ஈழத்து நூல்கள்

இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

சரசோதி மாலை - சோதிட நூல்
செகராசசேகரமாலை – சோதிட நூல்
செகராசசேகரம் – வைத்திய நூல்
பரராசசேகரம் – வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் – கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் – சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் – காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் – இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு – கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை – கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் – வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் – தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு – ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு – கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை – கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் – கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் – சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் – ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது – காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை – பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் – விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் – கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் – வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை - சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி - சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி – வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை – கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு – பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி – இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு – கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி - சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.

இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)

24 கார்த்திகை, 2006

கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்

ஒரு திடீர் நிகழ்வை அல்லது ஒரு எதிர்பாராத சந்தர்பத்தை புகைப்படமாக்க கைப்பேசியிலுள்ள புகைப்படமெடுக்கும் வசதி சாதாரண புகைப்படக்கருவிகளை விட பயன்படுகின்றது. ஆனால் பொதுவாக கைப்பேசிகள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறந்தவையாக இருப்பதில்லை(Blur or washout error). ஒரு சிறந்த புகைப்படத்தினை கைப்பேசியை பயன்படுத்தி எடுக்க செய்யக்கூடிய வழிமுறைகளை பார்ப்போம்.

நீங்கள் எடுக்கின்ற நிகழ்வை அல்லது பொருளை புகைப்படத்தின் முழு சட்டத்திற்குள்ளும்(frame) கொண்டு வாருங்கள்.

குறிப்பிட்ட பொருளை அல்லது நிகழ்வை புகைப்படத்தில் மையப்படுத்தாது இடம் அல்லது வலப்பக்கமாக சிறிது விலகியிருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். இது எந்த புகைப்படக்கருவியால் புகைப்படம் எடுத்தாலும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய விடயமாகும்.

குறைந்த வெளிச்சத்தில் ஒருபோதும் புகைப்படம் எடுக்காதீர்கள். உங்கள் கைப்பேசி ஒரு பிளாஸ்(Flash) உடன் வந்திருந்தாலும் அது 2 அல்லது 3 அடிகளுக்குள் இருக்கும் பொருளுக்கே பயன்படும்.

நீங்கள் எடுக்கும் பொருளுக்கு பின்னால் ஒளிமுதல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களின் பின்னால் ஒளிமுதல் இருந்தால் அது ஒரு சிறந்த படத்தினை தரும்.

நீங்கள் எடுக்கும் பொருள் இருண்டோ வெளிறியோ(Dark or light) காணப்பட்டால் உடனடியாக பிரகாசத்தன்மையின் அளவினை(Brightness level) செப்பமிட்டுக்கொள்ளுங்கள்.

வெண்மை அளவினை(White balance) எப்பொழுதும் தானியங்கியாக(auto) விட்டுவிடுங்கள். உங்களுக்கு படமெடுப்பதற்கு சிறிது நேரம் இருக்குமாயின் நீங்களாகவே வெண்மையளவினை செப்பப்படுத்துங்கள். ஒரு வெள்ளைத்தாளை உங்கள் லென்சின் முன் பிடித்து அது வெண்மையாக அல்லது ஒரளவுக்கேனும் வெண்மையாகும் வரை வெண்மையளவினை செப்பப்படுத்திய பின் புகைப்படத்தை எடுங்கள்.

நீங்கள் கைப்பேசி மூலம் ஒரு சிறந்த புகைப்படத்தினை எடுக்க விரும்பினால் ஒருபோதும் உருப்பெருக்க வசதியை(zoom) பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒரு நல்ல புகைப்படத்தினை எடுத்தால் (கைப்பேசி மூலம்) எனக்கு அனுப்பி வையுங்கள் பதிவில் சேர்க்க…

23 கார்த்திகை, 2006

வானம்பாடி


கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

22 கார்த்திகை, 2006

கதிரைச் சிலேடை வெண்பா 17-20

நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங்
கற்பங் கடக்குங் கதிரையே – வெற்பரிந்தோன்
தூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்த
மாவியா கத்தன் மலை (18)

