Posts Tagged "யாழ்ப்பாணம்"

கொடியேற்றம்.

நல்லைக்கந்தன் கொடியேற்றம் வழமையான கலகலப்பில்லாவிட்டாலும் வெகு விமர்சையாக இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வழமையான மக்கள் கூட்டம் இல்லை என்றாலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கோயிலிலே கூடியிருந்தார்கள்.

சரி கொஞ்சப்படங்களை பாருங்கோவன்
பிரதான வாயில்

தெற்கு வாயில்

கொடிமரம்

பிரதட்டை செய்யும் அடியார்கள்

கற்பூரம் கொழுத்தும் இடம் (கோயிலுக்கு வெளியே)

19 ஆவணி, 2007

ஐஸ்பழம், தேன்முறுக்கு

நேற்று ஞாயிற்றுக்கிழமை, பொழுதும் போகேல்ல சரி ஊரைச்சுத்துவம் எண்டு விடிய வெள்ளணவே (ஞாயிற்றுக்கிழமை எண்டா 11 மணிதான் விடிய வெள்ளன) பெடியள் (????????) எல்லாருமா வெளிக்கிட்டிட்டம். முதலில கண்ணில பட்டது ஐஸ்பழம். பள்ளிக்கூடம் படிச்ச காலத்தில பள்ளிக்கூடம் விட்ட உடனே செய்யிற வேலை ஓடிப்போய் ஐஸ்பழம் வாங்கிறது. ஒரு ஐயா சந்திரா ஐஸ்பழம் வச்சிருப்பார். அன்னாசி அது இது எண்டு கன பேர்களில இருக்கும். 5 ரூபா குடுத்து வாங்கி துண்டு துண்டா உடைச்சு இரண்டு மூண்டு பேர் குடிப்பம். நேற்று 10 ரூபா ஒண்டு. மலரும் நினைவுகள் வந்தா கீழ பாருங்கோ யாழ்ப்பாணத்து ஐஸ்பழத்தை.

ஐஸ்பழம் குடிச்சோன்ன றியோக்கு போய் ஐஸ்கிறீம் ஒண்டு குடிச்சா என்னெண்டு ஒரு யோசினை வந்துது. பிறகென்ன “றியோ ஸ்பெசல்” ஐஸ்கிறீம்தான். நல்லூர் திருவிழா வருகுதெண்டு கடையை பிரிச்சு மேஞ்சுகொண்டு இருக்கிறாங்கள். கொஞ்சம் குடிச்சாப்பிறகுதான் ஞாபகம் வந்து படமெடுத்தது. அதில படம் அவ்வளவு நல்லா இல்லை. முந்தி (ஓகஸ்ட் 11 க்கு முதல்) 40 ரூபா வித்ததெண்ட நினைக்கிறன். இப்ப 70 ரூபா. நல்லாத்தான் இருந்துது.

வெயிலேற வீட்டுப்பக்கம் போயிட்டு பிறகு பின்னேரம். நல்லூர்க் கோயிலடிக்கு போவம் எண்டு வெளிக்கிட்டம். அங்க போன வழமையான ஐயா கரம்சுண்டல் வண்டிலோட. மரவள்ளிக்கிழங்கு பொரியல் வாங்கி சாப்பிட்டா ஒரே உறைப்பு. இனிப்பா யாழ்ப்பாண ஸ்பெசல் தேன்முறுக்கு (எப்படி செய்யிறதெண்டு துயா, சமையல் கட்டில ஒருக்கா எழுதவேணும்.) இப்ப 10 ரூபா. முந்தி 5 ரூபா.

சரி கடைசியா நேரமாச்சு ஊரடங்கு சட்டம் எல்லே 7 மணிக்கு. திருவிழா வருகுது எண்டு நல்லூர் கோயில் வெள்ளை அடிபடுது. நீங்களும் பாருங்கோவன்.




14 ஆவணி, 2007

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

27 ஆனி, 2007