லினிக்ஸ் என்ற சொல்லே ஏதோ கணினியில் கரைகண்டவர்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பை பெருமளவில் மாற்றி உதவியது உபுந்து லினிக்ஸ் வெளியீடு. அதேபோல நீண்டகாலமாக வின்டோஸை நம்பி மட்டுமே கணினிகளை வெளியிட்டு வந்த HP, Dell நிறுவனங்களும் உபுந்துவுடன் கணினிகளை வெளியிட ஆரம்பித்தது. நோட்புக் கணினிகளுக்கு சிறந்தது உபுந்துதான் என்று பலரும் கருதுமளவிற்கு சிறப்பான வசதிகளுடன் தன்னை காலத்துக்குகாலம் மேம்படுத்தி இலவசமான சிறந்த இயங்குளமாக உபுந்து வளர்ந்து வருகிறது.

நீங்கள் உபுந்துவுக்கு மாற விரும்பினால் அல்லது உபுந்து பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த “Ubuntu pocket guide and reference” என்கின்ற இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். இதன் அச்சடிக்கப்ட்ட பிரதி 10 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டாலும் மின்புத்தகம் இலவசமானது.

இங்கே சென்று தரவிறக்கி கற்றுக்கொள்ளுங்கள்.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான தொடர்பதிவின் இரண்டாம் பகுதியில் portfolio ஒன்றினை வைத்திருப்பதன் பயன் பற்றி எழுதியிருந்தேன். அதில் portfolio பார்த்தவுடன் புரியக்கூடியதாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
அப்படியான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள இலவசமாக பல வேர்ட்பிரஸ் அடைப்பலகைகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் அவற்றை பயன்படுத்தி உங்களுக்கும் அவ்வாறான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள முடியும். அவற்றில் சில கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
Portfolio Press

The Understand

CSS Gallery Theme 2.0

Sharpfolio

CSS Gallery Theme

SnapShot

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதலாம் பகுதியில் அடிப்படையாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கின்ற வழிமுறைகள் பற்றியும், பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தில் வேலை செய்வது தொடர்பான அடிப்படை விடயங்கள் சில பற்றியும், பின்னர் மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை செயவது எப்படி என்பது தொடர்பாயும் பார்த்தோம்.
இப்போது நான்காம் பகுதியில் கோரல் தொடர்பாக மேலும் சில விடயங்களை பார்ப்போம்.
வேலைக்கு எடுக்கும் காலம்.
கோரல் ஒன்றினை இடும்போது எவ்வளவ காலத்தில் அவ்வேலையை முடித்து கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட வேண்டும். இதுவும் எங்களின் கோரல் தேர்வு செய்யப்படுவது தொடர்பில் முக்கியமான ஒரு விடயமாகும். சிலர் குறைந்தளவு நாட்களை கொடுத்தால் இலகுவாக வேலை கிடைத்துவிடும் என நினைப்பதுண்டு. ஒரு வகையில் அது உண்மைதான் எனினும், நாங்கள் குறிப்பிட்ட நாளில் வேலையை முடித்து கொடுக்காது விடின் எதிர்மறையான விழைவினை ஏற்படுத்திவிடும். தொடர்ச்சியாக எமக்கு வேலை கிடைப்பதை இது தடை செய்து விடும். நீங்கள் குறிப்பிடும் காலத்துக்கு முன்னர் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடியதாக வேலைக்கான காலத்தை குறிப்பிட வேண்டும். அதற்காக 500 சொற்களில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கின்ற வேலைக்கு ஒரு கிழமை எடுத்துக்கொள்ளுவது முட்டாள்தனமானது. இரண்டு நாட்கள் என குறிப்பிட்டு ஒரு நாளில் முடித்து கொடுத்தால் அவர் தனது அடுத்த வேலைக்கும் எம்மை அணுகுவார்.
வேலைக்காக நாங்கள் கேட்கும் பணம்
பெரும்பாலான வேலை தருபவர்கள் குறைந்தளவு பணத்தில் தங்கள் வேலையை செய்து முடிக்க ஆர்வமாயிருப்பார்கள். அதற்காக மிக குறைந்த அளவிலான பணத்தினை கேட்பதும் எமக்கு வேலையை பெற்றுத்தரா. ஒரு வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்கும் வேலைக்கு 50 அமெரிக்க டொலர்கள் என்று கேட்பது மிகவும் குறைவான பணமாகும். இவ்வாறு நீங்கள் ஒரு கோரலை செய்தால் நிச்சயமாக அந்த வேலை உங்களுக்கு கிடைக்காது. அதேபோல அது உங்கள் திறமையை குறைத்து காட்டுவது போல அமைந்து விடும். (சாதாரணமாக பெரிய நிறுவனங்கள் அவ்வாறான வேலைக்கு ஏறத்தாள 400 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்களை கேட்கும்.) எங்கள் திறமைக்கும் நேரத்திற்கும் ஏற்ற ஒரு பணத்தை கோருதலே நலம். இது பொதுவாக அனுபவத்தில் வந்துவிடும்.
சரி உங்களுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டது, வேலை செய்யும் போது என்ன கவனிக்க வேண்டும்?
வேலை செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுதான். இப்பொழுது நீங்கள் எந்தளவில் வேலையை முடித்து விட்டீர்கள் என்று குறைந்தது தினமும் ஒரு தடவையாவது வேலை தருபவருக்கு அறிவிக்க வேண்டும். இது உங்கள் மேல் ஒரு நம்பிக்கையை வேலை தருபவருக்கு ஏற்படுத்தும். தனது அடுத்தடுத்த வேலைகளையும் உங்களுக்கு தர அவர் விரும்புவார், அது போல உங்கள் வேலை தொடர்பாக நல்லதொரு பின்னூட்டத்தையும் உங்களுக்கு தருவார். இது மற்றைய வேலை தருபவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள காரணமாக அமையும். கீழே திரைவெட்டை பாருங்கள்.

