என்றென்றும் பல்ஸ்தீன்

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக

மேன்மைமிகு
மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.

ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.

அது எழவே செய்யும்.

21 கார்த்திகை, 2006

கதிரைச் சிலேடை வெண்பா 16,17

பின்னூட்டங்களின் பின் இந்த இரு பாடல்களையும் பொருளுடன் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.

சொற்புலவர் தூக்கினிலுந் தூயமலர்ச் சோலையிலுங்
கற்பு மலருங் கதிரையே – வெற்புடனே
மாமூல வேரறுத்து வாழ்வமரர்க் கீந்தவஞ்ச
மாமூல வேரறுப்பான் வைப்பு (16)

வெற்புடனே – மகேந்திர மலையுடனே, மா மூல வேரறுத்து – அம்மலையிலுள்ள அரக்கர் குலத்தின் பெரிய மூலவேராகிய சூரனையும் அழித்து, அமரர்க்கு வாழ்வு ஈந்த – தேவர்களுக்கு அமரவாழ்வை முன்போலக் கொடுத்தவனாகிய, வஞ்ச மாமூல வேரறுப்பான் – உயிர்களது வஞ்சனை மிக்க இருண்மலத்தின் மூலமாகிய அவாவை அறுக்கும் முருகக் கடவுளது, வைப்பு – ஊர், சொற்புலவர் தூக்கினில் – சொல்வன்மையுள்ள புலரவர்களது செய்யுள்களில், கற்பு மலரும் கதிரையே – கற்பனை நயங்கள் விரிந்த பல பொருட்களை காட்டும் கதிரைப்பதியேயாகும், தூயமலர்ச்சோலையில் – தூய்மைவாய்ந்த பூஞ்சோலைகளில், கற்பு மலருங் கதிரையே – முல்லைக்கொடிகள் மலருங் கதிரைப்பதியேயாகும்.

நல்லார் மதிமுகத்து நாடு முலைமுகத்துங்
கல்லாரம் பூக்குங் கதிரையே – மல்லாடி
வந்தே விடுந்தேரான் மாயவடி வேற்பணித்த
வந்தே விடுந்தேரான் வாழ்வு. (17)

மல்லாடி வந்து ஏ விடுந்தேரான் மாய – போராடி எதிர்வந்து அம்புகளைத் தொடுத்த பகைவனாகிய சூரன் அழியுமாறு, வடிவேல் பணித்த – கூரிய வேலை ஏவிய, வந்து ஏவிடுந்தேரான் – வாயுதேவன் செலுத்திய தேரையிவர்ந்த முருகக்கடவுளின், வாழ்வு – கோயில், நல்லார் மதிமுகத்து – பெண்களது சந்திரன் போன்ற முகத்தில், கல்லாரம் பூக்குங் கதிரையே – குவளை மலர்கள் பூக்குங் கதிரைப்பதியேயாகும், நாடும் முலைமுகத்து – விரும்பப்படும் தனங்களின் மேல், கல் ஆரம் பூக்குங் கதிரையே – இரத்தினமாலை பொலியுங் கதிரைப்பதியேயாகும்.

20 கார்த்திகை, 2006

கதிரைச் சிலேடை வெண்பா 11-15

மிக்க குறத்தியரு மென்புனப்புள் ளோப்புநருங்
கைக்குறி பார்க்குங் கதிரையே – கைக்குங்
கடமலையு மையற் கடமு மழித்துப்
படமலையு மையன் பதி. (11)

அஞ்சநடை யார்கதுப்ப மம்மவிணை யுஞ்செயிரில்
கஞ்சனை கடுக்குங் கதிரையே – விஞ்சுபல
மாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமு
பாயத்தா னாடற் பதி. (12)

வெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டி
கண்ணி வளைக்குங் கதிரையே – நண்ணுங் (னிலுங்)
கருமாயச் சூரறுத்துக் காப்பான்கூர் வேலாற்
கருமாயச் சூரறுத்தான் காப்பு. (13)

இந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்
கந்துகத்தே ரோட்டுங் கதிரையே – முந்தும்
பாவமா வினையடித்தான் பாதனலை மேலுற்
பாவமா வினையடித்தான் பற்று. (14)

மன்னுகா ரிற்கடம்பு மாமணத்தி லாடவருங்
கன்னிகையை யேற்குங் கதிரையே – முன்னமலை
மாவர சத்தியத்த மால்கொளசுர் மைந்தடக்கு
மாவர சத்தியத்தன் வாழ்வு. (15)

20 கார்த்திகை, 2006