ஒக்டோபர் 2006 தீராநதியில் வாஸந்தியின் துரத்தும் இறந்தகாலம் அச்சுறுத்தும் நிகழ்காலம் கட்டுரை வாசித்தேன் . வாஸந்தியிடம் நான் ஒன்று கேட்க விரும்புகின்றேன் கேத்தீஸ் இலங்கைத்தமிழர்களுக்காக செய்த நன்மை ஒன்றையாவது உங்களால் சொல்ல முடியுமா?
இடதுசாரிக்கொள்கை கொண்ட கேத்தீசுக்கு ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக கூறுகின்றீர்களே. கட்டுரைக்கு உண்மைகள் தேவை வாஸந்தி ஆலாபனைகள் அல்ல.
கேத்தீசின் கொலைக்கு உங்களைப்போல் யாராவது இங்குள்ள இலங்கைத்தமிழர்கள் கவலைப்பட்டதாய் நீங்கள் காற்றுவாக்கிலேனும் கேள்விப்பட்டதுண்டா? சிங்களத் தலைவர்களுக்குத்தான் தாங்கொணாக் கவலை உங்ளைப்போல.
தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் போராட்டத்தின் நியாயமான காரணங்களையும் இப்போது ஆராய்வது வீண் எண்றும் ஆயுதப்போராட்டமாக மாறியதும் அதன் சுழி மாறிவிட்டதென்றும் கூறுகின்றீர்களே எத்தனை எத்தனை ஆயுதமேந்தாப்போராட்டங்கள் தமிழ் மண்ணில் நடந்ததென்றும், ஒருவன் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து மடிந்தான் என்றும் சிறைகளில் பலர் கொலையுண்டார்கள் என்றும் நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையா? அல்லது மறந்து விட்டீர்களா? அல்லது மறந்தது போலும் நடிக்கிறீர்களா?
தமிழ் பத்திரிகையாளர்களை எல்லாம் சாடுகிறீர்களே இந்து பத்திரிகை ராம் பற்றி நீங்கள் அறிந்திருப்பதில் ஏதாவது நியாயம் இல்லை என்று உங்களுக்கு தோன்றுகின்றதா வாஸந்தி?
அகதிகளாய் இந்தியாவிற்கு மக்கள் வருவதற்கு உங்கள் கட்டுரையில் இருப்பது போன்ற ஒரு காரணத்தினை எத்தனை நாள் யோசித்து கண்டுபிடித்தீர்களோ தெரியவில்லை. சும்மா என்றாலும் சுற்றுலாப்போல் போய் பார்த்து கதைத்து வாருங்கள் வாஸந்தி அவர்கள் பட்ட கஷ்டத்தை படும் கஷ்டத்தை.
தமிழர்கள் கண்ணியமாக, சுதந்திரமாக, ஜனாநாயக அமைப்பில் இலங்கை அரசுடன் சமாதானமாக வாழப்போராடிய நீலன் திருச்செல்வம். எப்பேர்ப்பட்ட பட்டம். இதை எழுதும்போது புனைகதை எழுதுகின்றேன் என்றா நினைத்துக்கொண்டு எழுதினீர்கள் வாஸந்தி?
ஒட்டுமொத்த சித்திரத்தையும் பார்க்க சொல்கிறீர்களே. உங்களுடைய ஒட்டுமொத்த சித்திரம் எதை குறிக்கும் என்று தயவு செய்து சொல்லுங்கள். எனக்கு மிகுந்த குழப்பாமாய் உள்ளது வாஸந்தி.
வாஸந்தி உங்களுக்கு ஒன்று சொல்லுகின்றேன். உங்களுக்கு தெரிந்தவைகளை மட்டும் எழுதுங்கள். கேத்தீசுடன் உங்கள் நட்பைப்பற்றி எழுதுங்கள். ஆனால் தமிழர் பிரச்சனையைப்பற்றி எழுதுவதை தமிழர் நலன் கருதி விட்டு விடுங்கள். அதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அனுபவித்தீர்களா? அல்லது உண்மையில் அனுபவித்தவர்களை கேட்டாவது பார்த்தீர்களா?
கால்மேல் கால் போட்டு காசுக்கு கதையெழுதும் உங்களுக்கெங்கே புரியப்போகின்றது எங்கள் வேதனைகைளும் வாழ்க்கைகளும்?
10 ஐப்பசி, 2006