Posts Tagged "Freelancing"

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 4

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதலாம் பகுதியில் அடிப்படையாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கின்ற வழிமுறைகள் பற்றியும், பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தில் வேலை செய்வது தொடர்பான அடிப்படை விடயங்கள் சில பற்றியும், பின்னர் மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை செயவது எப்படி என்பது தொடர்பாயும் பார்த்தோம்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

இப்போது நான்காம் பகுதியில் கோரல் தொடர்பாக மேலும் சில விடயங்களை பார்ப்போம்.

வேலைக்கு எடுக்கும் காலம்.

கோரல் ஒன்றினை இடும்போது எவ்வளவ காலத்தில் அவ்வேலையை முடித்து கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட வேண்டும். இதுவும் எங்களின் கோரல் தேர்வு செய்யப்படுவது தொடர்பில் முக்கியமான ஒரு விடயமாகும். சிலர் குறைந்தளவு நாட்களை கொடுத்தால் இலகுவாக வேலை கிடைத்துவிடும் என நினைப்பதுண்டு. ஒரு வகையில் அது உண்மைதான் எனினும், நாங்கள் குறிப்பிட்ட நாளில் வேலையை முடித்து கொடுக்காது விடின் எதிர்மறையான விழைவினை ஏற்படுத்திவிடும். தொடர்ச்சியாக எமக்கு வேலை கிடைப்பதை இது தடை செய்து விடும். நீங்கள் குறிப்பிடும் காலத்துக்கு முன்னர் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடியதாக வேலைக்கான காலத்தை குறிப்பிட வேண்டும். அதற்காக 500 சொற்களில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கின்ற வேலைக்கு ஒரு கிழமை எடுத்துக்கொள்ளுவது முட்டாள்தனமானது. இரண்டு நாட்கள் என குறிப்பிட்டு ஒரு நாளில் முடித்து கொடுத்தால் அவர் தனது அடுத்த வேலைக்கும் எம்மை அணுகுவார்.

வேலைக்காக நாங்கள் கேட்கும் பணம்

பெரும்பாலான வேலை தருபவர்கள் குறைந்தளவு பணத்தில் தங்கள் வேலையை செய்து முடிக்க ஆர்வமாயிருப்பார்கள். அதற்காக மிக குறைந்த அளவிலான பணத்தினை கேட்பதும் எமக்கு வேலையை பெற்றுத்தரா. ஒரு வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்கும் வேலைக்கு 50 அமெரிக்க டொலர்கள் என்று கேட்பது மிகவும் குறைவான பணமாகும். இவ்வாறு நீங்கள் ஒரு கோரலை செய்தால் நிச்சயமாக அந்த வேலை உங்களுக்கு கிடைக்காது. அதேபோல அது உங்கள் திறமையை குறைத்து காட்டுவது போல அமைந்து விடும். (சாதாரணமாக பெரிய நிறுவனங்கள் அவ்வாறான வேலைக்கு ஏறத்தாள 400 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்களை கேட்கும்.) எங்கள் திறமைக்கும் நேரத்திற்கும் ஏற்ற ஒரு பணத்தை கோருதலே நலம். இது பொதுவாக அனுபவத்தில் வந்துவிடும்.

சரி உங்களுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டது, வேலை செய்யும் போது என்ன கவனிக்க வேண்டும்?

வேலை செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுதான். இப்பொழுது நீங்கள் எந்தளவில் வேலையை முடித்து விட்டீர்கள் என்று குறைந்தது தினமும் ஒரு தடவையாவது வேலை தருபவருக்கு அறிவிக்க வேண்டும். இது உங்கள் மேல் ஒரு நம்பிக்கையை வேலை தருபவருக்கு ஏற்படுத்தும். தனது அடுத்தடுத்த வேலைகளையும் உங்களுக்கு தர அவர் விரும்புவார், அது போல உங்கள் வேலை தொடர்பாக நல்லதொரு பின்னூட்டத்தையும் உங்களுக்கு தருவார். இது மற்றைய வேலை தருபவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள காரணமாக அமையும். கீழே திரைவெட்டை பாருங்கள்.

இப்பொழுது நாங்கள் ஒரு வேலையினை செய்து முடித்து விட்டோம். இனி எம்மை நிலைநிறுத்திக்கொள்ளுவது எவ்வாறு.

