வேர்ட்பிரஸ்

வேர்ட்பிரஸ் குருவாகுவோம் – பாகம் 5

முன்னைய நான்கு பாகங்களிலும் நாங்கள் வேர்ட்பிரஸினை எங்கள் கணினியில் நிறுவி ஒழுங்குபடுத்தி பின்னர் அதனை ஓரளவுக்கு தேடுபொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் வேர்ட்பிரஸை நாங்கள் விரும்பியவாறாக அழகுபடுத்த போகின்றோம் என்பதை பார்ப்போம்.

நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பெருமளவான அடைப்பலகைகளை இணையத்தில் இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ள முடியும் (Free wordpress themes என கூகிள் பண்ணி பாருங்கள்). இருந்தாலும் உங்களுக்கு மட்டுமென்றாயினும் ஒரு அடைப்பலகையை உருவாக்கும் ஆசை வருகின்ற போது இப்பாகம் உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். மேலதிகமாக உங்களுக்கு இருக்கின்ற இலவச அடைப்பலகையில் மாற்றங்கள் செய்ய விரும்புகின்ற போது கூட இது உதவும்.

ஒரு வேர்ட்பிரஸ் அடைப்பலகை அடிப்படையாக இரண்டு கோப்புகளை கொண்டது.
index.php
style.css

இங்கே இந்த index.php உங்கள் விடயங்கள் எங்கே வெளிக்காட்டப்படபோகின்றன என்பதை சுட்டிக்காட்டும். இதன் கட்டுமானம் XHTML மொழியினை அடிப்படையாக கொண்டது. எனவே உங்களுக்கு நிச்சயமாக XHTML tag கள் தொடர்பான ஒரு அறிவும் அத்தோடு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்கின்ற அறிவும் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக சொல்லப்பட்ட style.css உங்கள் விடயங்கள் ஒவ்வொன்றும் பார்வைக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை சொல்லுகின்ற கோப்பாகும். எனவே உங்களுக்கு css இன் அடிப்படையான விடயங்கள் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டாலும் அது தொடர்பாக நாங்கள் ஓரளவுக்கு பார்ப்போம்.

XHTML, HTML என்ன வித்தியாசம்??
எனக்கு HTML தெரியும் அது என்ன XHTML? இரண்டும் ஒண்டுதானே எண்டு கேக்கிறாக்களுக்காக கீழ இரண்டுக்கும் இடையிலான அடிப்படையான வித்தியாசங்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறன்.

Hyper Text Markup Language அல்லது HTML என்பது, SGML எனப்படுகின்ற Standard Generalized Markup Language இனுடைய ஒரு உருவாக்கமாகும் (Application). இது நாங்கள் சில tag களை விட்டுவிடவும் சில attribute களை குறைத்துக்கொள்ளவும் அனுமதிக்கின்றது.

XHTML அல்லது Extensible HyperText Markup Language என்பது, XML எனப்படுகின்ற Extensible Markup Language இனுடைய ஒரு உருவாக்கமாகும். இது நாங்கள் எந்த ஒரு tag இனை விட்டுவிடவோ அல்லது attribute இனை குறைத்துக்கொள்ளவோ அனுமதிக்காது. இருந்தாலும் வெறுமையான tag களுக்கு இது ஒரு சுருக்க முறைமையை அறிமுகப்படுத்தி உள்ளது. (உதாரணங்கள் தேவையென்றால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.)

இன்னுமொரு முக்கிய வித்தியாசம் என்னவெனில் உங்கள் HTML கோப்பில் சரியாக tag கள் முடிக்கபடாது விட்டாலும் இணைய உலாவியில் அவை சரியாக தெரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனா XHTML கோப்பை பொறுத்தவரை இப்பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிழையாகும்.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இவற்றிற்கிடையான வித்தியாசம் எங்கள் CSS கோப்பை நாங்கள் எழுதும் முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். எங்கள் அடைப்பலகை அடிப்படையாக CSS கோப்பொன்றை கொண்டிருப்பதால் நாங்கள் இந்த வித்தியாசத்தை அறிந்து கொள்ளுவது முக்கியமானதாகும்.

