அனுபவம்

எனது அனுபவங்களின் தொகுப்பு

நானும் கொமிக்ஸ்களும்

குறிப்பு: இடையிடையே இருக்கின்ற அட்டைப்படங்கள், இந்நாளில் ஒரு புத்தகம் கூட கிடைக்காது தவிக்கும் மற்றவர்களை கடுப்பேற்ற வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு ஒளிவருடல் செய்து இணைத்திருக்கின்றேன். 🙂

புத்தகங்களை வாசிப்பதில் எப்போதும் பிரியம் இருந்தாலும், நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்க காரணியாய் இருந்தது கொமிக்ஸ்கள் தான். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தரம் 3 கற்றுக்கொண்டிருந்த வேளையில் ராணி கொமிக்ஸ் அறிமுகமானது. முதலாவதாக வாசித்த புத்தகம் எதுவென சரியாக நினைவில்லா விட்டாலும், இன்னமும் சில பகுதிகள் நினைவில் இருக்கின்றன. ஒரு வெஸ்ரேர்ண் கதை என நினைக்கின்றேன்.

கொமிக்ஸ் வாசிப்பதற்கு வீட்டிலும் சரி பாடசாலையிலும் சரி அவ்வளவு வரவேற்பில்லை. யாழ் இந்துக் கல்லூரிக்கு வந்த பின்னர், தமிழ் கற்பித்த குமாரசாமி சேர் கிழித்தெறிந்த ராணி கொமிக்ஸ்களுக்கு அளவில்லை.

மாயாவி, மொடெஸ்ரி பிளைசி, பிளாஸ் கோர்டன்  என்போர் எனது மிகப்பிடித்த கதாநாயகர்களாய் இருந்தார்கள். (இப்போது புதிதாய் 2012 DYNAMITE கொமிக்ஸ் வெளியீட்டார் வெளியிட்ட மாயாவி, பிளாஸ் கோர்டன் கதைகளை பழைய ஆர்வத்தோடு படித்து தலையைப் பிய்த்துக்கொண்டதும் உண்மை. பழைய கதைகள் போல் இப்போதில்லை.)

Modesty Blaise

ராணி கொமிக்ஸ்களை வாங்கி வாசித்ததில்லை. வீட்டுக்கு மிக அருகே இருந்த பழைய புத்தகக் கடையில் (இப்போது இந்த பழைய புத்தகக் கடைகள் எல்லாம் எங்கு போயின என்றே தெரியவில்லை) ஒரு ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து வாசிப்பதுதான் வழக்கம். (வீட்டில் வாங்கித் தருமாறு கேட்க முடியாது. கோகுலமும் அம்புலிமாமாவும் மாதாமாதம் வீட வந்து சேரும் அங்கே கொமிக்ஸ்களுக்கு இடமில்லை). அவ்வாறு வாடகைக்கு எடுப்பதை நண்பர்களுடன் பரிமாறிக் கொண்டால் ஒரு ரூபாய்க்கே பல கொமிக்ஸ்களை வாசித்து விடலாம்.

லயன் மற்றும் முத்து கொமிக்ஸ்

ராணி கொமிக்ஸ் இன் பின்னர் அறிமுகமாகியதுதான் லயன் மற்றும் முத்து கொமிக்ஸ். பழைய புத்தகக் கடையில் தான் அதுவும் அறிமுகமாகியது. லயன் கொமிக்ஸில் மிகப்பிடித்த கதாநாயகர் லக்கிலூக். அதன் பின்னர் இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், ரெக்ஸ் வில்லர், கப்டன் டைகர், மாண்ட்ரேக், சிக்பில் & கோ, விங் கொமாண்டர் ஜோர்ஜ், ரிப்போர்ட்ர் ஜானி என அனைவரையும் பிடிக்கும். கொமிக்ஸ் புத்தகங்களின் மீது தீர்வமான ஆர்வத்தை ஏற்படுத்தியவை லயன் மற்றும் முக்து கொமிக்ஸ்கள் தான்.

Lucky Luke

கிடைக்கின்ற பணத்திற்க லயன் மற்றும் முத்து கொமிக்ஸை வாங்கிச் சேர்க்கத் தொடங்கியதும் அப்போதுதான். யாழ்ப்பாணத்திற்கு அரிசி வருவதற்கே கஸ்டமாக இருந்த அந்நாளில் புத்தகக்கடைகள் சிலவற்றில் கொமிக்ஸ்களை வாங்க முடிந்தது புண்ணியம்தான்.