தொடக்கத்தில் அதிக வேலை என்பதனை விட கிடைக்கின்ற சில வேலைகளை திறமையாக செய்து முடித்தால் காலப்போக்கில் உங்களை வேலைகள் தேடிவரும். கடந்த கிழமைக்கான எனது இன்பொக்சின் ஒரு பகுதியின் திரைவெட்டை பாருங்கள்.

தொடர்ச்சியாக வேலை தருபவர்கள் அல்லது நீண்டகாலத்துக்கு வேலை தருபவர்களின் வேலைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தல் நல்லம். இதனால் உங்களால் தொடர்ச்சியாக பணமீட்ட முடியும். (உதாரணமாக பதிவு மேற்பார்வை செய்வது போன்ற வேலைகள்)

உங்களால் செய்ய முடியாத வேலை ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட, உங்கள் வேலை தொடர்பான கரும்புள்ளி ஒன்றினை நீங்களே குத்தியவர்களாகி விடுவீர்கள். அதற்கு நீங்கள் இடமளிக்க கூடாது.

நீங்கள், ஒரு நிறுவனமல்லாமல் தனிப்பட்டவராக இருந்தால் எல்லா விதமான வேலைகளையும் எடுத்து செய்வதை விட குறிப்பிட்ட ஒரு வகையிலான, உங்களிடம் மிகுந்த திறமையுள்ள வேலையினை எடுத்து செய்தல் பயன்தரும். உதாரணமாக “மொழிபெயர்ப்பு வேலை”. இப்படி செய்வதனால் அவ்வாறான ஒரு வேலை வைத்திருப்பவர் இது தொடர்பான வேலை செய்பவர்களை தேடும் போது உங்கள் பெயர் முதல் வருவதற்காள வாய்ப்பு அதிகம். இதனால் உங்களுக்கு வேலை கிடைப்பது இலகுவாகிவிடும். (கூகிளில் தேடும்போது முதல் பக்கத்தில் வரும் தேடல் முடிவுகளோடு நாங்கள் நிறுத்திக்கொள்ளுவது போல)


இந்த பதிவுடன் இத்தொடர் முடிவுக்கு வருகின்றது. இதனை தொடர்ந்து நீங்கள் இணையத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டால் உங்களுக்கு உதவக்கூடிய சில பதிவுகள் வர இருக்கின்றன. தவறவிடாமல் இருக்க இங்கு சொடுக்கி எனது செய்தியோடையினை பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களிடம் ஏதும் கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள் முடிந்தளவு பதிலளிக்க முயற்சிக்கின்றேன். செய்தியோடை ஊடாக என்னை பின்தொடர்பவர்கள் மற்றும் அனைவரும் இத்தொடர் எவ்வாறிருந்தது என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

28 தை, 2009

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதல் பகுதியில் இணையத்தில் சம்பாதிக்கக்கூடிய இரண்டு வழிமுறைகள் பற்றி பார்த்தோம். பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தினூடு வேலை செய்ய எண்ணுபவர்கள் அடிப்படையாக வைத்திருக்க வேண்டியவற்றை பற்றி சற்று விளக்கமாக பார்த்தோம். இப்பொழுது மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது என்று சற்று விளக்கமாக பார்ப்போம்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

இன்றைய பகுதியின் விடயத்திற்கு போகமுன்னர் முக்கியமான இரு விடயங்கள்

Elance இணையத்தளத்தினை நான் ஒரு உதாரணத்திற்காகவே பயன்படுத்துகின்றேன். Elance போன்ற பல இணையத்தளங்கள் உள்ளன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கேற்றவாறாக தேர்வுசெய்து கொள்ள முடியும். அப்படியான சில இணையத்தளங்கள் கீழே.
1. GetAfreelancer
2. ODesk
3. RentACoder
உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். பதிவில் சேர்த்து விடுகின்றேன்.

இந்த தொடர்பதிவு எனது முழுவதுமாக எனத அனுவத்தை அடிப்படையாக கொண்டது. நீங்களும் உங்கள் அனுபவங்களை கீழே பின்னூட்டத்தில் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

நல்ல கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது.

