டையில் பனையின் அழகிய படத்தின்கீழே காணப்பட்ட அழகிய சிறுகவிதை. ஏதோ சொல்கிறது. படமும் கவிதையும்.
ஒவ்வொரு ஆக்கங்களுக்கும் கீழே பின்னூட்டல்களுக்காக எழுதியவர்களின் மின்னஞ்சல் தரப்பட்டிருந்தமை ஒரு ஆரோக்கியமான விடயம் என நினைக்கின்றேன்.
நாடறிந்த எழுத்தாளர் சாந்தனின் தேடல் குறுநாவல் (முன்னமே பிரசுரமானது) மீள் பிரசுரம் பண்ணப்பட்டிருந்தது கவிதைகள் கட்டுரைகள் நல்ல சிறுகதைகள் எல்லாம் நல்ல தரமாய்.
மொழிபெயர்ப்பு கவிதை ஒன்றும் வாசிக்க நேர்ந்தது. மனித நேயம் பற்றி ஆன் ரணசிங்கேயின் கவிதை மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கில இலக்கியம் படித்தபோது கஸ்டப்பட்டு படித்தது என்பதனால் உடன் நினைவுக்கு வந்தது. வரிக்கு வரி மொழிமாற்றம் நடந்திருந்தது இதனால் இலக்கிய சுவை கொஞ்சம் கெட்டிருந்தது. முதல் முயற்சியோ தெரியவில்லை ஆனால் தமிழுக்கு நல்ல ஆரோக்கியமான முயற்சி.
யுனிகோடு நியமமும் மொழி அடிப்படைகளும் என்ற கட்டுரை மிக நன்றாக தொகுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தது, இருந்தாலும் ஆடி 2006 இல் வெளியிடப்பட்ட யுனிகோடு 5.0 பற்றியும் TSCII பற்றியும் எழுதியிருக்கலாம்.

29 புரட்டாதி, 2006