இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதல் பகுதியில் இணையத்தில் சம்பாதிக்கக்கூடிய இரண்டு வழிமுறைகள் பற்றி பார்த்தோம். பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தினூடு வேலை செய்ய எண்ணுபவர்கள் அடிப்படையாக வைத்திருக்க வேண்டியவற்றை பற்றி சற்று விளக்கமாக பார்த்தோம். இப்பொழுது மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது என்று சற்று விளக்கமாக பார்ப்போம்.
இன்றைய பகுதியின் விடயத்திற்கு போகமுன்னர் முக்கியமான இரு விடயங்கள்
Elance இணையத்தளத்தினை நான் ஒரு உதாரணத்திற்காகவே பயன்படுத்துகின்றேன். Elance போன்ற பல இணையத்தளங்கள் உள்ளன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கேற்றவாறாக தேர்வுசெய்து கொள்ள முடியும். அப்படியான சில இணையத்தளங்கள் கீழே.
1. GetAfreelancer
2. ODesk
3. RentACoder
உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். பதிவில் சேர்த்து விடுகின்றேன்.
இந்த தொடர்பதிவு எனது முழுவதுமாக எனத அனுவத்தை அடிப்படையாக கொண்டது. நீங்களும் உங்கள் அனுபவங்களை கீழே பின்னூட்டத்தில் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நல்ல கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது.
இங்கு நல்ல கோரல் என்பது வேலைதருபவரை கவரக்கூடிய வகையில் உங்களுக்கு அவர் அந்த வேலையை தருவதை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
கோரல் ஒன்றினை செய்ய முதல் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்.
1. வேலையின் தன்மை
நீங்கள் கோரல் செய்கின்ற வேலை நிச்சயமாக உங்களால் செய்து முடிக்கக்கூடியதானதா என்று நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். செய்யக்கூடியது போல்தான் இருக்கின்றது என்று நினைத்து கோரல் ஒன்றினை செய்வது தொடர்ச்சியாக நீங்கள் வேலை பெறுவதை தடுக்கும் ஒரு காரணியாக அமைந்து விடும்.
2. நேரம்
தரப்பட்ட வேலை ஏழு நாட்களில் செய்து முடிக்கப்பட வேண்டும். உங்களால் ஒரு நாளைக்கு ஆகக்கூடியது 2 மணத்தியாலங்களுக்கு மேல் ஒதுக்க முடியது என்றால் 20 மணத்தியாலங்கள் எடுக்கும் வேலை ஒன்றினை சமாளித்து செய்யலாம் என்ற நினைப்பில் நிச்சயமாக கோரல் செய்யக்கூடாது.
உங்களால் சரியான நேரத்தில் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வேலை ஒன்றினை கண்டறிந்து விட்டீர்களானால் இப்பொழுது நீங்கள் ஒரு கோரலை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
கோரல் ஒன்றினை செய்யும்போது கவனிக்க வேண்டியவை.
1. விளித்தல்.
வேலை தருபவரின் பெயர் எமக்கு தெரிந்திருந்தாலும், ஐயா அல்லது அம்மணி (Dear Sir, Dear Madam) என விளித்து கோரலை தொடங்குவது மிக்க பயன் தரும்.
2. உள்ளடக்கம்
எவ்வளவுக்கெவ்வளவு எங்கள் உள்ளடக்கம் சிறப்பானதாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு எங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் கிட்டும். சிலர் உள்ளடக்கதை ஒரு template போல உருவாக்கி வைத்துக்கொள்ளுவார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அதனை அப்படியே அங்கு பிரதி பண்ணி ஒட்டி விடுவார்கள். உதாரணமாக ஒரு CSS கோப்பினை மேம்படுத்த வேண்டும் என்கின்ற வேலைக்கு, நான் இணையவியாபார இணையத்தளங்கள் பலவற்றை உருவாக்கி இருக்கின்றேன் என்பது போன்ற ஒரு கோரல். இது நிச்சயமாக உங்களிடம் எவ்வளவு திறமையிருந்தாலும் உங்களுக்கு வேலை கிடைப்பதை தடைசெய்துவிடும்.
இதேபோல கோரல் ஒன்றின்போது ஏற்படுகின்ற மற்றொரு பிழை நாங்களாகவே பலவற்றை அனுமானித்து கொள்ளுதல். உதாரணமாக வேர்ட்பிரஸ் நிறுவல் ஒன்றினை வேலை தருபவரின் வழங்கியில் நிறுவவேண்டும் என்கின்ற வேலைக்கு, நாங்களாகவே வேலைதருபவருக்கு வேர்ட்பிரஸ் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும், வழங்கியில் இருக்க வேண்டியவைகள் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு இரண்டே வரியில் ஒரு கோரலை செய்வது. சில வேளைகளில் எங்களின் அனுமானங்கள் சரியாக கூட இருக்கலாம் இருந்தாலும் நாங்கள் அனுமானங்கள் ஏதும் இல்லாமல் கோரலை செய்வது நல்லம்.
கோரல் ஒன்றின் உள்ளடக்கத்தினை நாங்கள் வேலை தருபவர்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கேற்றவாறாக உருவாக்கி கொள்ளல் பயன்தரும்.
அவர்களை நாங்கள், அவர்கள் தருகின்ற வேலையின் தன்மையினை பொறுத்தும் வேலை கோரப்பட்ட முறையினை பொறுத்தும் மூன்று வகையாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.
அ. தரப்பட்ட வேலைக்கு அறவே சம்பந்தமல்லாதவர்கள்.
