Why I love Gmail

நான் முதல்முறையா மின்னஞ்சல் பாவிக்கத்தொடங்கினது 1999 இன்ர கடைசிப்பாதியிலதான். பாவிக்கத்தொடங்கினது எண்டதை விட கணக்கொண்டை உருவாக்கினது எண்டதுதான் உண்மை. முதலில Hotmail லில. பிறகு கொஞ்சக்காலம் போக Yahoo! அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo! அரட்டை மென்பொருள் மிகப்பிரபலமாகவும் தொடங்க அதில ஒரு கணக்கு தொடங்கினான்.

ஜிமெயில் அறிமுகமான காலத்தில கூகிள் மென்பொருட்கள் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததால (அந்த நேரத்தில மின்னஞ்சல் “பயன்படுத்த” தொடங்கீற்றன்) உடனேயே ஒரு மின்னஞ்சல் கணக்கு தொடங்கினாலும் பொதுவா பயன்படுத்தி வந்தது யாகூவைத்தான். இருந்தாலும் கொஞ்சக்காலம் போக கொஞ்சம் கொஞ்சமா ஜிமெயிலுக்கு அடிமையாகியாச்சு. இப்ப பொதுவா எனக்கு ஜிமெயிலில என்ன பிடிச்சிருக்கெண்டு பாப்பம்.

அரட்டை
இந்த அரட்டை வசதி இப்ப யாகூ இலயும் இருந்தாலும் அது பெரும்பாலும் ஒருவராலும் பயன்படுத்த படுவதில்லை என்பதுதான் உண்மை.

இந்த அரட்டையில மிகமுக்கியமான பயன் என்னெண்டா அரட்டைகளை சேமித்து வைக்கிறது. விருப்பமில்லையெண்டா விடலாம். அதுக்கும் வசதி இருக்குது.

POP3
எனக்கு மிகவும் பயன்படுற ஜிமெயிலின்ர வசதி இதுதான். இந்த வசதி இருக்கிறதால ஜிமெயில் இப்ப என்ர மின்னஞ்சல் Client ஆக பயன்படுகிறது என்கிறதுதான் உண்மை. அத்தோட வெவ்வேறு மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து பெறப்படுகின்ற மின்னஞ்சல்கள் வேறு வேறு Label கள் மூலம் வேறுபடுத்தப்பட்டிருத்தலும் இதன் சிறப்பம்சமாகும். இதன்மூலம் Spam உம் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.


அத்தோட இவ்வாறு மின்னஞ்சல்களை ஒன்றா இணைக்கிறதால மின்னஞ்சல்கள் அனுப்பும் போதும் எங்களுக்கு விரும்பிய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பும் வசதியும் இதில் இருக்கின்றது.

Labels
மற்றைய மின்னஞ்சல் வழங்குநர்களின் Folders என்பதற்கு மாற்றீடாக கூகிள் அறிமுகப்படுத்தியதுதான் இந்த Label. பலர் Label இனை விட folder மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த இலகுவானதாக இருப்பதாக கூறினாலும் என்னை பொறுத்தவரையில் Label சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றேன்.

ஜிமெயிலில் இருக்கின்ற எனக்கு மிகவும் பயன்படுகின்ற மற்றுமொருவிடயம், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஒரே மின்னஞ்சலுள் சேமிக்கப்படல். இதில் இன்னமும் முக்கியமானவிடயம் என்னவெனில் இந்த மின்னஞ்சல் கலந்துரையாடலில் பலர் கலந்துகொண்டால் ஒவ்வொருவர் பெயரும் வெவ்வேறு நிறங்களில்; இலகுவாக பிரித்தறியக்கூடியவாறாக அமைந்திருத்தல். எனது அலுவலகம் சார் மின்னஞ்சல்களின்போது இந்த வசதி எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது.

பிழைதிருத்தம்
இந்த பிழைதிருத்த வசதி அனேகமான மின்னஞ்சல் சேவைகளில் இருந்தாலும் ஜிமெயிலின் பிழைதிருத்தியை பயன்படுத்தியவர்கள் அதன் இலகுத்தன்மையில் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுப்போவார்கள்.

கீழே குறிப்பிடுகின்ற இரண்டு வசதிகளும் கூகிளின் அனைத்து சேவைகளுக்கும் பொதுவானதாயினும் இந்த வசதிகளும் மிகவும் பயனுள்ள வசதிகளே. இவற்றை திரைவெட்டுகளை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


கடைசியா ஒரு விசயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. நீங்களாவது சொல்லுங்க.
ஏன் இது இன்னமும் அங்க இருக்கு???