இப்பொழுது நாங்கள் ஒரு வேலையினை செய்து முடித்து விட்டோம். இனி எம்மை நிலைநிறுத்திக்கொள்ளுவது எவ்வாறு.
தொடக்கத்தில் அதிக வேலை என்பதனை விட கிடைக்கின்ற சில வேலைகளை திறமையாக செய்து முடித்தால் காலப்போக்கில் உங்களை வேலைகள் தேடிவரும். கடந்த கிழமைக்கான எனது இன்பொக்சின் ஒரு பகுதியின் திரைவெட்டை பாருங்கள்.

தொடர்ச்சியாக வேலை தருபவர்கள் அல்லது நீண்டகாலத்துக்கு வேலை தருபவர்களின் வேலைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தல் நல்லம். இதனால் உங்களால் தொடர்ச்சியாக பணமீட்ட முடியும். (உதாரணமாக பதிவு மேற்பார்வை செய்வது போன்ற வேலைகள்)
உங்களால் செய்ய முடியாத வேலை ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட, உங்கள் வேலை தொடர்பான கரும்புள்ளி ஒன்றினை நீங்களே குத்தியவர்களாகி விடுவீர்கள். அதற்கு நீங்கள் இடமளிக்க கூடாது.
நீங்கள், ஒரு நிறுவனமல்லாமல் தனிப்பட்டவராக இருந்தால் எல்லா விதமான வேலைகளையும் எடுத்து செய்வதை விட குறிப்பிட்ட ஒரு வகையிலான, உங்களிடம் மிகுந்த திறமையுள்ள வேலையினை எடுத்து செய்தல் பயன்தரும். உதாரணமாக “மொழிபெயர்ப்பு வேலை”. இப்படி செய்வதனால் அவ்வாறான ஒரு வேலை வைத்திருப்பவர் இது தொடர்பான வேலை செய்பவர்களை தேடும் போது உங்கள் பெயர் முதல் வருவதற்காள வாய்ப்பு அதிகம். இதனால் உங்களுக்கு வேலை கிடைப்பது இலகுவாகிவிடும். (கூகிளில் தேடும்போது முதல் பக்கத்தில் வரும் தேடல் முடிவுகளோடு நாங்கள் நிறுத்திக்கொள்ளுவது போல)
இந்த பதிவுடன் இத்தொடர் முடிவுக்கு வருகின்றது. இதனை தொடர்ந்து நீங்கள் இணையத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டால் உங்களுக்கு உதவக்கூடிய சில பதிவுகள் வர இருக்கின்றன. தவறவிடாமல் இருக்க இங்கு சொடுக்கி எனது செய்தியோடையினை பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களிடம் ஏதும் கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள் முடிந்தளவு பதிலளிக்க முயற்சிக்கின்றேன். செய்தியோடை ஊடாக என்னை பின்தொடர்பவர்கள் மற்றும் அனைவரும் இத்தொடர் எவ்வாறிருந்தது என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
2008 ஆம் அண்டின் சிறந்த பத்து ரொறன்ற் இணையத்தளங்களை TorrentFreak இணையத்தளம் வரிசைப்படுத்தி உள்ளது. ரொறன்ற் இணையத்தளங்களுடாக எமக்கு தேவையான மென்பொருள்கள், படங்கள் என எவற்றை வேண்டுமானாலும் தரவிறக்க முடியும். ஆனால் அண்மைக்காலங்களாக இவை சட்ட ரீதியான சிக்கல்களை சந்தித்து வருகின்றன.
1. The Pirate Bay
2. Mininova
3. IsoHunt
4. Torrentz
5. Torrent Reactor
6. Demonoid
7. BTJunkie
8. Sumo Torrent
9. BTMon
10. TorrentPortal
மேலும் விபரமான தகவல்களுக்கு இங்கு வாருங்கள்.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதல் பகுதியில் இணையத்தில் சம்பாதிக்கக்கூடிய இரண்டு வழிமுறைகள் பற்றி பார்த்தோம். பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தினூடு வேலை செய்ய எண்ணுபவர்கள் அடிப்படையாக வைத்திருக்க வேண்டியவற்றை பற்றி சற்று விளக்கமாக பார்த்தோம். இப்பொழுது மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது என்று சற்று விளக்கமாக பார்ப்போம்.
இன்றைய பகுதியின் விடயத்திற்கு போகமுன்னர் முக்கியமான இரு விடயங்கள்
Elance இணையத்தளத்தினை நான் ஒரு உதாரணத்திற்காகவே பயன்படுத்துகின்றேன். Elance போன்ற பல இணையத்தளங்கள் உள்ளன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கேற்றவாறாக தேர்வுசெய்து கொள்ள முடியும். அப்படியான சில இணையத்தளங்கள் கீழே.
1. GetAfreelancer
2. ODesk
3. RentACoder
உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். பதிவில் சேர்த்து விடுகின்றேன்.
