புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழர்கள் அனைவருக்கும் நன்மை பெருகவும் வாழ்வு சிறக்கவும் ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர்கள் அனைவருக்கும் நன்மை பெருகவும் வாழ்வு சிறக்கவும் ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான் யார்? என்ற வினா உலகந்தொடங்கிய காலந்தொடங்கி இருந்து வருகின்றது. அதற்கு விடைகாணும் முயற்சியும் நடந்து வருகின்றது.
நான் யார் என்ற வினாவுக்கு எளிதில் விடைகண்டு சொன்னவன் உலகாயதன். இந்த உடம்புதான் நான் என்று தீரமானஞ் செய்தவன் அவன். நான்யார்? என்கின்ற வினாவுக்கு அரிதின் முயன்று வேத உபநிடதங்களினை ஆராய்ந்து விடைகண்டு சொன்னவன் வேதாந்தி.
காணப்பட்ட இந்த உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தாரகமாய், அதனோடு அத்துவிதப்பட்டு நின்றது எதுவோ அதுவே பிரமம். அந்தப் பிரமந்தான் நமது இருதயக் குகைக்குள் ‘நான்” ‘நான்’ என்று சொல்;லிக்கொண்டிருக்கின்றது. ஆகவே ‘நான் பிரமம்’ என்று முடிவு செய்தவன் அந்த வேதாந்தி.
உலகாயதன் வேதாந்தி ஆகிய இருவருஞ்சொன்ன விடைகளைக் கேளாமலே கேட்டுக்கொண்டு, அவர்களை பாராமலே பார்த்துக்கொண்டு அவர்கள் எதிரில் எழுந்தருளியிருக்கின்றார் மௌனதவ முனிவர் ஒருவர். பயனில் சொற் பயிலாதவர் அவர்.
எதிரிலிருந்த ஏனையவர்கள் மௌனதவமுனிவர் முகத்தை நோக்குகின்றார்கள். அவருடைய முகாரவிந்தம் மெல்ல மெல்ல இதழ் அவிழ்கின்றது.
இருவர் கூற்றும் பொய் என்கின்றது, அம்முனிவருடைய திருவாய் மலர். எங்கும் நிசப்தம் குடிகொள்ளுகின்றது. அதேசமயம் ஒருவகை ஏக்கம் தலைநிமிர்கின்றது. உலகாயதம் பொய்யாக போய்த்தொலையட்டும். வேதாந்தமுமா பொய் என்ற வினா எழுகின்றது.
தவமுனிவர் சற்றேனுந் தயங்காது தமது நாவை சற்றே பெயர்த்து ‘புரை தீர்ந்த’ என்று கூறி அமர்கின்றார்.
வேதாந்தம் ‘நான் பிரமம்’ என்பது ‘புரை தீர்ந்த பொய்’ என்றது ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்து.
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
உபநிடத முனிவர்கள் சார்ந்ததன் வண்ணமாகும் ஆன்மாவை உலகாயதன் முடித்துக்காட்டிய இந்த உடம்பின் வேறாகக் காணுதற்கு வழி வகுத்திருக்கின்றார்கள். முனிவர்கள் வழியிற் செல்லுஞ் சீடன், உடம்பை பொய்ச்சார்பு என விடுத்து, மெய்சார்பை உணர்ந்து, மெய்ச்சார்பாகிய பிரமமாகத் தன்னைக் காணுகின்றான். ஒருநாள் நான் உடம்பு என்றவன், மற்றொருநாள் நான் பிரமம் என்பான். அவ்வளவில் முனிவர் உபநிடத பாடத்தை முடித்து ஆசிவழங்கி மகிழுகின்றார்.
அப்பால், சாதகனாகிய மாணவனுக்கு ‘கண்ட இவை அல்லேன் நான் காணாக் கழிபரமும் நான் அல்லேன்” என்பதாகிய சிவஞானம் சித்திக்கின்றது. மேற்காட்டிய தொடர்கள் சிவஞானசித்தியார் ஒன்பதாஞ் சூத்திரம் ஏழாஞ்செய்யுளில் முதற்கண் உள்ளவை.
கண்ட இவை – காணப்பட்ட தேகாதிப் பிரபஞ்சங்கள், காணாக் கழிபரம் – கருவி காரணங்களுக்கு எட்டாத பிரமம்.