The Spider (British)
Tex Willer
Mandrake
Chic Bill
Lieutenant Blueberry
Reportar Jaani

ஆங்கில கொமிக்ஸ்கள் 

கொமிக்ஸ் வாசிப்பது ஒரு பைத்திய நிலையை அடைந்த போது தமிழ் கொமிக்ஸ் ஏதும் கிடைக்காமல் போனால் சரி ஆங்கிலத்தில் வாசிப்போம் என்ற எண்ணத்தில் கிடைக்கும் ஆங்கில கொமிக்ஸகளை வாசிக்கத் தொடங்கியபோது யாழ் இந்துவில் தரம் 8 படித்துக்கொண்டிருந்தேன். முதலாவதாக கிடைத்த கொமிக்ஸ் Asterix and Obelix இதுவரை நான் வாசித்த கொமிக்ஸ்களில் மிகச்சிறந்ததொன்றாயினும், அப்போது எள்ளளவேனும் புரியவில்லை. எனது ஆங்கில அறிவு அவ்வளவு. பின்னர் தரம் 11 படிக்கும் போது பாடசாலை நூலகத்தில் TinTin புத்தகங்கள் அவ்வளவும் வந்து சேர்ந்திருந்தது.

எங்களது மோட்டார் பொறியியல் பாட ஆசிரியரே அப்போது நூலகராயும் இருந்தார். அத்தோடு அவர் சாரணீயத்தில் உதவி மாவட்ட ஆணையாளராயும் இருந்தார். நான் சாரணீயத்திலும் இருந்ததோடு, மோட்டார் பொறியியல் படித்த நான்கே மாணவர்களில் ஒருவனாயும் இருந்ததால் அவரோடு நல்ல உறவிருந்தது. வேறொருவரும் பெரிதாய் சீண்டாதிருந்த TinTin கொமிக்ஸ் அவ்வளவையும் வீடு கொண்டு சென்று வாசிக்க அனுமதித்தார். ஒரே மூச்சில் முப்பது இதழகளையும் வாசித்து முடித்த  பின்னர் ஆரம்பமாகியது ஆங்கில கொமிக்ஸ் பைத்தியம். யாழ்ப்பாண புத்தகக் கடைகளில் கல்வி சார் ஆங்கில நூல்களை தவிர வேறேதும் ஆங்கில நூல்கள் மருந்துக்கேனும் விற்கப்படுவதில்லையாகையால் நூலகங்கள் மட்டுமே தஞ்சமாய் இருந்தது. அதனால் பெரிதளவில் எவையும் கிடைக்கவில்லை.

பாடசாலையினை விட்டு விலகி பல்கலைக்கழக காலத்திலும் உத்தியோகம் செய்யத் தொடங்கிய காலத்திலும் கிடைக்கின்ற அனைத்து கொமிக்ஸ்களையும் தமிழ் ஆங்கிலம் என்று பாராது வாங்கி சேகரிக்க தோடங்கினேன். இது வரை காலமும் வாசித்தவற்றில் எனக்கு பிடித்த சில ஆங்கில கொமிக்ஸ்களை இங்கே வரிசைப்படுத்தின்

Asterix and Obelix – ஒரு பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த கொமிக்ஸ். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
Lucky Luke – உங்கள் அனைவருக்கும் தெரிந்த கதாநாயகன்.
Aldebaran மற்றும் தொடர்ச்சியான Betelgeuse – வாசித்த Scifi கொமிக்ஸ்களில் சிறந்தது இது என்பேன்.
Thorgal – தனியாய் ஒரு பதிவு இதைப்பற்றி எழுத வேண்டும்.
Modesty Blaise – எமக்கெல்லாம் நன்கே அறிமுகமான மொடெஸ்ரி பிளைஸி.
Iznogoud – மதயில்லா மந்திரியென லயன் கொமிக்ஸால் அறிமுகமாகிது – வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
XIII – இரத்தப் படலம் என்று சொன்னால் வேறு அறிமுகம் தேவையில்லைதானே?
Valerian and Laureline – Scifi கொமிக்களில் சிறப்பான இன்னொன்று
Lieutenant Blueberry – கப்டன் டைகர் என்று சொன்னால் வேறென்ன அறிமுகம் வேண்டும்.
Largo Winch – இப்பொது முத்து காமிக்ஸில் முதலாவது கொமிக்ஸ் தமிழில் வெளிவந்துவிட்டது (என் பெயர் லார்கோ)
The Blue Coats – இந்த சார்ஜென்ரையும் கோப்ரலையும் பார்த்து சிரிக்காவிட்டால் உங்களுக்கு சிரிக்கவே தெரியாதென்பேன்.

