லால் மொழி

புதிய விடயங்களை தேடி அறிவதில் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு???? எப்போதும் அலாதிப்பிரியம் இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். லால் என்ற மொழியைப்பற்றி மிக அண்மையில் தான் அறிந்தாலும் அதனைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கு பதிகின்றேன்.

லால் என அழைக்கப்படும் இம்மொழி இன்னமும் வளர்ச்சியடையாத மொழியாகவே காணப்படுகின்றது. (இம்மொழி விரைவில் அழிந்துவிடும் என்பதே என் எண்ணம்). 2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இன்னமும் 749 தனி நபர்களே இம்மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். மத்திய ஆபிரிக்காவின் சாட்(Chad) நாட்டின் மொயன் சாரி நிர்வாகப்பிரிவிலுள்ள கோரி(Gori) தம்ரார்(Damtar) மற்றும் மெயிலா(Mailao) ஆகிய மூன்று கிராமங்களில் மட்டுமே இம்மொழி பேசப்படுகின்றது. இம்மொழிக்கென்று தனியான வரிவடிவம் ஏதும் கிடையாது.

இம்மொழி முதன் முறையாக 1977ம் ஆண்டுதான் பஸ்கால் பொயெல்டியூ(Pascal Boyeldieu) என்பவரூடாக மொழியியலாளர்களின் கவனத்திறகு வந்தது.
இம்மொழி பேசுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கின்ற போதும் 20ம் நூற்றாண்டின் இறுதிப்பாதி வரை அவர்கள் பாரம்பரியமான யோண்டோ(Yondo) மொழியினையே பின்பற்றி வந்திருக்கின்றார்கள்.
லால் மொழிக்குடும்பத்தில் எஞ்சியிருக்கும் இவ் லால் மொழி சாட் நாட்டுச் சட்டப்படி தேசிய மொழியாக்கப்பட்டிருந்தாலும் இதனால் இம்மொழியின் வளர்ச்சிக்கு இதனால் எப்பயனுமில்லை.

பஸ்கால் பொயெல்டியூ என்பவரின் கருத்துகள் எல்லாம் உண்மையென நிரூபிக்கப்பட்டால், மொழியியல் ரீதியாக மத்திய ஆபிரிக்க மொழிகளின் எஞ்சியிருக்கும் ஒரே மொழி இதுவாகத்தான் இருக்கும்.

இம்மொழியில் இதுவரை அறியப்பட்ட எண்கள் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு மட்டுமே. இருந்தாலும் இப்போது விவசாயம் மற்றும் மீன்பிடி செய்து வரும் இம்மொழி பேசும் மக்கள் முற்காலத்தில் செம்மறியாடு வளர்ப்பவர்களாக இருந்தமையால் மேலும் எண்கள் இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

2 ஐப்பசி, 2006

ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு

பரிமளம் சுந்தர் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாகச்செய்யப்பட்ட இந்த ஒப்பாய்வு நூலுருப்பெற்றிருக்கின்றது (கரோன் – நீரோன் பதிப்பகம் புரட்டாதி 2005). நூலை வாசிக்கும் போது நூலாசிரியர் இது சம்பந்தமாய் ஆய்வு செய்தார் என்பதைவிட தவம் செய்தார் என்பது தகுமெனலாம்.
ஆறு தலைப்புகளாக ஆய்வு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஜப்பானிய ஹைக்கூவின் தோற்றமும் வளர்ச்சியும்.
தமிழில் ஹைக்கூவின் வரவும் வளர்ச்சியும்
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள்
தமிழில் ஹைக்கூ கவிதைகள்
ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஒப்பீடு
முடிவுகள்.

நல்ல ஹைகூசளை அடையாளம் காண முடிகின்றது. உதாரணத்துக்கு சில

இரவெல்லாம்
உன் நினைவுதான்
கொசுக்கள்

ஐயோ இருட்டிவிட்டதே
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி.

மேலும் இந்நூல் இரு மொழி கவிதைகளின் உள்ளடக்கம் உத்திகள் வேறுபாடுகள் பற்றியெல்லாம் பேசிச்செல்கிறது. முரண் உத்திகள் பற்றி தனி விளக்கம். ஹைக்கூ எழுத விரும்பகிறவர்களுக்கு நல்ல விளக்காமாய் இருக்கும் என நினைக்கின்றேன்.