இந்த தொடர்பதிவு எனது முழுவதுமாக எனத அனுவத்தை அடிப்படையாக கொண்டது. நீங்களும் உங்கள் அனுபவங்களை கீழே பின்னூட்டத்தில் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நல்ல கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது.
இங்கு நல்ல கோரல் என்பது வேலைதருபவரை கவரக்கூடிய வகையில் உங்களுக்கு அவர் அந்த வேலையை தருவதை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
கோரல் ஒன்றினை செய்ய முதல் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்.
1. வேலையின் தன்மை
நீங்கள் கோரல் செய்கின்ற வேலை நிச்சயமாக உங்களால் செய்து முடிக்கக்கூடியதானதா என்று நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். செய்யக்கூடியது போல்தான் இருக்கின்றது என்று நினைத்து கோரல் ஒன்றினை செய்வது தொடர்ச்சியாக நீங்கள் வேலை பெறுவதை தடுக்கும் ஒரு காரணியாக அமைந்து விடும்.
2. நேரம்
தரப்பட்ட வேலை ஏழு நாட்களில் செய்து முடிக்கப்பட வேண்டும். உங்களால் ஒரு நாளைக்கு ஆகக்கூடியது 2 மணத்தியாலங்களுக்கு மேல் ஒதுக்க முடியது என்றால் 20 மணத்தியாலங்கள் எடுக்கும் வேலை ஒன்றினை சமாளித்து செய்யலாம் என்ற நினைப்பில் நிச்சயமாக கோரல் செய்யக்கூடாது.
உங்களால் சரியான நேரத்தில் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வேலை ஒன்றினை கண்டறிந்து விட்டீர்களானால் இப்பொழுது நீங்கள் ஒரு கோரலை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
கோரல் ஒன்றினை செய்யும்போது கவனிக்க வேண்டியவை.
1. விளித்தல்.
வேலை தருபவரின் பெயர் எமக்கு தெரிந்திருந்தாலும், ஐயா அல்லது அம்மணி (Dear Sir, Dear Madam) என விளித்து கோரலை தொடங்குவது மிக்க பயன் தரும்.
2. உள்ளடக்கம்
எவ்வளவுக்கெவ்வளவு எங்கள் உள்ளடக்கம் சிறப்பானதாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு எங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் கிட்டும். சிலர் உள்ளடக்கதை ஒரு template போல உருவாக்கி வைத்துக்கொள்ளுவார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அதனை அப்படியே அங்கு பிரதி பண்ணி ஒட்டி விடுவார்கள். உதாரணமாக ஒரு CSS கோப்பினை மேம்படுத்த வேண்டும் என்கின்ற வேலைக்கு, நான் இணையவியாபார இணையத்தளங்கள் பலவற்றை உருவாக்கி இருக்கின்றேன் என்பது போன்ற ஒரு கோரல். இது நிச்சயமாக உங்களிடம் எவ்வளவு திறமையிருந்தாலும் உங்களுக்கு வேலை கிடைப்பதை தடைசெய்துவிடும்.
இதேபோல கோரல் ஒன்றின்போது ஏற்படுகின்ற மற்றொரு பிழை நாங்களாகவே பலவற்றை அனுமானித்து கொள்ளுதல். உதாரணமாக வேர்ட்பிரஸ் நிறுவல் ஒன்றினை வேலை தருபவரின் வழங்கியில் நிறுவவேண்டும் என்கின்ற வேலைக்கு, நாங்களாகவே வேலைதருபவருக்கு வேர்ட்பிரஸ் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும், வழங்கியில் இருக்க வேண்டியவைகள் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு இரண்டே வரியில் ஒரு கோரலை செய்வது. சில வேளைகளில் எங்களின் அனுமானங்கள் சரியாக கூட இருக்கலாம் இருந்தாலும் நாங்கள் அனுமானங்கள் ஏதும் இல்லாமல் கோரலை செய்வது நல்லம்.
கோரல் ஒன்றின் உள்ளடக்கத்தினை நாங்கள் வேலை தருபவர்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கேற்றவாறாக உருவாக்கி கொள்ளல் பயன்தரும்.
அவர்களை நாங்கள், அவர்கள் தருகின்ற வேலையின் தன்மையினை பொறுத்தும் வேலை கோரப்பட்ட முறையினை பொறுத்தும் மூன்று வகையாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.
அ. தரப்பட்ட வேலைக்கு அறவே சம்பந்தமல்லாதவர்கள்.
உதாரணமாக வழக்கறிஞர் ஒருவர் தனக்கு ஒரு வலைப்பதிவை உருவாக்கி தருமாறு வேலை ஒன்றினை தருதல். அனேகமாக இவர்கள் இந்த இணையத்தளம் போல் இருக்க வேண்டும், கூகிளில் தேடினால் வரவேண்டும் என்பதாக வேலையை கோருவார்கள்.