இங்கு நல்ல கோரல் என்பது வேலைதருபவரை கவரக்கூடிய வகையில் உங்களுக்கு அவர் அந்த வேலையை தருவதை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

கோரல் ஒன்றினை செய்ய முதல் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்.

1. வேலையின் தன்மை

நீங்கள் கோரல் செய்கின்ற வேலை நிச்சயமாக உங்களால் செய்து முடிக்கக்கூடியதானதா என்று நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். செய்யக்கூடியது போல்தான் இருக்கின்றது என்று நினைத்து கோரல் ஒன்றினை செய்வது தொடர்ச்சியாக நீங்கள் வேலை பெறுவதை தடுக்கும் ஒரு காரணியாக அமைந்து விடும்.

2. நேரம்

தரப்பட்ட வேலை ஏழு நாட்களில் செய்து முடிக்கப்பட வேண்டும். உங்களால் ஒரு நாளைக்கு ஆகக்கூடியது 2 மணத்தியாலங்களுக்கு மேல் ஒதுக்க முடியது என்றால் 20 மணத்தியாலங்கள் எடுக்கும் வேலை ஒன்றினை சமாளித்து செய்யலாம் என்ற நினைப்பில் நிச்சயமாக கோரல் செய்யக்கூடாது.

உங்களால் சரியான நேரத்தில் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வேலை ஒன்றினை கண்டறிந்து விட்டீர்களானால் இப்பொழுது நீங்கள் ஒரு கோரலை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.

கோரல் ஒன்றினை செய்யும்போது கவனிக்க வேண்டியவை.

1. விளித்தல்.

வேலை தருபவரின் பெயர் எமக்கு தெரிந்திருந்தாலும், ஐயா அல்லது அம்மணி (Dear Sir, Dear Madam) என விளித்து கோரலை தொடங்குவது மிக்க பயன் தரும்.

2. உள்ளடக்கம்

எவ்வளவுக்கெவ்வளவு எங்கள் உள்ளடக்கம் சிறப்பானதாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு எங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் கிட்டும். சிலர் உள்ளடக்கதை ஒரு template போல உருவாக்கி வைத்துக்கொள்ளுவார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அதனை அப்படியே அங்கு பிரதி பண்ணி ஒட்டி விடுவார்கள். உதாரணமாக ஒரு CSS கோப்பினை மேம்படுத்த வேண்டும் என்கின்ற வேலைக்கு, நான் இணையவியாபார இணையத்தளங்கள் பலவற்றை உருவாக்கி இருக்கின்றேன் என்பது போன்ற ஒரு கோரல். இது நிச்சயமாக உங்களிடம் எவ்வளவு திறமையிருந்தாலும் உங்களுக்கு வேலை கிடைப்பதை தடைசெய்துவிடும்.

இதேபோல கோரல் ஒன்றின்போது ஏற்படுகின்ற மற்றொரு பிழை நாங்களாகவே பலவற்றை அனுமானித்து கொள்ளுதல். உதாரணமாக வேர்ட்பிரஸ் நிறுவல் ஒன்றினை வேலை தருபவரின் வழங்கியில் நிறுவவேண்டும் என்கின்ற வேலைக்கு, நாங்களாகவே வேலைதருபவருக்கு வேர்ட்பிரஸ் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும், வழங்கியில் இருக்க வேண்டியவைகள் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு இரண்டே வரியில் ஒரு கோரலை செய்வது. சில வேளைகளில் எங்களின் அனுமானங்கள் சரியாக கூட இருக்கலாம் இருந்தாலும் நாங்கள் அனுமானங்கள் ஏதும் இல்லாமல் கோரலை செய்வது நல்லம்.

கோரல் ஒன்றின் உள்ளடக்கத்தினை நாங்கள் வேலை தருபவர்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கேற்றவாறாக உருவாக்கி கொள்ளல் பயன்தரும்.

அவர்களை நாங்கள், அவர்கள் தருகின்ற வேலையின் தன்மையினை பொறுத்தும் வேலை கோரப்பட்ட முறையினை பொறுத்தும் மூன்று வகையாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.

அ. தரப்பட்ட வேலைக்கு அறவே சம்பந்தமல்லாதவர்கள்.
உதாரணமாக வழக்கறிஞர் ஒருவர் தனக்கு ஒரு வலைப்பதிவை உருவாக்கி தருமாறு வேலை ஒன்றினை தருதல். அனேகமாக இவர்கள் இந்த இணையத்தளம் போல் இருக்க வேண்டும், கூகிளில் தேடினால் வரவேண்டும் என்பதாக வேலையை கோருவார்கள்.

