ஆறுமுக நாவலர் குருபூசை.

கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையில் செந்தமிழ் வசன நடையை தொடங்கி வைத்து செய்யுள் நடையிலிருந்த தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகார சீலர் ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் பற்றி சொல்லி தெரிவதற்கு எதுவுமில்லை. இன்று நல்லை ஆதீனத்திலே நாவலர் அவர்களுடைய குருபூசை நல்லை குருமகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.



திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை

தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.என்று நல்லை கந்தன் கொடியேற்றத்தை பாடித்துதித்த சேனாதிராயக் கவிராயரின் மாணாக்கர் இந்த நாவலர். ஆசிரியர் எட்டடி பாய்ந்தால் இந்த மாணாக்கரோ பதினாறடி பாய்ந்தார்.“தமிழ்நாடு முழுதும் இணையில்லாதவர்” என்று தாமோதரம்பிள்ளை அவர்கள் நாவலர் பெருமானை சொல்லுவார்கள். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்

“கற்றுணர் புலவ ருட்களிக்கும்
முற்றுண ராறுமுக நாவலனே”

என்றும் அவரின் தலைமாணாக்கராகிய தியாகராச செட்டியார் அவர்கள்

“என்னுளங் குடிகொண் டிருக்கும்
முன்னுசீ ராறுமுக நாவலனே”

என்றும் நாவலர் பெருமானை போற்றினார்கள்.

வசனநடை கைவந்த வல்லாளர், வழங்குநடை வசனநடை எனப் பயிற்றி வைத்த ஆசான் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நாவலர் அவர்கள் இலக்கணத்தூய்மைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார் என்று எம். ஏ. நுஃமான் அவர்கள் தனது “பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும்” என்ற கட்டுரையில் சொல்லுகின்றார். அதற்கு உதாரணமாக அவர் தம்பையாப்பிள்ளை பாடிப் பதிப்பித்த ‘குமார நாயக அலங்காரம்’ என்ற நுலைக் கண்டித்து எழுதிய கட்டுரை ஒன்றை உதாரணமாக காட்டுகின்றார்.

“தம்பையாப்பிள்ளை, தம்பைய நாவலன், தம்பைய கவிஞன் என்பன இரு பெயரொட்டுப் பண்புத்தொகைகளன்றோ? இவைகளுள்ளே நிலைமொழி யாது? தம்பையாவா? தம்பையனோ? தம்பையாவாயின், ‘தம்பைய நாவலன்’, ‘தம்பைய கவிஞன்” என்று புணர்ந்ததெப்படி? ‘தம்பையனாயின்’ ‘தம்பையாப் பிள்ளை’ என்று புணர்ந்ததெப்படி? ஆகாரவீற்று ஐயா வென்பது விளியுருபேற்ற பெயரா? உருபேலாது தன்னயில்பினின்ற பெயரா? உருபேற்ற பெயரும் பின் மொழியுங்கூடி இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகுமா? ‘ஆழ்வார்ப்பிள்ளை’ எனும் புணர்ச்சிக்கு விதி என்னை?”

நாவலர் அவர்களின் மறைவிற்கு பின்னர் அவரது திறனும் கல்வியிம் அழிந்துபட்டுப் போய்விடவில்லை.

“அவரது மாணாக்கரான கோப்பாய் சபாபதி நாவலர் மதங்கொண்ட களிற்றுயானை போல தமிழ்நாடு முழுவதிலும் தமக்கிணையின்றி திக்கு விசயம் செய்து செந்தமிழ்மழை பொழிந்தார்.” அதேபோல அவரது இன்னொரு மாணாக்கர் காசிவாசி செந்திநாதையர். தமிழுக்கு சாமிநாதையர் போலச் சித்தாந்தத்திற்கு செந்திநாதையர் என்று பாராட்டும்படி அவர் திகழ்ந்தார்.” இவ்வாறு சொல்லுகின்றார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள்.

குறிச்சொற்கள்: ,

2 பின்னூட்டங்கள்

  1. rahini சொல்லுகின்றார்: - reply

    நீண்ட நாட்களின் பின் நாவலரை பற்றி மீண்டும் படிக்க ஆர்வம் வந்தன உங்களால்
    வாழ்த்துகள்
    ராகினி

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    ராகினி வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.