ஊரோடி சொந்த வீட்டில்

இவ்வளவு காலமும் வாடகை வீட்டில இருந்த ஊரோடி இப்ப சொந்த வீட்டுக்கு வந்திருக்கு. இணையத்தளங்களோட நீண்ட கால பரிட்சயம் இருந்து வந்தாலும், ஏனோ ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டதில்லை.

திடீரெண்டு ரவிசங்கரோட பதிவொன்ற பாத்த பிறகு (எந்த பதிவெண்டு மறந்துபோனன். எப்பிடி என்ர ஞாபக சக்தி??) சொந்த வீட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வந்து மூண்டு நாளையில http://oorodi.blogspot.com, http://www.oorodi.com ஆக வந்திருக்கு. அத்தோட ரவிசங்கரோட பதிவில இருந்த மயூரன்ரை (அவற்றதானே??) ஐடியாவை பாவிச்சு புளொக்கரை இலவசமா கிடைக்கிற வேர்ட்பிரஸில இம்போட் பண்ணி பிறகு அதை எக்ஸ்போட் பண்ணி இந்த வேர்ட் பிரஸில எல்லா பதிவுகளையும் கொண்டுவந்திருக்கிறன். (இரண்டு பேருக்கும் நன்றி).

இப்பிடி இருந்த நான்

இப்பிடி ஆகிட்டேன்.

பிறகென்ன எப்பிடி இருக்கெண்டு ஒரு பின்னூட்டத்தை போட்டுவிடுங்கோ.

30 ஆனி, 2007

Google docs updated

கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.

இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

27 ஆனி, 2007

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

27 ஆனி, 2007