ஊரோடி – இரண்டு வருடம் – சாதனைகள் சோதனைகள்

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒரு பொழுது போக்கிடமாக ஊரோடி மாறியுள்ளது.எதனையும் ஒரு தொடர்ச்சியாக செய்வதில் பூச்சியப்புள்ளியை எப்போதும் வாங்குகின்ற எனக்கு, யுத்தத்தின் சன்னத்தம் எந்நேரமும் வெளித்தெரிய நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வருடகாலம் என்னால் முடிந்தளவு தொடர்ச்சியாக டயல் அப் இணைப்பூடாக வலைப்பதிய முடிந்ததோடு என்னால் முடிந்தளவு வலைப்பதிவர்களுக்கு தொழிநுட்பரீதியாக உதவமுடிந்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்.

இந்த இரண்டு வருட காலத்தில் எனது நண்பர்களிடையே ஊரோடி எனக்கு ஒரு வித்தியாசமான பெயரை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. எனது பெயர் தெரியாமலே ஊரோடி என்கின்ற பெயரூடாக உறவாடுகின்ற நிறைந்த இணையநண்பர்களை இந்த வலைப்பதிவு ஏற்படுத்தி தந்திருக்கின்றது. அத்தோடு புளொக்கரில் இருந்த ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டுவந்து வலைப்பதிய தொடங்கிய பின்னர் அதுவே எனது இணைய வேலைகளுக்கு ஆரம்பமாக அமைந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. வலைப்பதிய ஊக்கியாக நின்ற சயந்தன், வலைப்பதிய வந்த காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வலைப்பதிய வேண்டும் என்று பின்னூட்டங்கள் மூலமும் மின்னஞ்சல்கள் மூலமும் காலத்துக்கு காலம் ஊக்கப்படுத்திய ஈழத்து மற்றும் இந்திய இணைய நண்பர்கள், குறிப்பாக தொடக்க காலத்தில் மிகவும் ஊக்கப்படுத்திய யோகன் அண்ணா, மலைநாடான், மதி என்று நீளும் பட்டியல் (எல்லோரையும் குறிப்பிட தனி ஒரு பதிவு தேவை அதனால் மன்னிக்கவும்), என்னோடு எப்போதும் கூட இருந்து, ஊரோடி பற்றி சொல்லும் எனது பள்ளிக்கால நண்பர்கள் என்று நன்றி சொல்லவேண்டியவர்கள் ஏராளம் உள்ளார்கள். அத்தோடு என்னைப்பார்த்து வலைப்பதிய வந்தவர்கள் என்று சொல்லி ஊக்குப்படுத்தியவர்களும் உள்ளார்கள்.

வழமைபோல சோதனைகளும் ஏராளம். யாழப்பணத்தில் இருக்கின்ற டயல் அப் இணைப்பு தான் நினைக்கின்ற நேரம் மட்டுமே இணையத்தில் இணைய அனுமதிக்கும். சில நேரங்களில் வாரக்கணக்காக பேசாமல் இருந்து விடும். அப்போதெல்லாம் பேசாமல் ஊரோடியை விட்டுவிட்டு தினம் ஒரு படம் பார்க்கலாம் என்கின்ற எண்ணம்தான் எழுந்து வரும்.

அதைவிட மிக மோசமாக எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்பில் வேலைபார்த்து இந்த வருடம் பங்குனி மாதத்தில் ஊரோடியை வழங்கியை விட்டு பூரணமாக அழித்தபின்னர், பேசாமல் அப்படியே விட்டுவிடுவோம் என்கின்ற முடிவுக்கே வந்தபின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் ஒரு மாதம் செலவழித்து மீண்டும் ஊரோடியை இணையத்துக்கு கொண்டு வரமுடிந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக ஏறத்தாள இரண்டாயிரம் பின்னூட்டங்கள் ஒரேயடியாக அழிந்து போயின.

மூன்றாவது வருட நிறைவை எழுத முடியுமா என்று இப்போதே சொல்லமுடியாத நிலை யாழ்ப்பாணத்தில் இப்போது. காலம் நேரம் எல்லாம் நல்லது செய்தால் வருடங்களானாலும் ஊரோடியை தொடர ஆசை.

குறிச்சொற்கள்: , , , ,

15 பின்னூட்டங்கள்

 1. நிமல் - NiMaL சொல்லுகின்றார்: - reply

  வாழ்த்துகள் பகீ…
  ஊரோடியை இன்னும் சிறப்பாக தொடருங்கள்.!!

 2. Ketha சொல்லுகின்றார்: - reply

  ஊரோடி ஒரு மிகப்பெரும் சாதனை. யாழ்ப்பாணத்தின் வலுக்குறைந்த தொழினுட்ப உட்ட்கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஊரோடியின் வளர்ச்சி பிரமிப்பளிக்கிறது. ஊரோடி தன் எல்லைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி, ஒரு நேர்த்தியான கலை இலக்கிய, விஞ்ஞான, சமுக ஏடாக பரிணமித்திருக்கிறது. வாசிப்பில் நீ கொண்ட ஆர்வமும் , அறிவுப்பகிர்வின்பால் கொண்ட அக்கறையும் எம்மைப்போன்றவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்புக்களத்தை தந்திருக்கிறது. நன்னூல் முதல் தொழிநுட்பம்வரை பறந்து விரிந்துள்ள ஊரோடி இன்னும் விரிவுபட்டு நெடுங்காலம் தொடரவேண்டும் என்பதே எனது அவா. நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்!

