Adobe released Creative suit 4

அடொபி நிறுவனம் தனது Creative suit 3 இனை மேம்படுத்தி Creative suit 4 இனை வெளியிட்டுள்ளது. Graphic designing துறை மற்றும் இணைய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல் துறையில் முன்னணியில் இருக்கும் இந்த மென்பொருள்கள், மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கண்டுள்ளன.

அடொபி நிறுவனம் தனது முன்னைய பதிப்பினை போலவே இதனையும் நான்கு பிரதான பிரிவுகளாக விற்பனைக்கு விட்டுள்ளது.

ஒவ்வொரு பதிப்பிலும் அவ்வவற்றிற்குரியவாறான அடொபி மென்பொருள்களின் CS4 பதிப்புகள் காணப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு அடொபி இணையத்தளத்தை பாருங்கள்.

24 புரட்டாதி, 2008

Everything about your website

உங்களிடம் ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும்.

இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம்.

இந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் இணைய முகவரியை கொடுத்து தேடு என்று சொடுக்கினால் போதும். உங்கள் இணையத்தளம் தொடர்பான விடயங்களை உடனேயே அழகாக வரிசைப்படுத்தி விடும்.

உடன போய் தேடி பாருங்க..

23 புரட்டாதி, 2008

அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார்

இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை இட்டிருந்தார். அதில் அவர்,

counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.

என்று எழுதியிருந்தார். அதற்கு பின்னூட்டமிட்டிருந்த இரா. செல்வகுமார்,

அன் விகுதி கொண்ட அஃறிணைக்கு நன்றாக அறிந்த வியாழன், கதிரவன் முதலியவற்றைக் கூறலாம். அரச மரத்தை அரசன் என்றும் கூறுவதுண்டு. நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உண்டு. காதில் அணியும் தோட்டுக்கு கடுக்கன். கடப்பமரத்திற்கு அடப்பன் என்று ஒரு பெயர் உண்டு. ஏன் கடன், என்னும் சொல்லைக் கூடச் சொல்லலாம். கூரன் என்பது ஒருவகையான நெல்லுக்கும், ஒரு வகையான நாய்க்கும் பெயர் . கூழன் என்பது ஒரு பலாப்பழ வகை. தட்டான் என்பது தட்டாரப்பூச்சிக்கு (தும்பிக்கு) வழங்கும் பெயர். முயலுக்கு செவியன் என்று ஒரு பெயருண்டு. கடுவன் என்பது பூனை, நாய், குரங்கு ஆகியவற்றின் ஆண். விரியன் என்பது ஒரு பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உள்ளது போலவே களவன் என்றும் ஒரு பெயருண்டு. சுழல் காற்றுக்குச் சுழியன் என்று பெயர். என்று பற்பல சொர்கள் உண்டு.

ஆன் என்னும் விகுதிக்குத் தட்டான் (தட்டாரப்பூச்சி). பல்லாங்குழியில் பயன்படுத்தும் காய்களுக்கு அலவான் என்று பெயர் (அலவுதல் = சுழலல், சிந்துதல், அலைதல்..) அடைப்பான் என்பது மூடி அடைக்கும் பொருள். இதே அடைப்பான் என்பது கால்நடைகளுக்கும், ஒரு நோய்க்கும் பெயர். சுக்கான் (ஒருவகைக் கல். இதனை சிக்கிமுக்கிக் கல் என்றும் சொல்வர்). காளான், பூரான், என்று பலவற்றைக் காட்டலாம்.

என்று கூறி இரவிசங்கரின் கருத்தை மறுத்திருந்தார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டு தனது வாக்கியத்தை கீழ் வருமாறு மாற்றியிருந்தார்.

இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.

ஒரு வரியில் சொல்லுவதானால் இரவிசங்கரின் சரியானதொரு கருத்தை இரா. செல்வகுமார் மிகப்பிழையானதொரு கருத்தூடாக மறுதலித்திருக்கிறார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார். செல்வகுமாரின் தவறு என்னவென்பதை பார்க்கும் முன்னர் விகுதி என்றால் என்னவென்றும், ஆன் விகுதி பற்றியும் பார்ப்போம். செல்வகுமாருக்கு விகுதி பற்றிய சரியாக விளக்கம் இன்மையே அங்கு சென்ற விவாதத்திற்கு காரணம் ஆகியுள்ளது.

விகுதி.

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப(ம்) மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் (ஓடு) உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ(ம்) மின் இர் ஈர்
ஈயர் க ய உம் என்பனவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.

என்று நன்னூல் விகுதி பற்றி பதவியலிலே சொல்லுகின்றது.

இது வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்.

இங்கே அன் மற்றும் ஆன் என்பது குறிப்பாய் ஆண்பால் படர்க்கைக்கே ஆனதென்று காண்டிகை உரை சொல்கிறது.

இங்கு செல்வகுமாரின் தவறு என்னவென்றால் அவர் குறிப்பிட்ட சொற்கள் விகுதிகளை கொண்டவை அல்ல. அவை அனைத்தும் ஒன்று காரண பெயர்கள் அல்லது இடுகுறி பெயர்கள். அனைத்தும் பெயர்ச்சொற்கள். எச்சங்கள் அல்ல. கொஞ்சம் குழப்பம் தரக்கூடிய அரசன் என்ற சொல் கூட ஆகு பெயரே என்றி அது அன் விகுதி கொண்ட அரசு அல்ல.

இங்குதான் இரவிசங்கரின் கருத்து வருகின்றது.

வடிகட்டுவான் என்ற சொல் வடிகட்டு என்பதன் “னவ்வீறு” சேர்ந்த ஆண்பால் சொல் என்பதே அதுவாகும்.

வடிகட்டி எனும்போது அங்கு சேரும் “இ” விகுதி ஒருமை முன்னிலைக்குரியது. இப்போது உங்கள் முன்னிருக்கும் வடிகட்டும் தொழில் செய்வோனுக்கு, அல்லது செய்பவளுக்கு, அல்லது செய்வதற்கு “இ” விகுதி சேர்த்து வடிகட்டி என்று சொல்லுவதே சரியாகும்.

அன் என்று முடிகின்ற எல்லா சொற்களும் “அன் விகுதி” கொண்டவை அல்ல. (முரளி மற்றும் செல்வகுமார் கவனிக்க) மாறாக அன்விகுதி கொண்ட எச்சங்களனைத்தும் ஆண்பால் படர்க்கையை குறிப்பன. இவ்வெச்சங்களும் பொருளால், இடத்தால், காலத்தால், சினையால், குணத்தால், தொழிலால் மற்றும் இடைச்சொல்லால் வரல் வேண்டும்.

22 ஆவணி, 2008