Posts Tagged "யாழ்ப்பாணம்"

வரதர் ஐயாவின் புதிய முயற்சி

ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது.

அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். இன்றைய காலம் நிலைமை என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

29 கார்த்திகை, 2006

சுற்றுலாப் போனோம்

இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்

26 கார்த்திகை, 2006

ஈழத்து நூல்கள்

இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

சரசோதி மாலை – சோதிட நூல்
செகராசசேகரமாலை – சோதிட நூல்
செகராசசேகரம் – வைத்திய நூல்
பரராசசேகரம் – வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் – கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் – சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் – காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் – இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு – கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை – கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் – வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் – தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு – ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு – கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை – கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் – கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் – சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் – ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது – காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை – பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் – விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் – கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் – வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை – சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி – சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி – வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை – கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு – பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி – இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு – கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி – சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.

இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)

24 கார்த்திகை, 2006