 3. மாயா சொல்லுகின்றார்: - reply

  வாழ்த்துக்கள் பகீ !

 4. siva sinnapodi சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் தம்பி பகீரதனுக்கு

  இன்று தங்கள் வலைப்பதிவை பார்த்தேன்

  வாழ்த்துக்கள்
  சிவா சின்னப்பொடி
  http://sivasinnapodi1955.blogspot.com/

 5. பிரசாத் சொல்லுகின்றார்: - reply

  வாழ்த்துகள் (B)பேஜ்

 6. அமலன் சொல்லுகின்றார்: - reply

  தமிழ் இணையத்தின் புதிய தலைமுறை ஊரோடி.
  ……………………………….
  கண்ணை கவரும் வடிவமைப்பும்
  இனிய தமிழும் சேர்ந்தது ஊரோடி.

  வாழ்த்துகள் பகீஅண்ணா….
  ஊரோடியை இன்னும் சிறப்பாக தொடருங்கள்.

 7. சயந்தன் சொல்லுகின்றார்: - reply

  ஒவ்வொரு வருசமும் என்னைப் புல்லரிக்க வைக்கிறீர் 🙂

  யாழ்ப்பாணத்தின் இணைய நிலையில் பதிவிடுவதென்பது சவாலானதுதான். சாதிக்கிறீங்கள். வாழ்த்துக்கள் –

 8. மோகன் சொல்லுகின்றார்: - reply

  யாழப்பணத்தில் இருக்கின்ற டயல் அப் இணைப்பு தான் நினைக்கின்ற நேரம் மட்டுமே இணையத்தில் இணைய அனுமதிக்கும். சில நேரங்களில் வாரக்கணக்காக பேசாமல் இருந்து விடும். அப்போதெல்லாம் பேசாமல் ஊரோடியை விட்டுவிட்டு தினம் ஒரு படம் பார்க்கலாம் என்கின்ற எண்ணம்தான் எழுந்து வரும்.

  முதலில் வாழ்த்துக்கள்…
  அப்புறம்… தனியார் வழங்கும் இணைய சேவைகள் இலங்கையில் கிடைப்பதில்லையா?

 9. பகீ சொல்லுகின்றார்: - reply

  மோகன்,

  வாங்க. நல்ல கேள்வி. யாழ்ப்பாணத்தில டயல்அப் இருக்கிறதே பெரிய விசயம். இலங்கையின் மற்றைய பாகங்களில வேக இணைப்புகள் உண்டு.

 10. பகீ சொல்லுகின்றார்: - reply

  நிமல் வாங்க. என்னால் முடிந்தளவிற்கு தொடர முயற்சிக்கின்றேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  கேதா, அப்படியா?? எனக்கு தெரியாம இதெல்லாம் வேற நடக்குதா… எனக்கென்னவோ கொஞ்சம் ஓவராவே புகழ்றீங்க போல இருக்குது. வாழ்த்துக்களுக்கு நன்றி.

 11. பகீ சொல்லுகின்றார்: - reply

  மாயா, வாங்க வாழ்த்துக்களுக்கு நன்றி.

  சிவா சின்னப்பொடி வாங்க, உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  பிரசாத் வாழ்த்துக்கு நன்றி.

  அமலன் வாங்க என்ன கவிதை எல்லாம் எழுதிறீங்க.. வாழ்த்துக்கு நன்றி.

 12. பகீ சொல்லுகின்றார்: - reply

  குருவே வாங்க, வாழ்த்துக்களுக்கு நன்றி.

  மோகன் வாழ்த்துக்கு நன்றி.

 13. sivanadiyan சொல்லுகின்றார்: - reply

  ஐயா பகீ பதிவாளரே
  சோதனை நிறைந்தாலும் சாதனைகள் சிறக்கட்டும்
  சோதனை முடிவும் சாதனையே
  நல்ல கருத்து நிறைந்த உங்கள் பணி சிறக்கட்டும் தொடரட்டும் உங்கள் பணி
  நட்புடன்
  சிவனடியான்

 14. மஸாகி சொல்லுகின்றார்: - reply

  பழைய பதிவானாலும் – தற்பொழுதுதான் பார்க்க கிடைத்தது..

  ஒவ்வொரு சாதனையாளனுக்கும் பின்னால் ஒரு வலி இருக்கும்..

  அதுபோல் – உங்களுக்கும் ஒரு ”டயல்-அப்” வலி..

  உங்கள் கனவுகள் நிச்சயம் வெல்லும்..

  வாழ்த்துக்களுடன்
  மஸாகி
  04.07.2011