Case sensitive
அடிப்படையில் CSS கோப்பானது case sensitive இல்லாதது. இருந்தாலும் XHTML ஆனாது case sensitive ஆனது ஆகையால் இது CSS இல் பாதிப்பை கொண்டுவரும். (HTML case sensitive அல்லாதது. சில குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து)

உதாரணமாக

h1 {
font-size: 150%;
}
H1 {
color: red;
}

ஆகிய இரண்டும் வேறு வேறானவை.

Optional tags
இங்கு மிகச்சுருக்கமாக சொல்லுவதானால், முன்னர் சொன்னது போல நாங்கள் HTML இல் tag களை விட்டுவிடலாம். ஆனால் XHTML இல் அவை அனைத்தும் மிக முக்கியமானவை. எனவே CSS கோப்பும் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். (மேலும் விளக்கமான விபரம் இது தொடர்பாக தேவையெனில் பின்னூட்டமிடுங்கள், இரு மொழிகள் தொடர்பான DOM மரம் எவ்வாறு இங்கு வருகிறது என விளக்க முயற்சிப்பேன்)

Properties for the root element
இங்கும் சுருக்கமாக சொல்லுவதானால் HTML ஆனது body tag இனையே அடிப்படையாக கொள்கிறது. இங்குதான் நாங்கள் எமக்கு தேவையான attribute களை சேர்க்கமுடியும். ஆனால் XHTML இல் அவ்வாறல்ல.

சரி இப்பொழுது உங்களுக்கு இவ்விடயம் தொடர்பாக ஒரு அடிப்படை அறிவு வந்திருக்கும்.

அடுத்ததாக

அடைப்பலகை ஒன்றை உருவாக்க தேவையான மென்பொருட்கள்.
அடைப்புக்குறிக்குள் இருப்பவை நான் பயன்படுத்தும் மென்பொருட்கள்.

PHP Editor (Adobe Dreamweaver)

CSS Editor (CSSEdit)

இவை இரண்டுக்கும் நீங்கள் Notepad இனை கூட பயன்படுத்த முடியும். Emeditor இரண்டுக்குமே நல்ல மென்பொருள். இலவச Notepad++ நல்ல மென்பொருளாயினும், யுனிகோட் ஒத்திசைவு இல்லை என்பதை கவனித்து கொள்ளுங்கள்)

Graphics Editor (Adobe Photoshop).

Gimp ஒரு நல்ல இலவச மென்பொருள்.

இவற்றை விட வழங்கியாக மாற்றப்பட்ட கணினியும், ஒரு வேர்ட்பிரஸ் நிறுவலும் உங்களுக்கு தேவைப்படும். (உங்கள் அடைப்பலகையினை சோதிக்க)

இண்டைக்கு விசயத்துக்க வராமலேயே பாடம் முடியுது. அடுத்த பாகத்தில தொடருவம். கேள்வியிருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.

10 வைகாசி, 2008

வேர்ட்பிரஸில் SEO – பாகம் 4

நாங்கள் இந்தப்பகுதியினில் நுழைவதன் முன்பாக ஒரு அடைப்பலகையை அல்லது நீட்சியை எவ்வாறு நிறுவுவது என்பது தொடர்பாக பார்ப்போம். வேர்ட்பிரஸ் அதிகளவான இலவச அடைப்பலகைகளையும் நீட்சிகளையும் கொண்டுள்ளது. அனேகமாக உங்களுக்கு வேர்ட்பிரஸில் இருக்கின்ற வசதியினை விட மேலதிகமாக ஒரு வசதி தேவைப்படும்போது அதற்குரிய நீட்சியொன்றை இலவசமாக wordpress.org இலிருந்து உங்களால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.

அடைப்பலகை அல்லது நீட்சியொன்றை நிறுவுதல்.
உங்களுக்கு தேவையான அடைப்பலகையை அல்லது நீட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பிரதிசெய்து அவற்றிற்குரிய கோப்புறைகளில் ஒட்டி விடுங்கள்.

அடைப்பலகையாயின், htdocs-wordpress-wp-content-themes
நீட்சியாயின், htdocs-wordpress-wp-content-plugins

பின்னர் உங்கள் நிருவாக முகப்பிற்கு சென்று அதனை activate செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

இதற்கு நீங்கள் அடைப்பலகையாயின் Design tab இற்கும் நீட்சியாயின் plugin tab இற்கும் செல்ல வேண்டி வரும்.

சரி இன்றைய விடயத்துக்கு வருவோம்.

