கணினி

கணினி தொடர்பான பதிவுகள்

நானும் கணினியும்

நான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் செலவாக தொடங்கியது. 2003 இல் (பாடசாலையின் இறுதிக்காலம்) நான் வாங்கிய மேசைக்கணினியுடன் (வின்டோஸ் எக்பி இயங்குதளத்துடன்) பகுதிநேர தொழிலாக கூட அது மாற்றமடைந்தது.

அத்தோடு எனது நோண்டிப்பார்த்தல் என்கின்ற விடயமும் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக கிராஸ் ஆகின்ற இயங்குதளம் என்கின்ற வகையிலேயே என்னால் வின்டோஸ் எக்பி பதிப்பினை அடையாளப்படுத்த முடிந்ததால் வேறு வேறு இயங்கு தளங்களை பரிசோதிக்க ஆரம்பித்தேன். முதலில் 2004 இன் இறுதியில் என்று நினைக்கின்றேன், மான்ரேக் லினிக்ஸினை (மான்ரேவ் என் பெயர் மாற்றப்பட முன்னர், அனேகமாக பதிப்பு 9 அக இருக்க வேண்டும்) பரிசோதிக்க ஆரம்பித்தேன். அதன் பயனாளர் இலகுத்தன்மையை கணிப்பதற்காக எனது நண்பர்கள் அனைவரினையும் அதனை நிறுவுமாறு கேட்டுக்கொண்டதோடு சிலரின் கணினியில் நானே நிறுவிவிடும் வேலையையும் பார்த்துக்கொண்டேன். (இதனால் நண்பர்களின் பிரத்தியேக கோப்புகள் பல அழிந்து போனதெல்லாம் வேறு விடயம்).

அப்போதய எனது கணினி அறிவு குறைவாயும் எனது கணினியின் தேவைகள் மான்ரேக் தருவதைவிட அதிகமாகவும் இருந்ததனால் அதனை விட்டு மீண்டும் வின்டோஸினையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இருந்தாலும் தமிழில இருந்த பின்னர் டேபியன் லின்டோஸ் (அப்போது லின்டோஸ், பிறகு தான் “லின்ஸ்பயர்” பெயர் மாத்தினவங்கள்) என்று தொடர்ந்த எனது நோண்டிப்பார்த்தால் உபுந்துவில வந்து நிக்கக்க 2007 தொடங்கீற்றுது.



இடையில நாட்டுப்பிரச்சனைகளால கொம்பியூட்டருக்கு கிட்டயே போகேலாமல் போன காலமும் உண்டு. என்னோட தேவைகளுக்கு உபுந்து போதுமானதா இருந்ததோட என்னால அதற்குரிய மென்பொருள்களையும் எடுத்துக்கொள்ளக் கூடியதா இருந்துது. ஆனா என்ர போதாத காலம் எண்டு அந்த நேரம் பாத்து விஸ்ரா வெளிவந்துது. ஏன் விடுவான் எண்டு அதை எடுத்து உடனேயே நிறுவினா திருப்பியும் பிடிச்சுது சனி. ஏகப்பட்ட கிராஸ் அத்தோட பழைய மென்பொருட்களோட அது காட்டின ஒத்திசைவு, முக்கியமா மென்பொருட்களின்ர உதவிப்பக்கங்களை பாக்கிறது எல்லாத்திலயும் பிரச்சனைதான். கணினிய மூடுறதுக்கு எடுக்கிற நேரத்தில வேற வேலையே பாக்கலாம் போல இருந்துது.

கடைசியா இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு முக்கியமா வின்டோசை விட்டுட்டு முதன்முறையா ஒரு மக்புக்(Macbook) வாங்கிட்டன். கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது. அதோட நானும் அதுக்கு பழக்கமாகிட்டன். (அலுவலக கணினியில கூட றைற் கிளிக் பண்ண ctrl பொத்தானை அழுத்திறன் எண்டா பாருங்கோவன். அது வின்டோஸ்). என்ர நண்பர் ஒருவர் கொழும்பில இருந்து தேவையான மென்பொருட்களை தரவிறக்கி அனுப்பியிருந்தார். இப்பதான் முதல்முதலா ஒரு பிரச்சனையில்லாத இயங்குதளத்தை பாவிக்கிறன் எண்ட எண்ணம் வந்திருக்குது. இதைப்பாத்திட்டு என்ர நண்பர்கள் சில பேரும் மக் இற்கு மாறுவமோ எண்டு யோசிக்கினம். வருகிற ஐப்பசியில சிறுத்தை உறுமும் எண்டு அப்பிள் நிறுவனம் அறிவிச்சிருக்கு. இப்பவே போதும் எண்டு இருக்கு. அதுவும் வரட்டும் பாப்பம்.

9 ஆவணி, 2007

அனைவருக்கும் மடிக்கணினி

அனைவருக்கும் மடிக்கணினி என்ற கருப்பொருளின் கீழ் சுவிற்சிலாந்தை சேர்ந்த Medison என்கின்ற நிறுவனம் Medison Celebrity என்கின்ற மடிக்கணினியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் விலை 150 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இதில் இயங்கு தளமாக லினிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதுடன் office மற்றும் multimedia மென்பொருள்கள் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகின்றது.

இதன் பிரதான விடயங்கள் வருமாறு

  • Intel® Celeron 1.5 GHz CPU
  • 14″ Widescreen X-bright LCD
  • 256 MB Ram memory
  • 40 GB Hard Drive
  • 802.11g Wireless LAN
  • Optimized Linux operating system
  • Pre-installed office and multimedia applications

மேலதிக விடயங்களுக்கு அவர்களின் இணையத்தளத்தை பாருங்கள்.

28 ஆடி, 2007

Google docs updated

கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.

இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

27 ஆனி, 2007