உதாரணமாக வழக்கறிஞர் ஒருவர் தனக்கு ஒரு வலைப்பதிவை உருவாக்கி தருமாறு வேலை ஒன்றினை தருதல். அனேகமாக இவர்கள் இந்த இணையத்தளம் போல் இருக்க வேண்டும், கூகிளில் தேடினால் வரவேண்டும் என்பதாக வேலையை கோருவார்கள்.
வழக்கறிஞர் வலைப்பதிவின் நன்மைகள் பற்றி அறிந்திருக்ககூடுமே அன்றி வலைப்பதிவு தொடர்பான தொழிநுட்ப அறிவு ஏதுமற்றிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அவரிற்கான கோரல் ஒன்றினை செய்யும் போது பெரிதளவில் தொழிநுட்ப சொல்லுகளை கலக்காமல், அவருக்கு புரியக்கூடிய ஆங்கிலத்தில், கோரலை இடவேண்டும். குறிப்பாக நீங்கள் அவருக்காக சேர்க்கப்போகும் வசதிகள் மற்றும் அடைப்பலகை தொடர்பாக நன்கு விபரித்து அதனால் அவருக்கு என்ன பயன் என்பதனை தெரிவிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் தினமும் இலகுவாக பதிவினை எழுதலாம் என்று மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்கள் பின்னூட்டமிடுவதற்கான வசதியும் இருக்கும் என்பதனையும் அவருக்கு குறிப்பிடல் வேண்டும். சில வேளைகளில் இது உங்களுக்கு சிரிப்பாக தெரிந்தாலும் இதன் பயன் நீங்கள் ஒரு கோரலை இடும்போதுதான் தெரியும்.
ஆ. தரப்பட்ட வேலை சம்பந்தமான மிகவும் அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக மேற்குறிப்பிட்ட அதே வேலையை இவர்கள் விபரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். இவர்கள் Valid coding, மற்றும் SEO செய்யப்பட்டிருக்க வேண்டும் (SEO அடிப்படை தொடர்பாக விரைவில் ஒரு பதிவு எழுத இருக்கின்றேன்.) என்பதாக வேலையை கோருவார்கள்.
இவர்கள் வேலையை கோரும்போதே அதிகளவு கலைச்சொற்களை பயன்படுத்தி இருப்பார்கள். இவர்களுக்கு இந்த வேலையை செய்ய தெரியாதே தவிர இவர்களுக்கு வேலை தொடர்பான பூரண அறிவிருக்கும். இவர்களுக்கான கோரலின் போது நான் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டது போன்ற எங்களின் மேம்படுத்தப்பட்ட அறிவினை பயன்படுத்த வேண்டும். தாராளமாக தொழிநுட்ப சொற்களை பயன்படுத்தலாம். இவர்களுக்கு முடியுமானால் இவர்களுக்கு சில புதிய விடயங்களை சொல்லலாம். இவர்களின் எதிர்பார்ப்புக்கு உங்களிடம் அவர்கள் சொல்லுவதைவிட சிறந்த தீர்வு இருப்பின் அவற்றை வழிப்படுத்தலாம். இவை உங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்க உதவும்.
இ. தரப்பட்ட வேலை சம்பந்தமாக ஓரளவு அறிவுள்ளவர்கள்.
இவர்கள் மேற்குறிப்பிட்ட வேலையை விபரிக்கும் விதம் இன்னமும் வித்தியாசமாக இருக்கும். இவர்கள் பல வலைப்பதிவுகளில் இருந்து உதாரணம் காட்டுவார்கள். நீட்சிகள் பற்றி சொல்லுவார்கள்.
இவர்களுக்கு நாங்கள் தொழிநுட்ப சொல்லுகளை பயன்படுத்தலாம் இருந்தாலும் சிறிது விளக்கமாக சொல்லவேண்டும் (SEO என்று சொல்லாமல் அதனை விரித்து சொல்லலாம்). இவர்களுக்கு நாங்கள் இவர்களின் தேவைகளுக்கான புதிய நீட்சிகளை அறிமுகப்படுத்தலாம். இருந்தாலும் அவர்கள் போக்கிலேயே செல்லுவது நல்லம். அவர்கள் கேட்காமல் நாங்களாக புதிதாக எதனையாவது சொல்லுவது நிச்சயமாக பயன் தராது. எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
3. முடிவு
எங்களின் முடிவு பொதுவாக நாங்கள் செய்யக்கூடிய அல்லது வழங்கக்கூடிய வேலைக்கு பிந்தியதான சேவைகள் சம்பந்தமானதாக இருக்கலாம். மேற்குறிப்பிட்ட உதாரணத்திற்கு நாங்களே நீட்சிகளையும் அடைப்பலகையையும் நிறுவிவிடுவோம். மேலும் இரண்டு வாரத்துக்கு ஏதும் பிரச்சனை ஏற்படின் நாங்கள் தீர்த்து வைப்போம் என்பது போன்றவையாக இருக்கலாம்.
அதனை விட கேட்கப்பட்ட வேலை போன்ற நாங்கள் முன்னர் ஏதும் வேலைகள் செய்திருந்தால் அந்த உதாரணங்களையும் முடிவில் சேர்க்கலாம்.
அத்துடன் நன்றி சொல்லி உங்கள் பெயருடன் முடித்தல் எப்போதும் நன்மை செய்யும்.
அடுத்த பதிவில் நாங்கள் செய்கின்ற வேலைக்கு எவ்வளவு பணம் பெறலாம், எவ்வளவு காலம் எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் ஒரு உதாரண கோரல் ஒன்றினையும் பார்க்கலாம். அதனைத்தொடர்ந்து எங்களை எவ்வாறு நிலைநிறுத்திக்கொள்ளலாம் என்பது தொடர்பாயும், எவ்வாறு வேலைகளை தேர்வுசெய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பார்க்கலாம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.
26 தை, 2009