வேர்ட்பிரஸ்

வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 2

நீங்கள் இந்த தொடரின் பாகம் ஒன்றில் உங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக மாற்றுவது என்று பார்த்தீர்கள். அந்த பதிவினை இன்னமும் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று அதனை வாசித்து கொள்ளுங்கள். சரி இன்றைய விடயத்துக்கு வருவோம்.

வேர்ட்பிரஸை நிறுவுதல்.

வேர்ட்பிஸை நிறுவுவதற்கு முதலில் நீங்கள் wordpress.org இற்கு சென்று அதன் பிந்திய பதிப்பை (இதை எழுதும் போது 2.5.1) தரவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை extract செய்து உங்கள் htdocs folder க்கு பிரதி செய்து கொண்டு செல்லுங்கள். இது நீங்கள் இதனை உங்கள் வழங்கியிற்கு தரவேற்றுவதற்கு ஒப்பானது.

இனி உங்கள் இணைய உலாவியினை திறந்து, உங்கள் வேர்ட்பிரஸ் இருக்கும் கோப்புறையின் முகவரியை முகவரிப்பட்டையில் இடுங்கள் (http://127.0.0.1/wordpress/).

நீங்கள் இலகுவாக உங்களுக்குரிய config.php கோப்பினை உருவாக்கி கொள்ள முடியும் எனினும், இந்த கோப்பினை வேர்ட்பிரஸே உங்களுக்கு உருவாக்கி தருகின்ற வசதி இருக்கின்றமையினால் இன்னும் இலகுவாக இதனை உருவாக்கி கொள்ள முடியும். (config.php என்பது உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலின் தரவுத்தளம் சம்பந்தமான தகவல்களை கொண்டிருக்கும் ஒரு பிரதான கோப்பாகும்.)

இப்பொழுது Create a configuration file எனும் பொத்தானை அழுத்தி உங்கள் நிறுவலை ஆரம்பியுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டது போன்ற ஒரு பக்கம் கிடைக்கும். (இடையில் இது தொடர்பான விளக்கங்களோடு ஒரு பக்கம் வரும்).

இங்கே நீங்கள் Database Name, User name, Password, Database host, Table prefix எனும் 5 தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கின்றது. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

Database Name.

இது உங்கள் தரவுத்தளத்தின் பெயராகும். வேர்ட்பிரஸ் தனக்குரிய தரவுத்தளத்தை தானே நிறுவாதாகையால் நீங்கள் தான் ஒரு தரவுத்தளத்தை உருவாக்கி அளிக்க வேண்டும். இதற்கு பாகம் ஒன்றில் குறிப்பிட்டது போன்று உங்கள் phpMyAdmin இனை திறந்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் கீழே காட்டப்பட்டது போன்ற ஒரு பக்கத்தை பெறுவீர்கள்.

இப்பொழுது Create new database எனும் இடத்தில் உங்களுக்கு விரும்பிய பெயரொன்றை கொடுத்து (நான் wpguru என கொடுக்கின்றேன்) ஒரு தரவுத்தளத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.

User name உம் Password உம்.

இங்கு குறிப்பிடப்படும் பயனாளர் பெயரும் கடவுச்சொல்லும் தரவத்தளத்திற்குரியவை. உங்கள் MySQL தரவுத்தளம் இயல்பாகவே root எனும் பயனாளர் பெயரையும் கடவுச்சொல் எதனையும் கொண்டிருக்காது. நீங்கள் விரும்பினால் இத்தகவல்களை பயன்படுத்தலாம் அல்லது ஒரு புதிய கணக்கொன்றை phpMyAdmin இனை பயன்படுத்தி உருவாக்கி கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் மீளவும் phpMyAdmin இனை திறந்து privileges பக்கத்திற்கு செல்லுங்கள். இப்பக்கத்தில் கீழே தரப்பட்டிருக்கும் Add new user இனை சொடுக்கி புது பயனாளரை உருவாக்கி கொள்ளலாம்.

இதன்போது நீங்கள்
host என்பதற்கு localhost இனையும்
Global privileges என்பதில் Select all என்பதனையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். (நான் பயனாளர் பெயராக Bage என்பதனையும் கடவுச்சொல்லாக Bage1 என்பதனையும் கொண்ட கணக்கொன்றை உருவாக்கி இருக்கின்றேன்)

Database host
இது பொதுவாக localhost என்பதாகவே அமையும்.

Table prefix
இந்த பகுதி நீங்கள் இரண்டு மூன்று நிறுவல்களை ஒரே தரவுத்தளத்தில் மேற்கொள்ள உதவும். ஆனால் எமக்கு இப்போதைக்கு அது தொடர்பான கவலை ஏதும் இல்லையாதலால் அதனை அவ்வாறே விட்டுவிடுவோம்.

