நாடுகள் மொழிகள்

உலக மொழிகள்

உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912

இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516

உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ்

அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்)

அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)

குறைந்த சொற்களை கொண்ட மொழி : ரகி ரகி (Taki Taki) (340 சொற்கள்)

அதிக மக்கள் பேசும் மொழிகள் என்று வகைப்படுத்தும் போது எங்கள் தமிழ் மொழி 16,17 இடத்தில் காணப்படுகின்றது. மயூரேசன் அச்சப்படுவது போன்று தமிழுக்கு அழிவு ஒருபோதும் வராது என்று நாமும் நம்புவோம்.

மொழி அடர்த்தி கூடிய நாடு : வனுவாத் ( மேலதிக விபரத்துக்கு வனுவாத் பற்றிய குறிப்பை பாருங்கள்)

5 ஐப்பசி, 2006

பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)

இந்த சின்னஞ்சிறிய நாடு பற்றிய குறிப்புகள் முழுவதும் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

பிற்கேன், கென்டர்சன், டியூசி மற்றும் ஒயினோ தீவுகள் (Pitcairn, Henderson, Ducie and Oeno Islands) என்று உத்தியோக பூர்வமாக அழைக்கப்படும் பிற்கேன் தீவுகள் தென் பசுபிக் சமுத்திரத்திலுள்ள நான்கு தீவுகளை கொண்ட தீவுக் கூட்டமாகும். பசுபிக் பிராந்தியத்தில் இன்னமும் மீதமிருக்கும் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசமும் இதுதான். இத்தீவுகளில் இரண்டாவது பெரியதான பிற்கேன் மட்டுமே மனிதர் வாழுகின்ற இடமாகும். தன்னாட்சியற்ற ஆளுகைப்பிரதேசமாக ஐக்கியநாடுகள் சபை இதனை அடையாளப்படுத்தியுள்ளது.

பரப்பளவு : 5 சதுர கிலோமீற்றர் (பிற்கேன் தீவு மட்டும்)

மக்கள் தொகை : 67 (2005) பிற்கேன் கல்வி மைய இணையத்தில் 2003 க்கு பின்னரான கணக்கெடுப்பு இல்லை.

வரலாறு : இத்தீவின் உண்மையான மக்கள் பொலிநீசியன்கள் ஆவார்கள். இத்தீவு 1838ம் ஆண்டு பிரித்தானிய ஆளுகையின் கீழ் வந்தது. 1859 இல் இத்தீவின் முழு குடித்தொகையும் (193 பேர்) நோவாக் தீவிற்கு குடிபோனார்கள். ஆனால் 18 மாதங்கள் கழித்து அவர்களில் 17 பேரும் பின் 5 வருடங்களின் பின் 27 பேரும் தம் சொந்த இடத்திற்கு திரும்பினார்கள். 1937 இன் பின் இத்தீவு மக்கள் ஒரு ஐம்பது பேரைத்தவிர வேறு நாடுகளுக்கு குடிபோய்விட்டார்கள் (முக்கிமாக நியூசிலாந்துக்கு ). இத்தீவின் ஆளுனராக நியூசிலாந்தின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செயற்பட்டு வருகின்றார்.

பொருளாதாரம் : மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி மற்றும் விவசாயத்தில் தங்கியிருப்பதோடு பிரதான பொருளாதார வழியாக முத்திரை சேகரிப்போருக்கு முத்திரை விற்றல், தேன் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை என்பன காணப்படுகின்றன.

மதம் : இங்குள்ள மக்கள் அனைவரும் ஏழாம் நாள் திருச்சபையினை சேர்ந்தவர்கள்

மொழி : இவர்கள் 18ம் நூற்றாண்டு ஆங்கிலத்தினை ஒத்த ஒரு மொழியினை பேசுகின்றார்கள்.

இங்கு அரச செலவிலான செய்மதி இணைய இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

3 ஐப்பசி, 2006

லால் மொழி

புதிய விடயங்களை தேடி அறிவதில் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு???? எப்போதும் அலாதிப்பிரியம் இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். லால் என்ற மொழியைப்பற்றி மிக அண்மையில் தான் அறிந்தாலும் அதனைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கு பதிகின்றேன்.

லால் என அழைக்கப்படும் இம்மொழி இன்னமும் வளர்ச்சியடையாத மொழியாகவே காணப்படுகின்றது. (இம்மொழி விரைவில் அழிந்துவிடும் என்பதே என் எண்ணம்). 2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இன்னமும் 749 தனி நபர்களே இம்மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். மத்திய ஆபிரிக்காவின் சாட்(Chad) நாட்டின் மொயன் சாரி நிர்வாகப்பிரிவிலுள்ள கோரி(Gori) தம்ரார்(Damtar) மற்றும் மெயிலா(Mailao) ஆகிய மூன்று கிராமங்களில் மட்டுமே இம்மொழி பேசப்படுகின்றது. இம்மொழிக்கென்று தனியான வரிவடிவம் ஏதும் கிடையாது.

இம்மொழி முதன் முறையாக 1977ம் ஆண்டுதான் பஸ்கால் பொயெல்டியூ(Pascal Boyeldieu) என்பவரூடாக மொழியியலாளர்களின் கவனத்திறகு வந்தது.
இம்மொழி பேசுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கின்ற போதும் 20ம் நூற்றாண்டின் இறுதிப்பாதி வரை அவர்கள் பாரம்பரியமான யோண்டோ(Yondo) மொழியினையே பின்பற்றி வந்திருக்கின்றார்கள்.
லால் மொழிக்குடும்பத்தில் எஞ்சியிருக்கும் இவ் லால் மொழி சாட் நாட்டுச் சட்டப்படி தேசிய மொழியாக்கப்பட்டிருந்தாலும் இதனால் இம்மொழியின் வளர்ச்சிக்கு இதனால் எப்பயனுமில்லை.

பஸ்கால் பொயெல்டியூ என்பவரின் கருத்துகள் எல்லாம் உண்மையென நிரூபிக்கப்பட்டால், மொழியியல் ரீதியாக மத்திய ஆபிரிக்க மொழிகளின் எஞ்சியிருக்கும் ஒரே மொழி இதுவாகத்தான் இருக்கும்.

இம்மொழியில் இதுவரை அறியப்பட்ட எண்கள் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு மட்டுமே. இருந்தாலும் இப்போது விவசாயம் மற்றும் மீன்பிடி செய்து வரும் இம்மொழி பேசும் மக்கள் முற்காலத்தில் செம்மறியாடு வளர்ப்பவர்களாக இருந்தமையால் மேலும் எண்கள் இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

2 ஐப்பசி, 2006