Posts Tagged "Online work"

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 4

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதலாம் பகுதியில் அடிப்படையாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கின்ற வழிமுறைகள் பற்றியும், பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தில் வேலை செய்வது தொடர்பான அடிப்படை விடயங்கள் சில பற்றியும், பின்னர் மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை செயவது எப்படி என்பது தொடர்பாயும் பார்த்தோம்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

இப்போது நான்காம் பகுதியில் கோரல் தொடர்பாக மேலும் சில விடயங்களை பார்ப்போம்.

வேலைக்கு எடுக்கும் காலம்.

கோரல் ஒன்றினை இடும்போது எவ்வளவ காலத்தில் அவ்வேலையை முடித்து கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட வேண்டும். இதுவும் எங்களின் கோரல் தேர்வு செய்யப்படுவது தொடர்பில் முக்கியமான ஒரு விடயமாகும். சிலர் குறைந்தளவு நாட்களை கொடுத்தால் இலகுவாக வேலை கிடைத்துவிடும் என நினைப்பதுண்டு. ஒரு வகையில் அது உண்மைதான் எனினும், நாங்கள் குறிப்பிட்ட நாளில் வேலையை முடித்து கொடுக்காது விடின் எதிர்மறையான விழைவினை ஏற்படுத்திவிடும். தொடர்ச்சியாக எமக்கு வேலை கிடைப்பதை இது தடை செய்து விடும். நீங்கள் குறிப்பிடும் காலத்துக்கு முன்னர் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடியதாக வேலைக்கான காலத்தை குறிப்பிட வேண்டும். அதற்காக 500 சொற்களில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கின்ற வேலைக்கு ஒரு கிழமை எடுத்துக்கொள்ளுவது முட்டாள்தனமானது. இரண்டு நாட்கள் என குறிப்பிட்டு ஒரு நாளில் முடித்து கொடுத்தால் அவர் தனது அடுத்த வேலைக்கும் எம்மை அணுகுவார்.

வேலைக்காக நாங்கள் கேட்கும் பணம்

பெரும்பாலான வேலை தருபவர்கள் குறைந்தளவு பணத்தில் தங்கள் வேலையை செய்து முடிக்க ஆர்வமாயிருப்பார்கள். அதற்காக மிக குறைந்த அளவிலான பணத்தினை கேட்பதும் எமக்கு வேலையை பெற்றுத்தரா. ஒரு வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்கும் வேலைக்கு 50 அமெரிக்க டொலர்கள் என்று கேட்பது மிகவும் குறைவான பணமாகும். இவ்வாறு நீங்கள் ஒரு கோரலை செய்தால் நிச்சயமாக அந்த வேலை உங்களுக்கு கிடைக்காது. அதேபோல அது உங்கள் திறமையை குறைத்து காட்டுவது போல அமைந்து விடும். (சாதாரணமாக பெரிய நிறுவனங்கள் அவ்வாறான வேலைக்கு ஏறத்தாள 400 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்களை கேட்கும்.) எங்கள் திறமைக்கும் நேரத்திற்கும் ஏற்ற ஒரு பணத்தை கோருதலே நலம். இது பொதுவாக அனுபவத்தில் வந்துவிடும்.

சரி உங்களுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டது, வேலை செய்யும் போது என்ன கவனிக்க வேண்டும்?

வேலை செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுதான். இப்பொழுது நீங்கள் எந்தளவில் வேலையை முடித்து விட்டீர்கள் என்று குறைந்தது தினமும் ஒரு தடவையாவது வேலை தருபவருக்கு அறிவிக்க வேண்டும். இது உங்கள் மேல் ஒரு நம்பிக்கையை வேலை தருபவருக்கு ஏற்படுத்தும். தனது அடுத்தடுத்த வேலைகளையும் உங்களுக்கு தர அவர் விரும்புவார், அது போல உங்கள் வேலை தொடர்பாக நல்லதொரு பின்னூட்டத்தையும் உங்களுக்கு தருவார். இது மற்றைய வேலை தருபவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள காரணமாக அமையும். கீழே திரைவெட்டை பாருங்கள்.

இப்பொழுது நாங்கள் ஒரு வேலையினை செய்து முடித்து விட்டோம். இனி எம்மை நிலைநிறுத்திக்கொள்ளுவது எவ்வாறு.

தொடக்கத்தில் அதிக வேலை என்பதனை விட கிடைக்கின்ற சில வேலைகளை திறமையாக செய்து முடித்தால் காலப்போக்கில் உங்களை வேலைகள் தேடிவரும். கடந்த கிழமைக்கான எனது இன்பொக்சின் ஒரு பகுதியின் திரைவெட்டை பாருங்கள்.

தொடர்ச்சியாக வேலை தருபவர்கள் அல்லது நீண்டகாலத்துக்கு வேலை தருபவர்களின் வேலைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தல் நல்லம். இதனால் உங்களால் தொடர்ச்சியாக பணமீட்ட முடியும். (உதாரணமாக பதிவு மேற்பார்வை செய்வது போன்ற வேலைகள்)

உங்களால் செய்ய முடியாத வேலை ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட, உங்கள் வேலை தொடர்பான கரும்புள்ளி ஒன்றினை நீங்களே குத்தியவர்களாகி விடுவீர்கள். அதற்கு நீங்கள் இடமளிக்க கூடாது.

நீங்கள், ஒரு நிறுவனமல்லாமல் தனிப்பட்டவராக இருந்தால் எல்லா விதமான வேலைகளையும் எடுத்து செய்வதை விட குறிப்பிட்ட ஒரு வகையிலான, உங்களிடம் மிகுந்த திறமையுள்ள வேலையினை எடுத்து செய்தல் பயன்தரும். உதாரணமாக “மொழிபெயர்ப்பு வேலை”. இப்படி செய்வதனால் அவ்வாறான ஒரு வேலை வைத்திருப்பவர் இது தொடர்பான வேலை செய்பவர்களை தேடும் போது உங்கள் பெயர் முதல் வருவதற்காள வாய்ப்பு அதிகம். இதனால் உங்களுக்கு வேலை கிடைப்பது இலகுவாகிவிடும். (கூகிளில் தேடும்போது முதல் பக்கத்தில் வரும் தேடல் முடிவுகளோடு நாங்கள் நிறுத்திக்கொள்ளுவது போல)


இந்த பதிவுடன் இத்தொடர் முடிவுக்கு வருகின்றது. இதனை தொடர்ந்து நீங்கள் இணையத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டால் உங்களுக்கு உதவக்கூடிய சில பதிவுகள் வர இருக்கின்றன. தவறவிடாமல் இருக்க இங்கு சொடுக்கி எனது செய்தியோடையினை பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களிடம் ஏதும் கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள் முடிந்தளவு பதிலளிக்க முயற்சிக்கின்றேன். செய்தியோடை ஊடாக என்னை பின்தொடர்பவர்கள் மற்றும் அனைவரும் இத்தொடர் எவ்வாறிருந்தது என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

28 தை, 2009