இப்பொழுது நிரப்பப்பட்ட படிவம் கீழ்காட்டபட்டவாறு இருக்கும்.

இப்பொழுது Submit பொத்தானை அழுத்துவீர்களாயின் நீங்கள் உங்கள் நிறுவலை முக்கால் பாகம் முடித்துவிட்டீர்கள்.

இப்பொழுது தொடர்ச்சியாக கேட்கப்படும் தகவல்களை கொடுத்து உங்கள் நிறுவலை பூரணப்படுத்தி கொள்ளுங்கள். நிறுவலின் முடிவில் உங்களுக்கு தரப்படும் கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருங்கள் (இதனை பின்னர் மாற்றி கொள்ளலாம்.)

சரி இப்பொழுது வேர்ட்பிரஸ் உங்கள் கணினியில் வேலைசெய்யத் தயாராகி விட்டது. உங்கள் இணைய உலாவியில் (http://127.0.0.1/wordpress/) முகவரிக்கு சென்றால் (அல்லது நீங்கள் நீங்கள் எந்த கோப்புறையில் நிறுவினீர்களோ அங்கு) கீழே காட்டப்பட்டது போன்று உங்களுக்கு ஒரு பக்கம் கிடைக்கும்.

இப்பொழுது உங்கள் கணினியில் வேர்ட்பிரஸ் இயங்கத்தொடங்கி விட்டது. இனியென்ன அடுத்த பாகத்தில அதின்ர நிருவாக முகப்பு பற்றி ஒருக்கா கிண்டி பாப்பம்.

சந்தேகங்கள் இருந்தா ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அவ்வளவுதான்.

4 வைகாசி, 2008

நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 1

வேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது?? ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது?? எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ?? சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு தெரிஞ்சளவுக்கு தொடரா சொல்லப்போறன் கேட்டுக்கொள்ளுங்கோ.. பகுதிகளை தவறவிடக்கூடாது எண்டு நினைக்கிறாக்கள் பக்கத்தில பேப்பர் வாசிக்கிற பையன் மேல சொடுக்கி செய்தியோடைய எடுத்துக்கொள்ளுங்கோ..

சரி தொடங்க முதல் ஒரு கேள்வி. அது சரி ஏன் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சுகொள்ள வேணும்??

இந்த உலகத்தில பல்வேறு பதிவுக்கான இணைய மென்பொருள்கள் (blogging) இருந்தாலும், வேர்ட்பிரஸ் மாதிரி ஒரு கையாள்வதற்கு இலகுவான, இலகுவில் எங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ள கூடியதான, மிகவும் சிறப்பான உதவிக்குறிப்புக்களை கொண்ட ஒரு புளொக்கிங் மென்பொருள் வேறொன்றும் இல்லை. இதனால் இது உலகில் மிக அதிகளாவன பயனாளர்களை கொண்டுள்ளது. இதனால் இப்பொழுது வேர்ட்பிரசுக்கான அடைப்பலகைகள் மற்றும் பிளகின்சை உருவாக்குவதே மிகவும் பணம் தரும் தொழிலாக கூட அமைந்துள்ளது. (நான்கூட கொஞ்சம் உழைக்கிறன் எண்டா பாத்துக்கொள்ஞங்கோவன்.)

சரி அப்ப வேற வேற என்ன புளொக்கிங் மென்பொருள்கள் இருக்கு??
Blogger
Blog City
Yahoo 360
MSN Spaces
Six Apart
ExpressionEngine
Serendipity
boastMachine
b2evolution
Nucleus CMS
Textpattern

சரி இப்ப விசயத்துக்கு வருவம்.
உங்களிட்ட ஒரு இலவச வேர்ட்பிரஸ் கணக்கு இருந்தாலும் (wordpress.org) நீங்கள் வேர்ட்பிரஸ் பற்றி நான் சொல்பவற்றை செய்து பார்க்கவும், நீங்களாகவே கொஞ்சம் கிண்டிப்பார்ககவும் அது போதுமானதல்ல. எனவே உங்களுக்கு ஒரு தனியாக நிறுவப்பட்ட ஒரு வேர்ட்பிரஸ் வேண்டும். (ஊரோடி இணையத்தளம் போல). அதுக்கா நீங்கள் எல்லாரும் என்னட்ட உடன ஒரு வழங்கியும் ஒரு டொமைனும் வாங்கத் தேவையில்லை. நீங்களே உங்கட கணினியை ஒரு வழங்கியா மாற்றி இவற்றை இலவசமாக செயல்படுத்தி பார்க்க முடியும்.

