இலக்கியம்

இலக்கியம் சார் பதிவுகள்.

ஆத்மாநாம் படைப்புகள்

2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.

ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் காணப்படுகிறது. இலத்தீன் அமெரிக்க கவிஞர்களின் பாதிப்பும் சிறிதளவு காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன். ஒரு தீவிரமான ஓட்டம் ஆத்மாநாமின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கிய அம்சமாகும்.

சில ஆத்மாநாமின் வரிகளை பாருங்கள்.

ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக்கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.

பாட்டாளி மக்களுக்கான இந்தவரிகளும் யோசிக்க வைக்கிறது

இந்தச் செருப்பைப்போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்தடனாவது விட்டதற்கு

மற்றவர்களுக்காய் பாடுபடும் ஒருவனாக அனேக கவிதைகளில் ஆத்மாநாம் காணப்படுகிறார்.

பழக்கம் எனும் இந்தக் கவிதையில் வரும் வரிகள் ஆத்மாநாமை நன்கு வெளிப்படுத்துகின்றன.

என் கால்கள்
என் நடை
என் சதுரம்

ஆத்மாநாம் தன்னைப்பற்றிய சிறு கட்டுரையும் இத்தொகுப்பில் காணப்படுகின்றது.

19 ஐப்பசி, 2006