யாழ்ப்பாணம்

வரதர் ஐயா காலமானார்

ஈழத்து இலக்கிய உலகில் மூத்தானாய் நிமிர்ந்து நின்று அழகு செய்து வரதர் ஐயா அவர்கள் இன்று காலை காலமானார்.

கதாசிரியர், நாவலாசிரியர், கவிதையாசிரியர், பதிப்பாசிரியர் போன்ற பல தளங்களிலே சளைக்காது தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் வரதர் ஐயா அவர்கள்.1940 இலே ஈழகேசரிபத்திரிகை மூலம் இலக்கிய உலகிலே நுழைந்து 1943 இலே இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்துக்கு கால்கோள் அமைத்து 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தன் பெயரை ஆழமாக முத்திரையிட்டவர் வரதர் அவர்கள். இதனைவிட ஆனந்தம், வெள்ளி, புதினம், தேன்மொழி, அறிவுக்களஞ்சியம் போன்ற சஞ்சிகைகளை காலத்துக்கு காலம் வெளியிட்டு தன் சுவடுகளை இதழியல் துறையில் ஆழப்பதித்தவர்.

ஈழத்து இலக்கி உலகிலே தனது இருப்பை ஆழ அகல பதிந்து இலங்கை அரசின் இலக்கிய வாதிகளுக்கான அதியுயர் விருதான சாகித்திய இரத்தினம் விருதை முதன்முதல் பெற்ற தமிழ் இலக்கியவாதியாகவும் இவர் திகழ்கின்றார்.

இதனைவிட பிரச்சனைகள் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் எரிகின்றது, மற்றும் 24 மணி நேரம் போன்ற நூல்களை வெளியிட்டு துணிச்சலுடன் செயலாற்றிய ஒரு பதிப்பாசிரியர், நூல்வெளியீட்டாளர்.

முதன்முதலாக ஈழத்தில் கவிதைக்கென சஞ்சிகை நடாத்திய புரட்சிவாதியும் இவரே

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

21 மார்கழி, 2006

ஆறுமுக நாவலர் – பிறந்த தினம்

“நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே” என்று சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பாடிய; செய்யுள் வடிவிலிருந்த தமிழிலக்கியத்தினை கற்றோரும் மற்றோரும் உணரும்படி செந்தமிழ் உரைநடை வடிவிற்கு மாற்றி தமிழிற்கு பரோபகாரம் செய்த நல்லை நகர் ஆறுமுக நாவலரின் பிறந்த தினம் இன்றாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலே பிறப்பெடுத்த தமிழ் உரைநடை இலக்கியத்தை விருத்திசெய்து, பொதுமக்கள் எல்லோருக்கும் புலப்படக்கூடிய ஒரு உரைநடையினை உருவாக்கி அதன் மூலம் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெருமகனார் ஆறுமுக நாவலர் அவர்கள். ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று பாராட்டப்பட்ட ஆறுமுக நாவலர் அவர்கள் தனி ஒருவராய் தமிழ் உரைநடைக்கு செய்த பரோபகாரம் என்றும் நினைவில் கொள்ளப்படவேண்டியது. இவருடைய சைவவினாவிடைகள் இன்றுவரை சைவச்சிறார்களுக்கும் பெரியோருக்கும் வேதங்களாய் நின்று விளங்குகின்றன.

இவர் எழுதிய உரைநடை நூல்களுள்ளே குறிப்பிடத்தக்கவை பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கோயிற்புராண உரை முதலியன. இவர் இயற்றிய கண்டன நூல்கள் சுப்பிரபோதம், வச்சிரதண்டம் முதலியன. இவைதவிர சைவசமயத்தின் சிறப்புக்களை தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கமாக எழுதிய யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப்பற்றி எழுதிய கட்டுரை என்பனவும் இவரின் உரைநடைச் சிறப்பை எடுத்தியம்பிய வண்ணம் உள்ளவை.

இன்று நாவலர் பெருமானுடைய குருபூசை நல்லூர் கந்தசுவாமி கோயிலிலே விசேட பூசை வழிபாடுகளுடன் வெகு சிறப்பாக விமர்சையாக நடைபெற்றது.

சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கக்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப்
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானார் தந்த
வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோது
மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம்.
– சிறீல சிறீ ஆறுமுக நாவலர்.

18 மார்கழி, 2006

யாழ்ப்பாணம் பாக்கலாம்

இப்ப பாதைகளும் மூடினா பிறகு கொழும்பில இருக்கிற ஆக்களோ ஏன் வவுனியாவில இருந்து கூட யாழ்ப்பாணம் வந்து பாக்கேலாம ஆக்கள் இருக்கினம். வெளிநாட்டில இருந்து வாற ஆக்களும் இல்லாமப்போச்சு. அவயளுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தை பாக்கிற ஆசை இல்லாம இருக்குமே. அதுதான் படு கடுமையா யோசிச்சு யாழ்ப்பாணத்தை என்னென்ண்டாவது காட்டிறது எண்டு முடிவெடுத்திட்டன். இது மாதிரி வடமராட்சி தென்மராட்சி எண்டு பிரிச்சு பிரிச்சு காட்டிறதெண்டும் முடிவெடுத்திறக்கிறன் சரியா.

கீழ வடிவா யாழ்ப்பாணத்தை பாத்திட்டு அப்பிடியே நன்றி சொல்லி ஒரு பின்னூட்டத்தையும் போட்டு விடுங்கோ.

6 மார்கழி, 2006