அனுபவம்

எனது அனுபவங்களின் தொகுப்பு

உமா ஜிப்ரான்

தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத பெயரென்றாலும் அழகான ஆக்ரோசமான பல கவிதைவரிகளுக்கு சொந்தக்காரர். ஈழத்திலிருப்பதை பெருமையாய் சொல்லும் வர்க்கத்தை சேர்ந்தவர். இவரது கவிதை ஒன்றை பாருங்கள். இது இம்சை எனும் பெயரில் காலச்சுவடு 19 வது இதழில் வெளிவந்தது.

ஆண்மை தெறிக்கும் தேகம்
விழுங்கும் முனைப்பில்
அலைந்து மேயும் விழிகளில்
இரைதேடும்
பசித்த புலியின் குரூர வசீகரம்

உரையாடலின் நடுவே
அடிக்கடி
நெருப்பை உமிழும் நெடுமூச்சு
அலையென எழுந்து தாழும் மார்பை
விழிகள் தெறிக்க
………………………… தொடந்து செல்கிறது கவிதை.

நீண்ட நாட்களாகவே இவரை எனக்கு பழக்கமாக இருந்தாலும் ஒரு இலக்கியவாதியாக அறிமுகமாகி சில நாட்களே ஆகின்றன.

அமைதியான பேச்சு, அழகான உருவத்திற்கு சொந்தக்காரர் உமாஜிப்ரான். பாலஸ்தீனத்து இலக்கியவாதி கலீல் ஜிப்ரான் இன் பாதிப்பு இந்த புனை பெயரென்றாலும் மீதி உமா யாரென்று தெரியவில்லை. காலச்சுவடு இதழ்கள் உட்பட சிறிய புத்தகச்சேகரிப்பு இவரிடம் உண்டு அவற்றிலிருந்து எனக்கு இப்போது புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்துவதில் பின்னடிக்கும் அவ்வாறான ஆசைகள் தனக்கும் இருந்ததை நினைவு கூருகினறார்.

எப்படியென்றாலும் இவரிடமிருந்து ஒரு கவிதை வாங்கி பதிவில சேக்கிறது எண்டு முடிவெடுத்திருக்கிறன் பாப்பம்.

3 கார்த்திகை, 2006

வரதர்

ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.

வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.

நான் கொழும்பால் யாழ்ப்பாணம் வந்ததும் என்னை பார்க்கவும் எனது சிறிய புத்தக தொகுதியை பார்க்கவும் வீட்டுக்கு வந்திருந்தார்.

தான் ஒரு கதை எழுத தொடங்கியிருப்பதாயும், தான் எழுதும் கையெழுத்து தனக்கே புரிவதில்லை எனவும் இதனால் ஒரே அத்தியாயத்தை மூன்று முறை திருப்பியெழுத வேண்டி இருந்ததாயும் குறைபட்டுக்கொண்டார்.

கடந்த வருடம் இதற்காகவே ஒரு மடிக்கணினி வாங்கி தமிழ் ரைப்பிங் பழகி கணினியில் எழுதத்தொடங்கியிருந்தவர் இப்போது அது பழுதடைந்து கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். அது எப்போது திரும்பி வரும் என்றும் பேசும்போது கவலைப்பட்டவாறு கூறினார். என்னுடைய சிறிய புத்தகச் சேர்க்கையிலிருக்கும் புத்தகங்களில் தன்வரலாறு கூறும் புத்தகங்களையும் உளவியல் புத்தகங்களையும் வாசிப்பதற்கு தருமாறு கேட்டவர் தான் வாசிக்கும் ஆர்வத்திலேயே வாசிப்பதாயும் வாசிப்பது இரண்டு நாட்களுக்கு மேல் ஞாபகம் நிற்பதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார்.

இத்தனை வயதிலும் தெளிவான பேச்சு , அறிந்து கொள்ளும் ஆர்வம், புத்தகங்கள் மீது தீராத காதல், எழுதுவதில் துடிப்போடு வியக்க வைக்கின்றார் வரதர் ஐயா.

30 ஐப்பசி, 2006

புத்தகக் கடைகள்

யாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. புத்தகங்கள் இல்லாம கஸ்டமாக் கிடக்கு. என்ர கணனியில வந்து இருந்தாச்சு தானே எனிமேல் கொஞ்சம் அடொப் பிளாஸ் பற்றியும் எழுதலாம் எண்டு நினைக்கிறன். முந்தி கொம்போனன்ற் எண்ட பெயரில கொஞ்சம் எழுதி வச்சிருந்தனான். அதுகளையும் எடுத்து விடலாம். இந்த பதிவுகளை மறுமோழியேக்க அரசியலை போராட்டத்தை சேத்துப்போடதையுங்கோ. அதுக்கும் என்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

16 ஐப்பசி, 2006