வழக்கறிஞர் வலைப்பதிவின் நன்மைகள் பற்றி அறிந்திருக்ககூடுமே அன்றி வலைப்பதிவு தொடர்பான தொழிநுட்ப அறிவு ஏதுமற்றிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அவரிற்கான கோரல் ஒன்றினை செய்யும் போது பெரிதளவில் தொழிநுட்ப சொல்லுகளை கலக்காமல், அவருக்கு புரியக்கூடிய ஆங்கிலத்தில், கோரலை இடவேண்டும். குறிப்பாக நீங்கள் அவருக்காக சேர்க்கப்போகும் வசதிகள் மற்றும் அடைப்பலகை தொடர்பாக நன்கு விபரித்து அதனால் அவருக்கு என்ன பயன் என்பதனை தெரிவிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் தினமும் இலகுவாக பதிவினை எழுதலாம் என்று மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்கள் பின்னூட்டமிடுவதற்கான வசதியும் இருக்கும் என்பதனையும் அவருக்கு குறிப்பிடல் வேண்டும். சில வேளைகளில் இது உங்களுக்கு சிரிப்பாக தெரிந்தாலும் இதன் பயன் நீங்கள் ஒரு கோரலை இடும்போதுதான் தெரியும்.

ஆ. தரப்பட்ட வேலை சம்பந்தமான மிகவும் அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக மேற்குறிப்பிட்ட அதே வேலையை இவர்கள் விபரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். இவர்கள் Valid coding, மற்றும் SEO செய்யப்பட்டிருக்க வேண்டும் (SEO அடிப்படை தொடர்பாக விரைவில் ஒரு பதிவு எழுத இருக்கின்றேன்.) என்பதாக வேலையை கோருவார்கள்.

இவர்கள் வேலையை கோரும்போதே அதிகளவு கலைச்சொற்களை பயன்படுத்தி இருப்பார்கள். இவர்களுக்கு இந்த வேலையை செய்ய தெரியாதே தவிர இவர்களுக்கு வேலை தொடர்பான பூரண அறிவிருக்கும். இவர்களுக்கான கோரலின் போது நான் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டது போன்ற எங்களின் மேம்படுத்தப்பட்ட அறிவினை பயன்படுத்த வேண்டும். தாராளமாக தொழிநுட்ப சொற்களை பயன்படுத்தலாம். இவர்களுக்கு முடியுமானால் இவர்களுக்கு சில புதிய விடயங்களை சொல்லலாம். இவர்களின் எதிர்பார்ப்புக்கு உங்களிடம் அவர்கள் சொல்லுவதைவிட சிறந்த தீர்வு இருப்பின் அவற்றை வழிப்படுத்தலாம். இவை உங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்க உதவும்.

இ. தரப்பட்ட வேலை சம்பந்தமாக ஓரளவு அறிவுள்ளவர்கள்.
இவர்கள் மேற்குறிப்பிட்ட வேலையை விபரிக்கும் விதம் இன்னமும் வித்தியாசமாக இருக்கும். இவர்கள் பல வலைப்பதிவுகளில் இருந்து உதாரணம் காட்டுவார்கள். நீட்சிகள் பற்றி சொல்லுவார்கள்.

இவர்களுக்கு நாங்கள் தொழிநுட்ப சொல்லுகளை பயன்படுத்தலாம் இருந்தாலும் சிறிது விளக்கமாக சொல்லவேண்டும் (SEO என்று சொல்லாமல் அதனை விரித்து சொல்லலாம்). இவர்களுக்கு நாங்கள் இவர்களின் தேவைகளுக்கான புதிய நீட்சிகளை அறிமுகப்படுத்தலாம். இருந்தாலும் அவர்கள் போக்கிலேயே செல்லுவது நல்லம். அவர்கள் கேட்காமல் நாங்களாக புதிதாக எதனையாவது சொல்லுவது நிச்சயமாக பயன் தராது. எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

3. முடிவு

எங்களின் முடிவு பொதுவாக நாங்கள் செய்யக்கூடிய அல்லது வழங்கக்கூடிய வேலைக்கு பிந்தியதான சேவைகள் சம்பந்தமானதாக இருக்கலாம். மேற்குறிப்பிட்ட உதாரணத்திற்கு நாங்களே நீட்சிகளையும் அடைப்பலகையையும் நிறுவிவிடுவோம். மேலும் இரண்டு வாரத்துக்கு ஏதும் பிரச்சனை ஏற்படின் நாங்கள் தீர்த்து வைப்போம் என்பது போன்றவையாக இருக்கலாம்.