கணினியை உங்களுக்கேற்ற வழங்கியாக மாற்றல்.
உங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய வழங்கி ஒன்றாக மாற்றுவதற்கு உங்களுக்கு கீழ்வரும் மென்பொருட்கள் தேவை
1. PHP
2. MySQL
3. Apache

அத்தோடு இலகுவாக அலளுஞடு இல் வேலை செய்ய phpMyAdmin.

இவை மூன்றையும் நீங்கள் தனித்தனியே அவற்றிற்குரிய இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கி நிறுவி ஒத்திசைவாக்கி பயன்படுத்த முடியும். நாங்கள் அது தொடர்பாக இங்கு பார்ப்பது எங்களுக்கு தேவையற்றதோடு அது மிகுந்த நீண்ட சந்தேகங்களை அதிகளவில் எழுப்பக்கூடிய செயன்முறையாகும்.

எனவே நாங்கள் இலகுவாக WAMPP அல்லது XAMPP இனை தரவிறக்கி நிறுவி பாயன்படுத்தி கொள்ளுவோம். இம்மென்பொருள் எமது கணினையை மென்பொருளாக மாற்றி பயன்படுத்த தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.

இப்பொழுது இங்கே சென்று மிக பிந்திய WAMPP (for windows) அல்லது XAMPP (for Mac OS X) இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (phpMyAdmin கூட இதனுடன் இணைந்து வருகின்றது.)

இப்பொழுது மென்பொருளை திறந்து கீழே படத்தில் காட்டியது போல உங்களுக்கு தேவையானவற்றை தொடக்கி விடுங்கள். (வின்டோசிலும் இவ்வாறுதான் இருக்கும்)

இப்பொழுது உங்கள் இணைய உலாவியை திறந்து உங்கள் localhost (127.0.0.1) இனை திறந்து கொள்ளுங்கள். கீழே இருப்பது போன்ற ஒரு பக்கம் திறக்கும். திறக்காது விட்டால், உங்கள் நிறுவலில் அல்லது வேறு எங்கோ பிழை நடந்து இருக்கின்றது.

இப்பொழுது நீங்கள் இந்த தொடக்க இணையப்பக்கத்தை சரியாக கவினித்தால், உங்கள் வழங்கியின் பாதுகாப்பு சரிவரி கவனிக்கபடவில்லை என்று சொல்லுவதை காணலாம். நீங்கள் இதனை ஒரு சோதனைக்காகவே பயன்படுத்த போவதனால், மற்றவர்களை இதனை அணுக அனுமதிக்க போவதில்லையாதலால், இப்பிரச்சனையை பெரிதாக கருதாமல் பேசாமல் விட்டுவிடுங்கள். ஏனென்றால் சிலவேளைகளில் அவர்கள் சொல்லி இருப்பது போல அவற்றை சரி செய்ய முற்பட்டு வழங்கி மொத்தமாக இயங்காமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. வழங்கியின் பாதுகாப்பு தொடர்பான செயன்முறைகளை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்க முயல்வோம்.

இப்பொழுது கருவிகளில் நிரற்படுத்தபட்டிருக்கும் phpMyAdmin இற்கும் சென்று சரியாக இயங்குகின்றதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.

உங்கள் வழங்கியன் பிரதான public_html கோப்புறைக்கு இணையான கோப்புறை உங்கள் நிறுவலின் உள் htdocs என்ற பெயரில் கோப்புறையாக காணப்படும். இங்குதான் நீங்கள் தரவேற்றும் கோப்புகள் அனைத்தும் சென்று சேமிக்கப்படும்.

வேண்டுமானால் உங்கள் இலகுத்தன்மைக்காக அதன் ஒரு shortcut இனை டெக்ஸ்ரொப்பில் என்னைப்போல உருவாக்கி கொள்ள முடியும்.

Shortcut in desktop

இப்பொழுது உங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய ஒரு வழங்கியாக மாற்றியாகி விட்டாச்சு, இப்பொழுது வேர்ட்பிரஸை நிறுவவேண்டியது தான் மிச்சம்.

சரி இண்டைக்கு அவ்வளவுதான். அடுத்த பதிவில் வேர்ட்பிரஸ் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக பார்ப்போம். நல்லாயிருக்கா பின்னூட்டத்தில சொல்லுங்கோ..

3 வைகாசி, 2008

வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை

நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.

ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை கொண்டுவரும். இது எவ்வாறு நடைபெறுகின்றது என்று என்னால் முடிந்தவரையில் விளக்க முயற்சிக்கின்றேன்.

நீங்கள் வேரட்பிரஸை நிறுவும் போது அதற்குரிய தரவுத்தளம் தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டி இருக்கும். இத்தகவல்களே config.php என்கின்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.

