நற்சிந்தனை
நல்லூரான் திருவடி
நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி – கிளியே
இரவுபகல் காணேனடி.
ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி – கிளியே
நல்லூரான் தஞ்சமடி
தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி – கிளியே
கவலையெல்லாம் போகுமடி
எத்தொழிலைச் செய்தாலென்
எதவத்தைப் பட்டாலென்
கந்தன் திருவடிகள் – கிளியே
காவல் அறிந்தி்டெடி
பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி – கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி
சுவாமி யோகநாதன்
சொன்ன திருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி – கிளியே
பொல்லாங்கு தீருமெடி.