அதனை விட கேட்கப்பட்ட வேலை போன்ற நாங்கள் முன்னர் ஏதும் வேலைகள் செய்திருந்தால் அந்த உதாரணங்களையும் முடிவில் சேர்க்கலாம்.

அத்துடன் நன்றி சொல்லி உங்கள் பெயருடன் முடித்தல் எப்போதும் நன்மை செய்யும்.


அடுத்த பதிவில் நாங்கள் செய்கின்ற வேலைக்கு எவ்வளவு பணம் பெறலாம், எவ்வளவு காலம் எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் ஒரு உதாரண கோரல் ஒன்றினையும் பார்க்கலாம். அதனைத்தொடர்ந்து எங்களை எவ்வாறு நிலைநிறுத்திக்கொள்ளலாம் என்பது தொடர்பாயும், எவ்வாறு வேலைகளை தேர்வுசெய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பார்க்கலாம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.

26 தை, 2009

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2

முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்றி பார்த்திருந்தோம். இப்பொழுது அவற்றில் சில விடயங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

அதற்கு முன்னர் முன்னைய பதிவில் மாயா கேட்டிருந்த ஒரு கேள்விக்கு வருவோம். அதில் தமிழ் பதிவுகளுக்கு கூகிள் தனது அட்சென்ஸ் இனை வழங்குவதில்லையே அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தார். உண்மையில் கூகிளின் நெறிமுறைகளுக்கமைய தமிழில் இருக்கும் இணையத்தளங்களுக்கு கூகிள் அட்சென்ஸை வழங்கமுடியாது. ஆனால் எங்களால் இலகுவாக ஒரு ஆங்கில வலைப்பதிவை தொடங்க இயலும். எனவே ஒரு ஆங்கில வைலப்பதவினை தொடங்கி அதனூடாக அட்சென்ஸை விரும்பினால் பெற்றுக்கொள்ள இயலும்.

போட்டிகளில் கலந்து கொள்ளல்.

பணம் சம்பாதிக்க அல்லது உங்களுக்கு தேவையான சில விடயங்களை இலகுவாக பெற்றுக்கொள்ள இன்னுமொரு வழி போட்டிகளில் கலந்து கொள்ளுதல். பல இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் காலத்துக்கு காலம் போட்டிகளை நடாத்தி பரிசில்கள் கொடுக்கும். (கொஞ்சகாலத்துக்கு முந்தி தமிழ் வலைப்பதிவர் ஒருவரும் ஒரு போட்டி வைச்சு இலவசமா இணையத்தளம் ஒன்றை கொடுத்திருந்தார் – ஆரெண்டிறது அவ்வளவா ஞாபகம் இல்லை).




இப்படி எங்கயெங்க போட்டிகள் நடக்குது எண்டதை எப்படி கண்டுபிடிக்கிறது எண்டுறதையும் பிறகொரு பதிவில சொல்லுறன்.

இப்பொழுது நாங்கள் இன்றைய விடயத்துக்கு வருவோம்.

Elance அல்லது GetAFreelancer போன்ற இணையத்தளங்களினூடு வேலைகளை பெற்றுக்கொள்ளுதல்.

Elance நிறுவனம் மற்றும் GetAFreelancer இணையத்தளங்களில் நீங்கள் இலவசமாக ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் அங்கு சில வரையறைகள் உள்ளன. உதாரணமாக Elance நிறுவனத்தின் இலவச கணக்கினை கொண்டு உங்களால் ஆகக் கூடியது மாதம் ஒன்றிற்கு மூன்று கோரல்களையே செய்ய முடியும் (நீங்கள் மாதாந்தம் 10 அமெரிக்க டொல்ர்கள் செலவளித்தால் உங்களால் 20 கோரல்கள் வரை செய்ய முடியும்). இங்கு அனேகருக்கு ஏற்படுகின்ற பிரச்சனை என்னவென்றால் இந்த மாதம் செய்கின்ற மூன்று கோரல்களும் கிடைக்காது போய்விடின் பின்னர் இன்னுமொரு கோரலை செய்ய ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். இது சலிப்பினை ஏற்படுத்துவதோடு வேலை செய்யும் எண்ணத்தையும் கைவிட வைத்துவிடும்.