எனக்கு பிடித்த ஆங்கில கொமிக்ஸ்களை தனித்தனிப் பதிவுகளில் எழுதும் ஆர்வம் உண்டு. நேரமிருப்பின் முயற்சிப்பேன்.

13 ஐப்பசி, 2012

வலைப்பதிவர் சந்திப்பு – 2

தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் வேலைப்பளுவிற்கு மத்தியில், இலங்கையின் இரண்டாவது தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அனேகமாக தினமும் வலைப்பதிவுகளினூடாக சந்திக்கின்ற நண்பர்களை நேரிலே காண்கின்ற வாயப்பு கிடைப்பது மிக அரிது. இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள்.

கடந்தமுறையை விட ஒழுங்குபடுத்தல் சிறப்பாக இருந்ததாக எனது எண்ணம். ஒன்றுகூடலுக்கு வந்த அனைவரும் எதிர்பார்ப்போடு வந்திருந்தது இன்னமும் விசேடம். கலந்துரையாடல்களுக்கான நேரம் போதாதிருந்த போதிலும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டது மிக மகிழ்ச்சியாகவும் பங்குபெறத்தூண்டியதாயும் இருந்தது. கலந்துரையாடல்களுக்கான அறிமுக உரைகள் சிறியதாய் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது.

லோசன் அண்ணா – ஒரு உதாரணத்திற்காகத்தான் உங்கள் பதிவினை கிரிக்கெட் பதிவாக குறிப்பிட்டேன், உங்கள் பதிவை பற்றி நான் சொல்லித்தான் மற்றவர்கள் அறியவேண்டும் என்பது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அதே போல வந்தியத்தேவன் உங்கள் பதிவில் தான் நான் அனேகம் பின்னூட்டங்களை வாசிக்க நேரத்தை செலவழிப்பதுண்டு. அதன் அர்த்தம் பதிவு நன்றாக இருக்காது என்பதல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கீர்த்தி உங்கள் பேச்சைப்போலவே பயற்றம் பணியாரமும் நன்றாக இருந்தது. நன்றிகள்.

கீழே சில புகைப்படங்கள்..

DSC00112
DSC00119
DSC00113
DSC00114
DSC00115
DSC00116
DSC00117

24 மார்கழி, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய குறிப்பு

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகே எனக்கு இதனை எழுத நேரம் கிடைத்திருக்கிறது. ஆனால் வந்தியத்தேவன் எல்லோரும் நிச்சயம் எழுதுங்கள் என்று கேட்டதானால் இந்த பதிவு. இலவச இணையத்தளம் தொடர்பாக அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

வலைப்பதிவர் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டவுடனே கௌபாய் மதுவிடம் இதனை இணைய ஒளிபரப்பு செய்தால் என்னாலும் பங்குகொள்ள முடியும் என்று கேட்டிருந்தேன். உடனே அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்து இணையத்தில் ஒளிபரப்பு செய்திருந்தார். என்னால் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நேரடியாக கலந்து கொள்ள முடிந்ததானால் அதனை பயன்படுத்த முடியவில்லை, ஆனால் வெளிநாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்ள அது ஏதுவாக அமைந்தது. (நன்றி மது)

மதுவின் மடிக்கணினி சிறிது நேரம் என்னிடம் இருந்ததனால் பலருடன் அரட்டையடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இலங்கையின் அவுஸ்திரேலியாவின் முதலாவது பதிவர் சந்திப்புகள் போன்ற பல்வேறு அரிய விடயங்களை கானா பிரபா மற்றும் சயந்தனிடம் இருந்து அறிய முடிந்தது. பலருக்கு அரட்டையூடாக பதிலளிக்க முடியாது போனதுக்கு வருந்துகின்றேன். ஆனால் மடிக்கணினியை சுழற்றியே அனைவரையும் படம்பிடிக்க வேண்டிய தேவை இருந்ததனாலேயே இந்த தவறு ஏற்பட்டிருந்தது. இன்னுமொரு தடைவை வாய்ப்புக்கிடைத்தால் சிறப்பாக செய்ய முடியும் என நினைக்கின்றேன்.

வலைப்பதிவர் சந்திப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டமாக நடைபெற்றது எனக்கு சிறிதளவு வருத்தமே. என்னைப்பொறுத்தவரை நான் ஒரு நண்பர்கள் சந்திப்பை எதிர்பார்த்தே சென்றேன். அதன்மூலம் புதிய பல பதிவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது. இருப்பினும் புதிய பதிவர்களுக்கு பயனுள்ள பல விடயங்களோடு பதிவர் சந்திப்பு இடம்பெற்றது வரவேற்கத்தக்கது.

6 ஐப்பசி, 2009