வெற்பு அரிந்தோன் – மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த – மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை – பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் – நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே – தாங் கற்கும் கல்விப்பயனை உலகியலிற் செலுத்தாது முருகனது திருவடிகளை நினைக்கும் மெய்யுணர்விலே செலுத்துங் கதிரைப்பதியே யாகும், அருள் நாடு சிவயோகியர் – திருவருளைத்தேடும் சிவ யோகியர்கள், கற்பங் கடக்குங் கதிரையே – தாய்வயிற்றிற் கருவாகி யுதிக்கும் பிறவிகளை கடக்குங் கதிரைப்பதியேயாகும்.

மாலேறு சோலை மலையலரும் வண்டுகளுங்
காலாறு காட்டுங் கதிரையே – சேலேவை
மாமடுவை வேலைமலை மானோக்கி யார்தழுவ
மாமடுவை வேலை மலை. (19)

சேல் ஏவை மாமடுவை வேலை மலை – சேல் மீனையும் அம்பையும் மாம்பிஞ்சையும் வேற்படையையும் பொருது வென்ற, மான் நோக்கியார் தழுவும் – மான்போலும் மருண்ட நோக்கமைந்த வள்ளி நாயகியாரும் தெய்வயானையாரும் தழுவியிருக்கின்ற, மா அடுவை வேல் ஐ மலை – மாமரத்தை வெட்டிய கூரிய வேலை ஏந்திய தலைவனது மலை, மால் ஏறு சோலை மலையருகு – மயக்க மிகுதியைத் தரும் இருண்ட சோலைகளை உடைய மலைச்சாரல்கள், கால் ஆறு காட்டு்ங் கதிரையே – சிற்றருவிகளை ஆங்காங்கு காட்டகின்ற கதிரைப்பதியேயாகும், வண்டுகள் – அங்குள்ள வண்டுகள், ஆறு கால் காட்டுங் கதிரையே – ஆறு கால்களைக் காட்டுங் கதிரைப்பதியாகும்.

துப்பிதழி யாரிடையுஞ் சூலுடையார் மென்னடையுங்
கைப்பிடியை யொக்குங் கதிரையே – செப்புமொழி
கண்டடக்குங் கோலம் பகப்பிடிசேர் கற்பகமென்
கண்டடக்குங் கோலனமர் காப்பு (20)

கண்டு அடக்குஞ் செப்புமொழி – கற்கண்டின் இனிமையை அடக்கிய மழலை மொழியாளாகிய வள்ளியம்மையாரும், கோல் அம்பகப் பிடி – அம்பையொத்த கண்களையுடைய பிடி நடையாளாகிய தெய்வயானை அம்மையாரும், சேர் கற்பகம் – இருமருங்குஞ் சேரநின்ற கற்பகதருப்போன்றவனும், என் கண் தடக்குங் கோலன் – எனது சிறிய புன் கண்கள் தனது பேரொளியைக் கண்டமையால் வேறொன்றையும் நோக்கலாற்றாது தடுமாறும் அழகிய திருக்கோலத்தை உடையவனுமாகிய முருகப்பெருமான், அமர் காப்பு – உறையுங் கோவில், துப்பு இதழியார் இடை – பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரது இடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே – கையின் ஒருபிடியளவை ஒத்துச் சிறுத்த கதிரைப் பதியேயாகும், சூல் உடையார் மென்னடை – கருப்பமுடைய மகளிரது தளர்ந்த நடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே – துதிக்கையுடைய பெண் யானையின் அசைந்த நடையை ஒத்திருக்கும் கதிரைப்பதியே யாகும்.

21 கார்த்திகை, 2006

என்றென்றும் பல்ஸ்தீன்

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக

மேன்மைமிகு
மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.

ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.

அது எழவே செய்யும்.

21 கார்த்திகை, 2006