நாங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அதனை சரியான முறையில் வெளிப்படுத்தாதவிடத்து எந்த பயனும் இல்லை. அதனால் இங்கு எமக்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

1. எம்மிடம் இருக்க வேண்டியவை
2. கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது.

எம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படையான விடயங்கள்.

1. இணைய இணைப்பு.

என்னட்ட இருக்கிற இணைய இணைப்பு டயல்அப் தான். நீங்கள் சரியாக வேலைகளை தெரிந்தெடுத்தால் அலுவலகத்தில இருக்கிற இணைய இணைப்பும் ஒரு மணத்தியால நேரமும் காணும்.

2. கணினி

உங்களிட்ட சொந்தமா ஒரு கணினி இருக்கிறது நல்லம். அலுவலக கணினியிலயே எல்லாம் செய்யலாம் எண்டா கொஞ்சம் கஸ்டம்.

3. நேரம்

இது இணையத்தில் வேலை செய்ய என்று மட்டுமல்லாமல் எங்கு வேலை செய்வதானாலும் நேரம் என்பது முக்கியமானது. ஒக்டோபர் 2008 சௌந்தரசுகன் இதழில் இரவீந்திரபாரதி எழுதிய எப்படியும்.. சிறுகதையில வாற மாதிரி உங்களுக்கு நேரமிருந்தா அதையும் நேரம் எண்டு கொள்ள முடியாது.

ஆங்கிலத்தில் Quality time என்று சொல்லுவார்கள், அந்த நேரம் எமக்கு தேவை. தினமும் உங்களிடம் இரண்டு மணத்தியாலம் Quality time இருக்குமானால் கூட உங்களால் இணையத்தில் சிறப்பாக வேலை செய்ய முடியும். (நான் தினமும் ஒரு மணத்தியாலமாவது வேலை செய்வது என்று நினைத்திருக்கின்றேன்.)

4. Profile

எமக்கு வேலைதருபவர்கள் எங்களது கோரல்களை பார்த்த பின்னர் எம்மைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பொதுவாக விரும்புவார்கள் எனவே Elance அல்லது GetAFreelancer தருகின்ற எமது Profile பக்கத்தை முடிந்தளவு சிறப்பாக பேணுதல் வேண்டும். அனானியாக இருக்கின்ற எவருக்கும் எவரும் வேலை தர விரும்பமாட்டார்கள்.

Profile இல் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

a. புகைப்படம்.
பொதுவாக நாங்கள் எங்கள் வலைப்பதிவுகளில் புகைப்படங்களை பொதுவில் வைக்க விரும்புவதில்லை. (உதாரணத்திற்கு இளா என்றால் மஞ்சள் நிறத்தில் வீதிக்குறியீடு போன்ற ஒரு உழவு இயந்திரமும், ரவிசங்கர் என்றால் பச்சையாக ஏதோ ஒரு இலையும் தான் ஞாபகத்துக்கு வரும்). ஆனால் இணையத்தளமூடாக வேலை செய்யும் போது இவை சரிப்படா. பொதுவாக எமது புகைப்படம் எம்மை நன்கு அறிந்தவர் போன்ற உணர்வை வேலை தருபவருக்கு ஏற்படுத்தும். இது மிக முக்கியமானது.

b. குறிச்சொற்கள்.
வேலை தருபவர்கள் பொதுவாக சிறந்த வேலையாட்களை தேடிக்கண்டுபிடிக்க விரும்புவார்கள். எனவே அவர்கள் அதற்கான தேடலை செய்யும் போது நாங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டுமாயின் எமது குறிச்சொற்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

c. tagline
இதனை பொதுவாக நம்மவர்கள் நன்கு பயன்படுத்துவதில்லை. tagline இல் சரித்திரம் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். tagline எமது திறமையை இரண்டு மூன்று சொற்களில் நச்சென்று சொல்லுவதாக இருக்க வேண்டும்.

