மென்பொருள்

அடொபி எட்ஜ் (Adobe Edge)

போட்டோசொப், பிளாஸ் போன்ற மிகச்சிறந்த மென்பொருள்களை வௌியிடும் அடொபி நிறுவனம் Edge என்கின்ற பெயரில் புதியதொரு மென்பொருளினை Labs இனூடாக வௌியிட்டுள்ளது. இம்மென்பொருளினை பயன்படுத்தி உங்களால் இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய அனிமேசன்களை HTML5, CSS3 மற்றும் ஜாவாஸ்கிரிப்ற் இனை பயன்படுத்தி இலகுவாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

இம்மென்பொருளில் உள்ள சில வசதிகள்.
1. மிக இலகுவாக பயன்படுத்தக்கூடிய User Interface. நீங்கள் ஒரு பிளாஸ் பாவனையாளரெனின் உங்களுக்கு இது புதிதாய் தெரியாது.
2. அடொபி நிறுவனத்தின் மற்றைய மென்பொருள்களோடு நன்கு இணைந்து வேலைசெய்வது.
3. இலகுவாக அனிமேஸன்களை பிளாஸ் மென்பொருள் போல் உருவாக்கி கொள்ள முடியும். 25 easing effects இந்த preview 1 பதிப்பில் உள்ளன.

மேலும் தகவல்களுக்கும் தரவிறக்கிக்கொள்ளவும் இங்கே வாருங்கள்.

குறிப்பு: இம்மென்பொருளினை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள உங்களிடம் ஆகக்குறைந்தது வின்டோஸ் விஸ்ரா அல்லது மக் பதிப்பு 10.6 இருக்க வேண்டும்.

2 ஆவணி, 2011

சில சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள்

நாங்கள் சாதாரணமாக கேள்விப்படுகின்ற இணைய மென்பொருள்கள் ஜும்லா, டுருபல், வேர்ட்பிரஸ் என்பன. இவை பொதுவாக எங்கள் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும். ஆனால் இவற்றைவிட பல விதமான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை நாமும் எங்கள் வழங்கிகளில் நிறுவி பயன்படுத்த முடியும். இவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்களும் பின்னூட்டங்களில் சொல்ல முடியும்.

1. Simple Invoices
இதனை நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவிக்கொண்டால் இலகுவாக இணையத்திலிருந்தே தேவையானவர்களுக்கு சிட்டைகளை அனுப்பிக்கொள்ள முடியும்.

2. Orange HRM
இது சாதாரணமான ஒருவருக்கு பயன்படாவிட்டாலும், ஒரு நிறுவனம் தனது மனிதவளங்களை முகாமை செய்வதற்கு பெருமளவில் பயன்படும். இது ஒரு பூரணமான மிகச்சிறந்த மனிதவள முகாமைத்துவ இணைய மென்பொருளாகும்.

3. Lime Survey
நீங்கள் இணையமூடாக ஒரு கணக்கெடுப்பை நடாத்த இருந்தால் உங்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய மென்பொருள் இது. கணக்கெடுப்புக்களை நடாத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட திறமூல மென்பொருளாகையால் அதற்கான எல்லா வசதிகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

4. Gloss Word
இணையத்திலிருந்து இயங்கக்கூடிய அகராதியொன்றை உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒரு திறமூல இணைய மென்பொருள் இதுவாகும். இதனை உங்கள் வழங்கியில் நிறுவிக்கொள்ளுவதன்மூலம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அகராதியை நீங்கள் இலகுவாக உருவாக்கிவிட முடியும்.

5. Bug Genie
நீங்கள் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளராகவோ அல்லது ஒரு குழுவாக கணினியில் பணிபுரபவராகவோ இருந்தால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். பிரச்சனைகளை கண்காணித்துக்கொள்ளவும், திட்ட மேலாண்மை செய்யவும் இது ஒரு சிறந்த திறமூல மென்பொருள்.

25 ஆடி, 2011

புத்தகக்குறிகளுக்கு xmarks

நான் பகுதிநேரமாக ஒரு இணையத்தள வடிவமைக்கும் பணி செய்து வருவதனால் தினமும் பல இணைய உலாவிகளை பயன்படுத்துவது வழமை. எனக்கு தேவையான ஏதாவது விடயத்தை இணையத்தில் கண்டால் எனது கை தனாகவே அதனை புத்தகக்குறிகளுக்குள் சேர்த்துவிடும். இதனால் ஒவ்வொரு இணைய உலாவியிலும் வேறு வேறு பல புத்தகக்குறிகள் இருக்கும். ஏதாவது ஒரு சேர்த்துவைத்த புத்தக்குறியை தேட ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும். எல்லா இணைய உலாவிகளையும் திறந்து தேடவேண்டிய தேவை ஏற்படுவதோடு தேவையற்ற நேரவிரயமும் உண்டு.

இதற்கு தீர்வாக கிடைத்த மென்பொருள்தான் xmarks. இதனை உங்கள் அனைத்து இணைய உலாவிகளிலும் நிறுவி பயன்படுத்துவதன் மூலம் அனைத்து உலாவிகளிலும் ஒரே புத்தகக்குறிகளை கொண்டுவந்து விட முடியும்.

புத்தக்குறி – Bookmark

அத்தோடு உங்கள் புத்தகக்குறிகள் இணையத்திலும் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதால், நீங்கள் உங்கள் கணினியன்றி வேறு கணினிகளிலும் உங்கள் பயனர் கணக்கூடாக புத்தக்குறிகளை அணுகமுடியும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே வாருங்கள்.

25 ஆனி, 2011