SEO என்றால் என்ன?
Search Engine Optimization என்பதன் சுருக்கமே SEO ஆகும்.

ஏன் SEO அவசியமானது??
உலகில் எத்தனையோ வலைப்பதிவகள் நாளாந்தம் உருவாகிய வண்ணம் உள்ளன. ஒரு இணைய பாவனையாளரால் ஒவ்வொரு இணையமாக சென்று பார்க்க முடியாது. எனவே எமக்கு தேவையானவற்றை பொதுவாக தேடுபொறிகளின் உதவியோடு தேடிப்பெற முயல்கின்றோம். எனவே நாங்கள் என்னதான் திறமையாக எழுதினாலும் வெளி உலகிற்கு தெரியவருவதற்கு எமது வலைப்பதிவுகள் தேடுபொறிக்கு இயைவானவையாக இருத்தல் வேண்டும்.

உதாரணமாக ஒருவர் சிறப்பாக மிகவும் பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை வலைப்பதிந்து வருகின்றார் என கொள்வோம். இப்பொழுது நான் மருத்துவக்குறிப்புகள் தொடர்பாக கூகிள் பண்ணும்போது அவரது வலைப்பதிவு முதல் அல்லது இரண்டாம் பக்கத்துக்குள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், எனக்கு அவரது வலைப்பதிவை அணுகும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அவ்வலைப்பதிவு சிறப்பாக SEO செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.

சரி அப்படியானால் எவ்வாறு அதனை செய்வது??

வலைப்பதிவின் தலைப்பும் Tagline உம்.
உங்கள் வலைப்பதிவின் நிருவாக முகப்பிற்கு சென்று, அங்கு Settings tab இற்கு செல்லுங்கள். அங்கே General settings இல் Blog title மற்றும் Tagline இருப்பதை காண்பீர்கள்.

இங்கே முக்கியமாக Tagline இல் தேடுபொறிக்கு இயைவான ஒரு உங்கள் வலைப்பதிவு சம்பந்தமான ஒரு வசனத்தை உள்ளிடுங்கள். பொதுவாக இது உங்கள் பதிவை ஒருவரியில் சொல்லுவதற்கு ஒப்பானது. இன்போது உங்கள் வலைப்பதிவு எது தொடர்பானதோ அந்த விடயம் தொடர்பான குறிச்சொற்களை பயன்படுத் மறக்காதீர்கள்.

வலைப்பதிவின் Title tag.
வழமையாக நீங்கள் உங்கள் Title tag உங்கள் வலைப்பதிவின் பெயரை மட்டும் காட்டுவதாக அமைந்திருக்கும். இதனை ஒவ்வொரு பதிவிற்கு அதனதன் தலைப்புகளை காட்டக்கூடியவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.

இதற்கு நீங்கள் உங்கள் அடைப்பலகையின் header.php (htdocs-wordpress-wp-content-themes) கோப்பினை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக அது கீழே காட்டப்பட்டது போன்று இருக்கும்.

இப்பொழுது Title tag இற்குள் இருக்கும் நிரலை கீழே தரப்பட்டுள்ள நிரலை கொண்டு பிரதி செய்து விடுங்கள்.

இப்பொழுது உங்கள் வலைப்பதிவின் தலைப்பு கீழே காட்டப்பட்டது போன்று மாற்றமடையும்.

Permalink இனை மாற்றிக் கொள்ளுதல்.
பொதுவாக எமது வலைப்பதிவின் முகவரி கீழே காட்டப்பட்டது போன்று இருக்கும். இது தேடுபொறிக்கு ஒவ்வானதல்ல.

எனதே இதனை தேடுபொறிக்கு இயைவான அர்த்தமுள்ள முகவரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு உங்கள் நிருவாக முகப்பில் Settings tab இல் Permalink sub tab இற்கு வாருங்கள்.

இங்கே Custom structure என்பதனை தேர்வு செய்து %postname% என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள். அல்லது %postname%.html என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள் பின்னையது மிகச்சிறப்பானதாகும்.

குறிப்பு
இவ்வசதி வேலை செய்வதற்கு உங்களிடம் ஒரு லினி;க்ஸ் வழங்கி இருக்கவேண்டும். அவ்வாறல்லாவிட்டால் நீங்கள் இரண்டாவதாக இருக்கின்ற Date and name based இனை பயன்படுத்த முடியும்.
எனவே இதனை உங்கள் கணினியில் நீங்கள் செய்திருக்கினற நிறுவலில் சோதித்து பார்க்க வேண்டாம். சோதித்து பார்த்தால் நீங்கள் மீள ஒருமுறை வேர்ட்பிரஸை நிறுவவேண்டி வரும்.