யோகிகள் கருவி காரணங்களை விலகாமல் விலகி நின்று, அவைகளுக்கு எட்டாதவைகளை உணருகின்றார்கள். தேகச்சார்பை விலகாமல் விலகிப் பிரமத்தைச் சார்ந்து நான் பிரமம் என்று காணுவது ஒரு யோகநிலை. இந்த யோக நிலையை உற்றவர்கள், ‘நான் சரீரம்” என்பது எத்துணைப் பொய்யோ, அத்துணைப் பொய் ‘நான் பிரமம்’ என்பதும் என்றுணர்ந்து, சிவஞானம் சித்திக்கப் பெற்று, அச்சிவஞானபோதத்தால், சிவத்தின் உண்மையியல்பையும், அச்சிவத்தின் வேறாக எண்ணமுடியாத சிவமயமான தம் உண்மையியல்பையும் உணராதே உணர்ந்து, ‘நான் அது’ என்ற பேதம் தோன்றாதே இருமையின் ஒருமை உறுவார்கள்.
இஃது ஏகபாவம் எனப்படும் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்த முத்திநிலை. இந்நிலையோடு ஒப்பிடும்போது ‘நான் பிரமம்’ என்கின்ற யோகநிலை பொய். ஆனால் மெய்நிலைக்கு அது சாதகம். ஆதனால் அந்தப் பொய், புரை தீரந்த பொய்.
‘காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசு ஞானம்” என்பது சிவஞானசித்தியார். ஞானம் மூன்று வகை. அவை பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் என்பன. முறையே ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்தது. பதிஞானம்-சிவஞானம் எனப்படும். சிவஞானமாவது திருவருள். ‘அவனருளாலே அவன் தாள்வணங்கி’ என்ற திருவாசகம் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.
மூவகை ஞானங்களும் ‘நான் யார்’ என்ற வினாவை விடுவித்தற்கு உபகாரமானவைகள். பதி ஞானமாகிய சிவஞானத்தாலே தான் – நான் – என்பதன் உண்மை இயல்பு சித்திக்கும் என்பது காட்டப்பட்டது.
பசு ஞானத்தினாலே நான் பிரமம் என்ற உணர்வு பிறக்கும். அதனால் நான் என்பதன் உண்மையியல்பு சித்தியெய்தாது. இந்நிலையை முடிந்த முடிபு எனக் கொள்ளுபவர்கள் ஏகான்ம வாதிகள். இவர்கள் கொள்கை ஏகானம் வாதம்.
தாம் பிரமங் கண்டவர்போல்
தம்மைக் கண்டு ஆங்கது வே
நான் பிரமம் என்பவர் பால்
நண்ணாதே
என்பது உமாபதி சிவம் அருளிய நெஞ்சுவிடு தூது.
இந்த நான் யார்? என்கின்ற கட்டுரை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாலே எழுதப்பெற்று கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் 1964 கார்த்திகையிலே வெளியிட்ட ‘சிவசக்தி’ மலரில் பிரசுரமானது.
தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் வேலைப்பளுவிற்கு மத்தியில், இலங்கையின் இரண்டாவது தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அனேகமாக தினமும் வலைப்பதிவுகளினூடாக சந்திக்கின்ற நண்பர்களை நேரிலே காண்கின்ற வாயப்பு கிடைப்பது மிக அரிது. இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள்.
கடந்தமுறையை விட ஒழுங்குபடுத்தல் சிறப்பாக இருந்ததாக எனது எண்ணம். ஒன்றுகூடலுக்கு வந்த அனைவரும் எதிர்பார்ப்போடு வந்திருந்தது இன்னமும் விசேடம். கலந்துரையாடல்களுக்கான நேரம் போதாதிருந்த போதிலும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டது மிக மகிழ்ச்சியாகவும் பங்குபெறத்தூண்டியதாயும் இருந்தது. கலந்துரையாடல்களுக்கான அறிமுக உரைகள் சிறியதாய் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது.
லோசன் அண்ணா – ஒரு உதாரணத்திற்காகத்தான் உங்கள் பதிவினை கிரிக்கெட் பதிவாக குறிப்பிட்டேன், உங்கள் பதிவை பற்றி நான் சொல்லித்தான் மற்றவர்கள் அறியவேண்டும் என்பது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அதே போல வந்தியத்தேவன் உங்கள் பதிவில் தான் நான் அனேகம் பின்னூட்டங்களை வாசிக்க நேரத்தை செலவழிப்பதுண்டு. அதன் அர்த்தம் பதிவு நன்றாக இருக்காது என்பதல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கீர்த்தி உங்கள் பேச்சைப்போலவே பயற்றம் பணியாரமும் நன்றாக இருந்தது. நன்றிகள்.
கீழே சில புகைப்படங்கள்..