நிகழ்வுகள்

தினமும் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பு

நல்லூர் திருவிழா

நாளைக்கு 10 மணிக்கு கொடியேற்றத்தோட நல்லூர் திருவிழா தொடங்குது. நாளைக்கு சனிக்கிழமை எண்ட படியால் பிரச்சனை இல்லை சரியா நேரத்துக்கு ஒரு விசிற் போகலாம். ஊரடங்கு நேரம் அப்படியேதான் இருக்கிறதால என்ன மாதிரி திருவிழா நேரங்கள் எண்டு தெரியேல்ல பாப்பம். முடிஞ்சா முக்கியமான திருவிழாக்களை எண்டான்ன போட்டோ எடுத்து போடுறன். அங்க இருந்து ஒரு கும்பிடு போடுங்கோவன்.

முக்கியமான விசயம் என்னெண்டா ஐஸ்கிறீம் கடைகளும் போட்டுட்டாங்கள்.

19 ஆவணி, 2007

கொடியேற்றம்.

நல்லைக்கந்தன் கொடியேற்றம் வழமையான கலகலப்பில்லாவிட்டாலும் வெகு விமர்சையாக இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வழமையான மக்கள் கூட்டம் இல்லை என்றாலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கோயிலிலே கூடியிருந்தார்கள்.

சரி கொஞ்சப்படங்களை பாருங்கோவன்
பிரதான வாயில்

தெற்கு வாயில்

கொடிமரம்

பிரதட்டை செய்யும் அடியார்கள்

கற்பூரம் கொழுத்தும் இடம் (கோயிலுக்கு வெளியே)

19 ஆவணி, 2007

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

27 ஆனி, 2007