இங்கு வேர்ட்பிரஸ் தனக்குரிய தரவுத்தளத்தை தானே உருவாக்காமல் எம்மை உருவாக்கி தருமாறு கேட்பதனால் நாமே அதனை உருவாக்க வேண்டி இருக்கின்றது. இங்குதான் முக்கியமான பிரச்சனை நேர்கிறது. அனேகமான வழங்கி வழங்குனர்கள் தரவுத்தள மேலாண்மைக்கு phpMyAdmin போன்ற சிறந்த மென்பொருள்களை வழங்கினாலும் தரவுத்தள உருவாக்கத்திற்கு அவ்வசதிகளை வழங்குவதில்லை.


இதனால் எம்மால் config.php இல் கீழே காட்டப்படுகின்ற MySQL charset, MySQL connection collation ஆகிய இரண்டு கட்டளைகள் தொடர்பாக கவனம் செலுத்த முடிவதில்லை. இவை இரண்டும் தன்னிச்சையாகவே latin1_swedish_ci ஒருங்கு குறியில் அமைக்கப்பெற்று விடுகின்றன. சிறந்தொரு தரவுத்தள உருவாக்க மென்பொருள் இருக்குமிடத்து எம்மால் இவற்றை நிச்சயமாக கீழே காட்டப்பட்டது போல கவனத்தில் எடுக்க முடியும்.

நிறுவல் முடிந்த பின்னர் தரவுத்தளம் latin1_swedish_ci ஒருங்கு குறியிலும் வேர்ட்பிரஸின் config.php பொதுவாக கீழ்வருமாறும் அமைந்திருக்கும்.

இதனை மிக இலகுவாக கீழ்வருமாறு ஒரு வரைபடத்தில் காட்டலாம்.

இந்த வரைபடத்தை பார்க்கும்போதே என்ன பிரச்சனை நேர்கிறது என்பது உங்களுக்கு இலகுவாக விளங்கிவிடும். (இதற்கு கீழ்வரும் பிரச்சனையை மிக இலகுவாக விளக்க முயற்சிக்கின்றேன்) இப்பொழுது நீங்கள் உள்ளிடுகின்ற தமிழ் எழுத்துக்கள் தரவுத்தளத்திற்கு செல்கின்றன. தரவுத்தளத்துடன் தொடர்புகொள்ளும் ஒருங்குகுறி என்னவென்பது குறிப்பிடப்படாததால் தரவுத்தளத்தில் அவ்வாறே சேமிக்கப்படுகின்றன. இப்பொழுது நீங்கள் வேரட்பிரஸை சிறிது மேம்படுத்துகிறீர்கள் (2.2—2.2.1). இப்பொழுது ஆரம்பிக்கிறது பிரச்சனை. இந்தப்பிரச்சனை உங்கள் எழுத்துக்கள் பூச்சிகளாக தரவுத்தளத்தில் மாறாது ஆனால் உங்கள் வெளியீடு பூச்சிகளாக தெரிகிறது. இதற்கு தீர்வுதான் ரவிசங்கர் குறிப்பிட்ட முறை.

தரவுத்தளத்தின் ஒருங்குகுறி தொடர்பான தகவல்களை config.php இல் நீக்கிவிடல்.

சரி அப்படியானால் எனக்கு என்ன பிரச்சனை வந்தது.

வேர்ட்பிரஸ் 2.5 இன் தரவுத்தளக்கட்டமைப்பு வேர்ட்பிரஸ் 2.2 இனை விட மிகவும் வேறுபட்டது. இதன்போது தரவுத்தளம் மாற்றமடைகிறது. பிறகென்ன அவ்வளவுதான் உங்கள் தகவல்கள் அனைத்தும் தரவுத்தளத்துக்குள் பூச்சிகளாக மாறிவிடும். நீங்கள் config.php ஐ என்னதான் மாற்றியும் பயனில்லை.

செய்யப்படுகின்ற Backup கள் கூட ஒருங்குகுறி மாற்றத்தால் பயனற்று போய்விடும். நீங்கள் backup.sql ஐ திறந்து பார்த்தால் எழுத்தக்கள் பூச்சிகளாக இருப்பதை பார்க்கலாம்.

இதனை இலகுவாக சொல்வதானால் யுனிகோட் ஒருங்குகுறியில் ஒரு text கோப்பை உருவாக்கி சேமிக்கும் போது ANSI ஒருங்குகுறியில் சேமித்து விட்டு, பின்னர் மீண்டும் தமிழை தேடுவது போன்றது. இந்த அனுபவம் உங்களுக்கு இல்லையாயின், ஒருமுறை செய்து பாருங்கள்.

வேறென்ன?? கேள்வி இருந்தா கேளுங்க. தெரிஞ்சா பதில் சொல்லுறன். தெரியாட்டி ரவிசங்கர் வந்து சொல்லுவார்…

29 சித்திரை, 2008