இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய குறிப்பு
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகே எனக்கு இதனை எழுத நேரம் கிடைத்திருக்கிறது. ஆனால் வந்தியத்தேவன் எல்லோரும் நிச்சயம் எழுதுங்கள் என்று கேட்டதானால் இந்த பதிவு. இலவச இணையத்தளம் தொடர்பாக அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
வலைப்பதிவர் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டவுடனே கௌபாய் மதுவிடம் இதனை இணைய ஒளிபரப்பு செய்தால் என்னாலும் பங்குகொள்ள முடியும் என்று கேட்டிருந்தேன். உடனே அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்து இணையத்தில் ஒளிபரப்பு செய்திருந்தார். என்னால் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நேரடியாக கலந்து கொள்ள முடிந்ததானால் அதனை பயன்படுத்த முடியவில்லை, ஆனால் வெளிநாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்ள அது ஏதுவாக அமைந்தது. (நன்றி மது)
மதுவின் மடிக்கணினி சிறிது நேரம் என்னிடம் இருந்ததனால் பலருடன் அரட்டையடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இலங்கையின் அவுஸ்திரேலியாவின் முதலாவது பதிவர் சந்திப்புகள் போன்ற பல்வேறு அரிய விடயங்களை கானா பிரபா மற்றும் சயந்தனிடம் இருந்து அறிய முடிந்தது. பலருக்கு அரட்டையூடாக பதிலளிக்க முடியாது போனதுக்கு வருந்துகின்றேன். ஆனால் மடிக்கணினியை சுழற்றியே அனைவரையும் படம்பிடிக்க வேண்டிய தேவை இருந்ததனாலேயே இந்த தவறு ஏற்பட்டிருந்தது. இன்னுமொரு தடைவை வாய்ப்புக்கிடைத்தால் சிறப்பாக செய்ய முடியும் என நினைக்கின்றேன்.
வலைப்பதிவர் சந்திப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டமாக நடைபெற்றது எனக்கு சிறிதளவு வருத்தமே. என்னைப்பொறுத்தவரை நான் ஒரு நண்பர்கள் சந்திப்பை எதிர்பார்த்தே சென்றேன். அதன்மூலம் புதிய பல பதிவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது. இருப்பினும் புதிய பதிவர்களுக்கு பயனுள்ள பல விடயங்களோடு பதிவர் சந்திப்பு இடம்பெற்றது வரவேற்கத்தக்கது.