28 கார்த்திகை, 2007

ஐபோன் உச்சத்தில்…

2007ம் ஆண்டிற்கான “PC Magazine” சர்வேயில் 10 இற்கு 9.1 புள்ளிகள் பெற்று ஐபோன் (iPhone) முதலிடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு வகையினை சார்ந்த கைப்பேசியும் கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படியான ஒரு புள்ளியினை பெற்றிருக்கவில்லை. ஐபோன் குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்த பாட்டு மற்றும் வீடியோ வசதிகளுக்கு 9.6 புள்ளிகளையும், பேச்சு தெளிவிற்கு 8.2 புள்ளியும் (இது சராசரியை விட அதிகமாகும்), கவரேஜ் இற்கு 8.2 புள்ளியும் பெற்றுள்ளது. பொதுவாக இந்த சர்வேயில் பங்குபற்றியவர்கள் அனைவரும் இந்த கைப்பேசியை தாங்கள் காதலிப்பதாகவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

26 கார்த்திகை, 2007

காரத்திகைத்தீபம் – யாழ்ப்பாணம்.

இண்டைக்கு கார்த்திகைத்தீபம். வழமையா யாழ்ப்பாணமே வெளிச்சக்காடாகிற ஒரு நிகழ்வு கார்த்திகைத்தீபம்தான். வழமையா வருசம் நிறைய வாற விசேடங்களுக்குள்ளேயே இண்டைவரைக்கும் எனக்கு பிடிச்சது கார்த்திகைதீபம்தான். ஏனென்ண்டா அண்டைக்குத்தான் இரவில வெளியால திரியலாம். வழமையான இரவு ஏழு மணிக்கு முதல் வீட்டுக்க வரவேணும் எண்டா அண்டைக்கு மட்டும் ஒம்பது மணி வரைக்கும் வரத்தேவையில்லை. (2002 வரைக்கும் கூடப்படிக்கிற பொம்பிளைப்பிள்ளையள் வீடுகளுக்கு எல்லாம் கூட்டமாய் போய் எங்கட வீர சாகசங்களை காட்டுறது, சில பிரச்சனை தந்த வாத்தியார் வீட்டு தீபத்துக்குள்ள உப்புபோடுறது வரைக்கும் செய்தனாங்கள், 2003க்கு பிறகு இந்த விளையாட்டுகள் ஒண்டும் இல்லை. – என்ன மாயா ஞாபகம் இருக்குதோ???) ஆனா கடைசியா 2005 இல யாழ்ப்பாணத்தை மோட்டச்சைக்கிளில ஒரு சுத்து சுத்தினதுதான் அதுக்கு பிறகு ஒண்டும் இல்லை.

2006 இல சரியான பிரச்சனை. பெரிசா ஒரு சனமும் தீபம் ஏத்தேல்ல. அத்தோட பஞ்சாங்க குழப்பம் வேற. கார்த்திகை தீபம் இண்டைக்கோ நாளைக்கோ எண்ட பிரச்சனையிலயே கொஞ்ச இடத்தை முதல்நாளும் வேற கொஞ்ச இடத்தை அடுத்தநாளும் தீபம் ஏத்துப்பட்டுது. அனேகமா எல்லாரும் வீட்டு படலைக்குள்ளயே தீபம் வச்சு ஏத்தினதில பெரிசா வீதிகள் ஒண்டும் களைகட்டேல்ல. இருந்தாலும் கோயில்களில பூசைகள் நடந்தது.

இந்தவருசம் பஞ்சாங்க குழப்பம் ஒண்டும் இல்லை. 9 மணிக்கு ஊரடங்கு எண்டாலும் 7 மணிக்கு பிறகு றோட்டில ஆக்கள் காணுறது கஸ்டம். ஒரு நாலுபேரா சேந்து ஒரு சுத்து சுத்துவம் எண்டு வெளிக்கிட்டு சுத்தி பாத்தம் (ஆறேகாலுக்கு வீட்ட திரும்பி வந்திட்டம்). சனம் ஐஞ்சு மணிக்கே ஏத்த ரெடி. வழமையா ரோட்டு நீட்டுக்கு பாக்க வடிவா இருக்கும். இந்த முறை அங்கயொண்டு இங்கயொண்டு எண்டு எரிஞ்சுது. டக்கெண்டு எத்தனை இருக்கு எண்டு எண்ணி சொல்லிப்போடலாம் எண்டளவுக்கு இருந்துது. பிறவுண்றோட், கஸ்தூரியார் றோட், கேகேஸ் றோட், அரசடி றோட் எல்லா றோட்டும் நீட்டுக்கு போய் பாத்தன். ஒரு நல்ல படம் எடுப்பம் எண்டு பாத்தா சரிவரவே இல்ல. கடைசியா கோயிலடியில வந்து எடுத்தபடம் கீழ. (கறண்ட் இல்லாததில படம் நல்லா இல்ல – இப்ப இரவில கொஞ்ச நேரம் கறண்டும் இல்ல)

25 கார்த்திகை, 2007