நூலாசிரியர் பெண் என்பதால் நூலின் பல இடங்களிலும் பெண்மை தொட்டுச் செல்கிறது. தவிர்த்திருந்தால் நல்லது போல் தெரிகின்றது. உதாரணத்திற்கு

Though I have no love
I too rejoice
The change of clothes

எனக்கொரு காதலனும் இல்லை
ஆனாலும் நான் மகிழ்ந்திருக்கிறேன்
ஆடைமாற்றம்

யப்பானிய ஆடைமாற்ற திருவிழா பற்றிய ஹைக்கூ.. இங்கு காதலனுக்கு பதில் காதல் என மொழிபெயர்த்திருந்தால் சிறப்பாயிருக்கும் என்பது என் எண்ணம்.

2 ஐப்பசி, 2006

வனுவாத்

நானும் என்ர நண்பருமா உலகத்தை சுத்தி பாரத்துக்கொண்டு வரேக்க (பெரிசா யோசிக்காதங்கோ Google earth இல) நண்பர் கேட்டார் வனுவாத் இருக்கோ பாருங்கோ எண்டு. நான் சொன்னன் இதில நாடுகளை பாக்கலாம் ஆனா அங்க விக்கிற சாப்பாடுகளை பாக்கேலா எண்டு. அவர் சொன்னார் இல்லையில்லை என்னோட அந்த நாட்டுக்காரர் ஒருவர் படிச்சவர் எண்டு (இவர் சீனாவில படிச்சவர்). சுத்திக்கித்தி நாட்டைக் கண்டு பிடிச்சு கிட்டப்போனா பெரிசா சன நடமாட்டத்தை காணேல்ல. உடன விக்கிப்பீடியாக்கு ஓடிப்போய் பாத்தா ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம். வாசிச்சு நீங்களும் ஆச்சரியப்படுங்கோ…

பெயர் : வனுவாத் குடியரசு

அமைவிடம் : பசுபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்கு 1750 கிமீ கிழக்காயும், நியூ கலிடோனியாவுக்கு 500 கிமீ வடகிழக்காயும் விஜிக்கு மேற்காயும் சொலமன் தீவக்கு தெற்காயும் அமைந்துள்ளது.

தரைத்தோற்றம் : 83 தீவுகளை கொண்டதாக இந்நாடு அமைந்துள்ளது. இதில் 14 தீவுகள் 100 சதுர கிலோமீற்றரை விட பெரிய பரப்பளவை கொண்டவை. இங்கு பெரும்பாலான தீவுகள் மலைப்பாங்காயும் எரிமலைகளை அடிப்படையாக கொண்டவையாகவும் உள்ளன. இன்றும் இங்கு பல எரிமலைகள் உயிரோடு உள்ளன.

பொருளாதாரம் : பெரும்பாலான மக்கள் (65 வீதம்) சிறிய அளவிலான விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறையும் இங்கு முக்கியத்துவம் வாயந்தது. முக்கியமான விடயம் என்னவெனில் இங்கு வருமான வரி உட்பட எந்த விதமான வரிகளும் அறவிடப்படுவதில்லை.

மக்கள் : மொத்த மக்கள் தொகை 205,754 (ஆடி 2005). ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் பிஸ்லாமா ஆகிய மொழிகள் அரச மொழிகளாக உள்ளன. இதைவிட நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. மொழி அடர்த்தி வேறெந்த நாட்டையும் விட இந்நாட்டில்தான் அதிகம் (2000 பேருக்கு ஒரு மொழி). அனைத்து மக்களும் கிறீத்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள்.

2006 ம் ஆண்டு மனிதர் வாழ்வதற்கு மிகவும் மகிழ்ச்சியான நாடாக வேறெந்த நாட்டையும் விட வனுவாத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நாட்டிலுள்ள
தொலைபேசிகள் எண்ணிக்கை – 6800 (2004)
கைப்பேசிகள் எண்ணிக்கை – 10500 (2004)
தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை – 2000 (1997)
இரயில் சேவை இல்லை
விமான நிலையங்கள் – 32
இராவத்தின் எண்ணிக்கை காவல்த்துறை உள்ளடங்கலாக – 300.

30 புரட்டாதி, 2006