Update services.
இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வலைப்பதிவில் நீங்கள் ஒவ்வொருமுறை பதிவினை இடும்போதும் இது தொடர்பான தகவல்கள் பல்வேறு சமூக இணையங்களுக்கும் திரட்டிகளுக்கும் தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் பெருமளவிலான வாசகர்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் Settings tab இல் Writing settings இற்கு செல்லுங்கள் அங்கு கீழே இருக்கின்ற Update services இற்கு வாருங்கள்.

இங்கே உங்களால் ஒன்றன் கீழ் ஒன்றாக பல இணையத்தளங்களை உள்ளிட முடியும். எந்தெந்த இணையத்தள முகவரிகளை இடவேண்டும் என்று இங்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இங்கிருக்கின்ற பிரச்சனை என்னவெனில் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவொன்றை இடும்போதும் இது அனைத்து இணையங்களுக்கு தகவல் அனுப்பவேண்டி இருப்பதால் உங்கள் நேரத்தை தின்றுவிடும். நீங்கள் இவ்வசதியை பயன்படுத் விரும்பின் No ping wait என்கின்ற இந்த நீட்சியை பயன்படுத்தலாம். இந் நீட்சி உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.

இதைவிட மேலதிகமாக வேண்டுமானால் நீங்கள் AddThis போன்றதொரு Social bookmarking plugin ஒன்றினை உங்கள் வலைப்பதிவில் பயன்படுத்த முடியும்.

இவை மிக அடிப்படையான SEO முறைகளாகும். இவற்றை விட மேலதிகமாக பல விடயங்களும் உள்ளன. அவை தொடர்பாக இந்த தொடரில் பின்னர் பார்ப்போம்

அவ்வளவுதான். சந்தேகம் ஏதும் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. சுகமான கேளவியெண்டா விடை சொல்லுறன்.

6 வைகாசி, 2008

வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் – பாகம் 3

இதற்கு முன்னர் இரண்டு பாகங்களில் நாங்கள் எங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக இலகுவாக மாற்றுவதென்றும், பின்னர் அதில் எவ்வாறு வேர்ட்பிரஸை நிறுவுவதென்றும் பார்த்தோம். இவ்விரண்டுமே மிக இலகுவானவையும் சந்தேகங்களை பெரிதும் எழுப்பாததுமான விடயங்களாகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தளவில் பதிலளிக்க முயல்கின்றேன்.

சரி இனி விசயத்துக்கு வருவோம்…

நீங்கள் நிறுவிக்கொண்ட வேர்ட்பிரஸின் நிருவாக முகப்பிற்கு வாருங்கள்.

இதற்கு உங்கள் இணையஉலாவியை திறந்து http://127.0.0.1/wordpress/wp-login.php என்ற முகவரிக்கு செல்லுவதன் மூலம் நீரபாக முகப்பினை அடைய முடியும். இதன்போது கேட்கப்படும் கடவுச்சொல், பயனாளர் பெயர் என்பன உங்களிடம் உள்ளது.

இங்கு நிருவாக முகப்பில் பிரதானமாக 7 tab கள் இருக்கின்றன. இவற்றில் தேவையானவையை பற்றி மட்டும் மிகச்சுருக்கமாக பார்ப்போம்.

Write
இப்பொழுது நீங்கள் Write என்னும் முதலாவது Tab இற்கு வந்தால் அங்கு மேலும் மூன்று Sub tab கள் இருப்பதை காணலாம்.

முதலாவதாக இருக்கும் Post என்பது ஒரு பதிவினை எழுதவும், Page என்பது ஒரு பக்கத்தை உருவாக்கவும், Link என்பது ஒரு தொடுப்பொன்றை உருவர்கி கொள்ளவும் பயன்படும். இப்பக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் அறிவுறுத்தல்கள் ஏதுமின்றியே உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். இருந்தாலும் இதிலே Post எனும் பக்கத்தின் கீழே இருக்கின்ற Custom fields என்பது மட்டும் மிகவும் வித்தியாசமானது.

இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் எங்கள் சாதராண ஒரு பதிவினை மிக இலகுவாக ஒரு photo blog ஆகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேவைக்குரிய பதிவாகவோ (புத்தக அறிமுகத்துக்கான பதிவு) மாற்றிக்கொள்ள முடியும். இதனைப்பற்றி நாங்கள் பிறிதொரு பாகத்தில் பார்ப்போம்.

இந்த Tab இற்கு அடுத்தபடியாக இருக்கின்ற Manage, Design, Comments Tabகள் சம்பந்தமாக நான் இங்கு எதுவும் செல்லுவதாக இல்லை. இதைப்பற்றி நான் அலட்டுவதை நீங்கள் கேட்குமளவிற்கு பொறுமைசாலிகள் இல்லை என்பது எனக்கு தெரியும்.

ஆனால் எங்களுக்கு விரும்பியது போல அடைப்பலகை ஒன்றை எப்படி உருவாக்கி பயன்படுத்துவது என்று நாங்கள் விரிவாக பிறிதொரு பாகத்தில் பார்ப்போம்.

Plugins page.
அதேபோல மற்றைய பக்கத்தில் இருக்கும் plugins பக்கம் நாங்கள் பயன்படுத்துகின்ற நீட்சிகளை வரிசைப்படுத்தி காட்டும். இங்கு நாங்கள் எமக்கு விரும்பிய நீட்சிகளை இலகுவாக நிறுவிக்கொள்ள முடியும் அத்துடன் இருக்கின்ற நீட்சியொன்றை பயன்படுத்துவதா இல்லையா எனவும் தீர்மானிக்க முடியும்.

பிறிதொரு பாகத்தில் ஒரு மிகச்சிறிய நீட்சியை எவ்வாறு உருவாக்கி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

User tab
இதற்கு அடுத்ததாக இருக்கும் Users இல் நீங்கள் இப்பதில் உறுப்பினர்களாக இருக்கும் பதிவர்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். அத்தோடு அதற்கு கீழே புதிய ஒரு பதிவரை உருவாக்கி கொள்ளும் வசதியும் காணப்படும்.

இந்த Tab இற்கு கீழே காணப்படும் Sub tab ஆகிய User profile இல், நீங்கள் குறிப்பிட்ட ஒரு பதிவர் தொடர்பான தகவல்களை சேமித்து வைக்க முடியும்.

Settings Tab
அடுத்ததாக மிகப்பிரதானமான Settings tab இனை பார்ப்போம். இங்குதான் உங்கள் பதிவு எவ்வாறாக வேலைசெய்ய வேண்டும், மற்றும் உங்கள் பதிவு தொடர்பான தகவல்கள் காணப்படும். இங்கே General settings இல் காணப்படுபவை தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் எழ வாய்ப்பில்லை.

Writting settings இலே நீங்கள் எழுதும் ஒவ்வொருபதிவு தொடர்பான தகவல்கள் காணப்படும். அத்தோடு கீழே காணப்படுகின்ற Post via e-mail என்பத வேர்ட்பிரஸிற்கு ஒரு புதிய விடயமாகும். இந்த வசதி மூலம் மின்னஞசல் ஒன்றை அனுப்பி உங்களால் பதிவொன்றை இட முடியும்.

அடுத்ததாக இருக்கின்ற Reading Settings இல் Front page display என்பது பிரதானமான விடயமாகும். இதன் மூலம் நீங்கள் உங்கள் முதற்பக்கமாக இருக்க வேண்டியது ஒரு Static page ஆ அல்லது வழமையாக நாங்கள் பார்க்கும் சாதாரண பதிவுகளை கொண்ட பக்கமா என தீர்மானிக்க முடியும்.

அடுத்து இருக்கும் permalink settings பகுதி மிக முக்கியமானது. அதனை பற்றி நாங்கள் SEO in WordPress எனும் பாகத்தில் பார்ப்போம்.

இந்த பாகம் அவ்வளவுதான். என்னால் முடிந்தவரையில் ஒரிரு வரிகளில் சொன்னால் பயன்தரும் என்கின்ற விடயங்களை பற்றி மட்டும் சொல்லி இருக்கின்றேன். உங்களுக்கு வேறு ஏதும் சந்தேகங்கள் நிருவாக முகப்பு தொடர்பாக இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

6 வைகாசி, 2008