அனுபவம்

எனது அனுபவங்களின் தொகுப்பு

பணம் பண்ணலாம் வாங்க..

புளொக்கரில் அல்லது இலவச வேர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள் தனித்தளம் ஒன்றிற்கு போகாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். (அதற்குரிய பணம் மிகச்சிறிதளவாக இருந்தாலும்- எதுக்குப்பா தேவையில்லா செலவு). நீங்கள் எந்த வகையில் இணையத்தளம் வைத்திருந்தாலும், அது இலவசமாகட்டும் உங்கள் சொந்தமானதாகட்டும் அதன் மூலம் சிறிதளவு பணமீட்டமுடிந்தால் அப்பணம் அதனை மேம்படுத்த பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.

முதலில் நான் Google Adsense இனை மட்டுமே விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தேன். மிக அதிகளவிலான வாசகர்களை கொண்ட இணையத்தளம் அல்லது வலைப்பதிவு ஒன்றிற்கே இது சிறப்பான விளம்பர முறையாகும். (இவங்களும் எனக்கு கொஞ்ச காசு இடக்கிட அனுப்புறாங்கள்) ஆனால் Text Link Ads எனப்படுகின்ற இந்த இணையத்தளம் மிகவும் வித்தியாசமான முறையில் விளம்பரங்களை செய்கிறது. இதன்மூலம் அவர்கள் தருகின்ற ஒரு தொடுப்பினை நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் வைத்திருந்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அதற்குரிய பணத்தை தருவார்கள். நீங்கள் அதிக பட்சமாக எட்டு தொடுப்புகளை வைத்திருக்க முடியும். ஒரு தொடுப்புக்கு குறைந்தது 5$ எனக்கொண்டால் உங்களால் மாதம் ஒன்றிற்கு 40$ சம்பாதிக்க முடியும். (குறைந்தது மாதம் 5$ உங்களால் சம்பாதிக்க முடியும் என என்னால் கூற முடியும்). ஒரு domine இன் விலை வருடத்திற்கு ஆகக் கூடுதலாக 10$ கள் தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

எனக்கு அவர்கள் அனுப்பும் காசோலையினை கீழே பாருங்கள்.




பிறகென்ன இங்க சொடுக்கி ஆரம்பியுங்கோ.

10 ஆவணி, 2007

நானும் கணினியும்

நான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் செலவாக தொடங்கியது. 2003 இல் (பாடசாலையின் இறுதிக்காலம்) நான் வாங்கிய மேசைக்கணினியுடன் (வின்டோஸ் எக்பி இயங்குதளத்துடன்) பகுதிநேர தொழிலாக கூட அது மாற்றமடைந்தது.

அத்தோடு எனது நோண்டிப்பார்த்தல் என்கின்ற விடயமும் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக கிராஸ் ஆகின்ற இயங்குதளம் என்கின்ற வகையிலேயே என்னால் வின்டோஸ் எக்பி பதிப்பினை அடையாளப்படுத்த முடிந்ததால் வேறு வேறு இயங்கு தளங்களை பரிசோதிக்க ஆரம்பித்தேன். முதலில் 2004 இன் இறுதியில் என்று நினைக்கின்றேன், மான்ரேக் லினிக்ஸினை (மான்ரேவ் என் பெயர் மாற்றப்பட முன்னர், அனேகமாக பதிப்பு 9 அக இருக்க வேண்டும்) பரிசோதிக்க ஆரம்பித்தேன். அதன் பயனாளர் இலகுத்தன்மையை கணிப்பதற்காக எனது நண்பர்கள் அனைவரினையும் அதனை நிறுவுமாறு கேட்டுக்கொண்டதோடு சிலரின் கணினியில் நானே நிறுவிவிடும் வேலையையும் பார்த்துக்கொண்டேன். (இதனால் நண்பர்களின் பிரத்தியேக கோப்புகள் பல அழிந்து போனதெல்லாம் வேறு விடயம்).

அப்போதய எனது கணினி அறிவு குறைவாயும் எனது கணினியின் தேவைகள் மான்ரேக் தருவதைவிட அதிகமாகவும் இருந்ததனால் அதனை விட்டு மீண்டும் வின்டோஸினையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இருந்தாலும் தமிழில இருந்த பின்னர் டேபியன் லின்டோஸ் (அப்போது லின்டோஸ், பிறகு தான் “லின்ஸ்பயர்” பெயர் மாத்தினவங்கள்) என்று தொடர்ந்த எனது நோண்டிப்பார்த்தால் உபுந்துவில வந்து நிக்கக்க 2007 தொடங்கீற்றுது.



இடையில நாட்டுப்பிரச்சனைகளால கொம்பியூட்டருக்கு கிட்டயே போகேலாமல் போன காலமும் உண்டு. என்னோட தேவைகளுக்கு உபுந்து போதுமானதா இருந்ததோட என்னால அதற்குரிய மென்பொருள்களையும் எடுத்துக்கொள்ளக் கூடியதா இருந்துது. ஆனா என்ர போதாத காலம் எண்டு அந்த நேரம் பாத்து விஸ்ரா வெளிவந்துது. ஏன் விடுவான் எண்டு அதை எடுத்து உடனேயே நிறுவினா திருப்பியும் பிடிச்சுது சனி. ஏகப்பட்ட கிராஸ் அத்தோட பழைய மென்பொருட்களோட அது காட்டின ஒத்திசைவு, முக்கியமா மென்பொருட்களின்ர உதவிப்பக்கங்களை பாக்கிறது எல்லாத்திலயும் பிரச்சனைதான். கணினிய மூடுறதுக்கு எடுக்கிற நேரத்தில வேற வேலையே பாக்கலாம் போல இருந்துது.

கடைசியா இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு முக்கியமா வின்டோசை விட்டுட்டு முதன்முறையா ஒரு மக்புக்(Macbook) வாங்கிட்டன். கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது. அதோட நானும் அதுக்கு பழக்கமாகிட்டன். (அலுவலக கணினியில கூட றைற் கிளிக் பண்ண ctrl பொத்தானை அழுத்திறன் எண்டா பாருங்கோவன். அது வின்டோஸ்). என்ர நண்பர் ஒருவர் கொழும்பில இருந்து தேவையான மென்பொருட்களை தரவிறக்கி அனுப்பியிருந்தார். இப்பதான் முதல்முதலா ஒரு பிரச்சனையில்லாத இயங்குதளத்தை பாவிக்கிறன் எண்ட எண்ணம் வந்திருக்குது. இதைப்பாத்திட்டு என்ர நண்பர்கள் சில பேரும் மக் இற்கு மாறுவமோ எண்டு யோசிக்கினம். வருகிற ஐப்பசியில சிறுத்தை உறுமும் எண்டு அப்பிள் நிறுவனம் அறிவிச்சிருக்கு. இப்பவே போதும் எண்டு இருக்கு. அதுவும் வரட்டும் பாப்பம்.

9 ஆவணி, 2007

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

27 ஆனி, 2007