d. எம்மைப்பற்றிய விபரம்.
Elance போன்ற இணையத்தளங்களுடாக வேலைதருபவர்கள் உங்கள் திறமையைத்தான் எதிர்பார்ப்பார்களே தவர நீங்கள் எங்கு படித்தீர்கள் திருமணமானவரா இல்லையா என்று எதிர்பார்ப்பதில்லை. எனவே அவ்வாறன விடயங்களை பொதுவாக விபரத்தில் இடத்தேவை இல்லை. சிலர் தமது விபரத்தில் தமது சுயவிபரக்கோவையை அப்படியே இடுவதுண்டு. ஆனால் அது நல்ல விளைவுகளை கொண்டு வரமாட்டாது. மதம் சார்ந்த விடயங்களை இணைப்பது பொதவாக நல்லதல்ல. சில நிறுவனங்கள் வேலை தரும்போது இப்படியான விடயங்களை எதிர்பார்த்தால் அவர்களுக்கு மட்டும் அவற்றை கொடுத்தால் போதுமானது.

5. Portfolio

பொதுவாக இணையத்தள வடிவமைப்பவர்கள் அல்லது சின்னங்கள், பதாகைகள், அழைப்பிதழ்கள் வடிவமைப்பவர்கள் தங்கள் Portfolio ஒன்றினை வைத்திருப்பது பயன்தரும். ஏனெனில் பொதுவாக வேலை தருபவர்கள் நீங்கள் செய்த முன்னைய வேலைகளை பார்க்க ஆர்வமாயிருப்பார்கள். Elance போன்ற இணையத்தளங்கள் அங்கத்தவர்களுக்கு இதுபோன்ற வசதிகளை செய்து தந்தாலும், தனியாக portfolio ஒன்றினை வைத்திருப்பது அதிக பயன் தரும். எனைய வேலைகள் செய்பவர்களும் உதாரணமாக முகாமைத்துவம், சட்டம், மொழிபெயர்ப்பு, தள மேலாண்மை செய்பவர்களும் அவர்களுடை கடந்தகால வேலைகளை வெளிப்படுத்தும் வகையில் கட்டாயம் ஒரு Portfolio வைத்திருக்க வேண்டும்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் portfolio பார்த்தவுடன் புரியக்கூடியதாக சரியாக வகைப்படுத்தி வரிசைப்படுத்தி உங்கள் கடந்த கால வேலைகளை வெளிப்படுத்தவேண்டும். ஒருவர் உங்கள் portfolio இற்கு வந்து ஆராய்ச்சி செய்துதான் அவற்றை அறிய வேண்டும் என்றிருந்தால் நீங்கள் அவ்வாறொன்றை வைத்திருப்பதில் பயனில்லை.

உதாரணத்திற்கு கீழே காட்டியிருக்கின்ற சில portfolio க்களை சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.





இப்படியான ஒன்றை நீங்களும் இலவசமாக வைத்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அதை அடுத்த பதிவில் விரிவாக சொல்லுகின்றேன்

6. துறைசார் மேம்படுத்தப்பட்ட அறிவு.

மேம்படுத்தப்பட்ட அறிவெண்டா பெரிய ஒரு விசயம் இல்லை. நாட்டில என்ன நடக்குது எண்டு தெரிஞ்சிருக்க வேணும். உதாரணத்திற்கு உங்களுக்கு HTML மொழி தெரியும். அதில இணையத்தளங்களை வடிவமைக்கிற வேலைகளை நீங்கள் செய்ய விரும்பினால் உங்களுக்கு HTML தொடர்பா உலகத்தில என்னென்ன நடந்து கொண்டிருக்கு என்கிற செய்தி தெரிந்திருக்க வேண்டும். HTML 5.0 என்ன வசதிகளோட வருது HTML 4.1 இற்கும் HTML 5 இற்கும் என்ன வித்தியாசம் XHTML எண்டா என்ன எனபது போன்றவை.

இதனால என்ன பயன் என்பதை கோரல் ஒன்றை எப்படி செய்யிறது எண்டு பாக்கேக்க சொல்லுறன்.


கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் அடுத்த பதிவில் பார்ப்போம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

24 தை, 2009