வழக்கறிஞர் வலைப்பதிவின் நன்மைகள் பற்றி அறிந்திருக்ககூடுமே அன்றி வலைப்பதிவு தொடர்பான தொழிநுட்ப அறிவு ஏதுமற்றிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அவரிற்கான கோரல் ஒன்றினை செய்யும் போது பெரிதளவில் தொழிநுட்ப சொல்லுகளை கலக்காமல், அவருக்கு புரியக்கூடிய ஆங்கிலத்தில், கோரலை இடவேண்டும். குறிப்பாக நீங்கள் அவருக்காக சேர்க்கப்போகும் வசதிகள் மற்றும் அடைப்பலகை தொடர்பாக நன்கு விபரித்து அதனால் அவருக்கு என்ன பயன் என்பதனை தெரிவிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் தினமும் இலகுவாக பதிவினை எழுதலாம் என்று மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்கள் பின்னூட்டமிடுவதற்கான வசதியும் இருக்கும் என்பதனையும் அவருக்கு குறிப்பிடல் வேண்டும். சில வேளைகளில் இது உங்களுக்கு சிரிப்பாக தெரிந்தாலும் இதன் பயன் நீங்கள் ஒரு கோரலை இடும்போதுதான் தெரியும்.
ஆ. தரப்பட்ட வேலை சம்பந்தமான மிகவும் அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக மேற்குறிப்பிட்ட அதே வேலையை இவர்கள் விபரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். இவர்கள் Valid coding, மற்றும் SEO செய்யப்பட்டிருக்க வேண்டும் (SEO அடிப்படை தொடர்பாக விரைவில் ஒரு பதிவு எழுத இருக்கின்றேன்.) என்பதாக வேலையை கோருவார்கள்.

