அனுபவம்

எனது அனுபவங்களின் தொகுப்பு

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

27 ஆனி, 2007

சிக்கிண்குணியா

யாழ்ப்பாணத்தாக்கள் ஒருத்தரையும் விடுறேல்லை பார் எண்டு ஒரு பிடி பிடிச்சுக்கொண்டிருக்கு இந்த சிக்கிண்குணியா. மூண்டு நாளைக்கு முதல் மெதுவா குணங்குறிகள் தெரிஞ்சதுதான் எண்டாலும் பேசாம விட்டுட்டன். முந்தநாள் தொடங்கினது இப்பத்தான் விரலெண்டான்ன கொஞ்சம் வேலைசெய்யுது. எந்த வேலையெண்டாலும் கொஞ்சம் சிலோ மோசனிலதான் செய்யேலும். முதல் இரண்டு நாளும் சரியான தலையிடியும் காய்ச்சலும். அதுகள் குறைஞ்சவுடன இந்த நோவுகள் தொடங்கிச்சு பாருங்கோ பேசாம காய்ச்சலாவே கிடந்திருக்கலாம் போல இருக்கு.

யாழ்ப்பாணத்து சனத்தொகையில 90 வீதத்திற்கு குறையாதவர்கள் இந்நோயின் தாக்கத்துக்குள்ள அகப்பட்டிருக்கினம். ஒரு வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஏறத்தாள 65 இற்கு மேல்) இந்த நோய்த்தாக்கத்தால் தொடர்ச்சியாக காலமாகி வருகின்றார்கள். இப்படியே இந்த நோய் தொடருமானால் யாழ்ப்பாணத்தின் மூத்த சந்ததியின் நிலைமை என்னவாகும் என்பதற்கு எந்த பதிலும் இப்போது இங்கு யாரிடமும் இல்லை. இதற்கு மருத்துவர்கள் பனடோலையே பயன்படுத்த சொன்னாலும் பனடோல் பெறுவது என்பது யாழ்ப்பாணத்தில் குதிரைக்கொம்புதான்.

சரி அப்பிடியே வந்தனீங்கள் கீழ இருக்கிற இந்த வடிவான படங்களையும் பாத்திட்டு எனக்கு ஒரு பின்னூட்டமும் போட்டிட்டு போங்கோ.














25 மார்கழி, 2006

வரதர் ஐயாவின் புதிய முயற்சி

ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது.

அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். இன்றைய காலம் நிலைமை என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

29 கார்த்திகை, 2006