இவர்கள் வேலையை கோரும்போதே அதிகளவு கலைச்சொற்களை பயன்படுத்தி இருப்பார்கள். இவர்களுக்கு இந்த வேலையை செய்ய தெரியாதே தவிர இவர்களுக்கு வேலை தொடர்பான பூரண அறிவிருக்கும். இவர்களுக்கான கோரலின் போது நான் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டது போன்ற எங்களின் மேம்படுத்தப்பட்ட அறிவினை பயன்படுத்த வேண்டும். தாராளமாக தொழிநுட்ப சொற்களை பயன்படுத்தலாம். இவர்களுக்கு முடியுமானால் இவர்களுக்கு சில புதிய விடயங்களை சொல்லலாம். இவர்களின் எதிர்பார்ப்புக்கு உங்களிடம் அவர்கள் சொல்லுவதைவிட சிறந்த தீர்வு இருப்பின் அவற்றை வழிப்படுத்தலாம். இவை உங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்க உதவும்.
இ. தரப்பட்ட வேலை சம்பந்தமாக ஓரளவு அறிவுள்ளவர்கள்.
இவர்கள் மேற்குறிப்பிட்ட வேலையை விபரிக்கும் விதம் இன்னமும் வித்தியாசமாக இருக்கும். இவர்கள் பல வலைப்பதிவுகளில் இருந்து உதாரணம் காட்டுவார்கள். நீட்சிகள் பற்றி சொல்லுவார்கள்.

இவர்களுக்கு நாங்கள் தொழிநுட்ப சொல்லுகளை பயன்படுத்தலாம் இருந்தாலும் சிறிது விளக்கமாக சொல்லவேண்டும் (SEO என்று சொல்லாமல் அதனை விரித்து சொல்லலாம்). இவர்களுக்கு நாங்கள் இவர்களின் தேவைகளுக்கான புதிய நீட்சிகளை அறிமுகப்படுத்தலாம். இருந்தாலும் அவர்கள் போக்கிலேயே செல்லுவது நல்லம். அவர்கள் கேட்காமல் நாங்களாக புதிதாக எதனையாவது சொல்லுவது நிச்சயமாக பயன் தராது. எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
3. முடிவு
எங்களின் முடிவு பொதுவாக நாங்கள் செய்யக்கூடிய அல்லது வழங்கக்கூடிய வேலைக்கு பிந்தியதான சேவைகள் சம்பந்தமானதாக இருக்கலாம். மேற்குறிப்பிட்ட உதாரணத்திற்கு நாங்களே நீட்சிகளையும் அடைப்பலகையையும் நிறுவிவிடுவோம். மேலும் இரண்டு வாரத்துக்கு ஏதும் பிரச்சனை ஏற்படின் நாங்கள் தீர்த்து வைப்போம் என்பது போன்றவையாக இருக்கலாம்.
அதனை விட கேட்கப்பட்ட வேலை போன்ற நாங்கள் முன்னர் ஏதும் வேலைகள் செய்திருந்தால் அந்த உதாரணங்களையும் முடிவில் சேர்க்கலாம்.
அத்துடன் நன்றி சொல்லி உங்கள் பெயருடன் முடித்தல் எப்போதும் நன்மை செய்யும்.
அடுத்த பதிவில் நாங்கள் செய்கின்ற வேலைக்கு எவ்வளவு பணம் பெறலாம், எவ்வளவு காலம் எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் ஒரு உதாரண கோரல் ஒன்றினையும் பார்க்கலாம். அதனைத்தொடர்ந்து எங்களை எவ்வாறு நிலைநிறுத்திக்கொள்ளலாம் என்பது தொடர்பாயும், எவ்வாறு வேலைகளை தேர்வுசெய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பார்க்கலாம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.